அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், கோயில்பதாகை

அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், கோயில்பதாகை, அம்பத்தூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.

+91 99414 39788 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுந்தரராஜப்பெருமாள்

உற்சவர்

சுந்தரராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி

தாயார்

சுந்தரவல்லி

ஆகமம்

வைகானசம்

தீர்த்தம்

சேதா புஷ்கரணி

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

சேதாரண்ய க்ஷேத்திரம்

ஊர்

கோயில் பதாகை

மாவட்டம்

திருவள்ளூர்

மாநிலம்

தமிழ்நாடு

பெருமாள், தவம் செய்த பிருகு, மார்கண்டயே மகரிஷிகளுக்கு திருப்புல்லாணி (ராமநாதபுரம் மாவட்டம்), பூரி, திருமழிசை ஆகிய இடங்களில் காட்சி தந்தார். இவையெல்லாம் போதாதென்று அவர்கள் சேதாரண்ய க்ஷேத்திரம் ( தூய்மையான இடம்) என்ற இடத்தில் பூரண சேவை கிடைக்க வேண்டும் என்று 12 ஆண்டு காலம் தவம் செய்தனர். அதன்படி அழகான தோற்றத்தில் பெருமாள் பூரண சேவையளித்தார். அவர் அழகாக இருந்ததால், சுந்தரராஜபெருமாள் எனப்பட்டார். அந்த சேதாரண்ய க்ஷேத்திரம் தற்போது கோயில் பதாகை எனப்படுகிறது. பதாகை என்றால் வழி. இந்த ஊர் வழியாக மாசிலாமணீஸ்வரர் கோயிலுக்கு சோழமன்னன் ஒருவன் சென்று வருவானாம். அதனால் இவ்வூர் கோயில் பதாகை என்று பெயர் பெற்று விட்டது. 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் இது.

பெரும்பாலான பெருமாள் கோயில்களில் கருடாழ்வார் பெருமாள் எதிரே நின்ற நிலையில்தான் காட்சி தருவார். பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் கருடாழ்வார் தவம் செய்வது போல் அமர்ந்த நிலையில் பெருமாள் எதிரே உள்ளார். மாங்காடு காமாட்சியம்மன் ஊசி முனையில் தவம் செய்த போது, உலகம் பஸ்பமாகிவிடும் என்ற நிலை ஏற்பட்டது. அவளது உக்ரத்தைத் தணிக்கும் வகையில், ஆதிவைகுண்டவாசப்பெருமாள் சங்கு சக்கரத்தை பிரயோகம் செய்யும் வகையில் அருள்பாலிக்கிறார். அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, மார்க்கண்டேய மகரிஷி ஆகியோர் வீற்றிருக்கின்றனர். பெருமாளின் சக்கர வீச்சு தன்னையும் பதம்பார்த்து விடும் என்று அஞ்சியோ, அதற்கு குந்தகம் விளைவிக்காத வகையிலோ கருடாழ்வார் அமர்ந்து விட்டார் போலும்! இது தவிர நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார் கருவறையின் பின்பக்கம் உள்ளார். இந்தச் சிலை மிகப் பழமையானது. கருடனின் முகம் சற்று வித்தியாசமாக உள்ளது. இதுபோன்ற அபூர்வச் சிலைகளைப் பாதுகாப்பது அரசு மற்றும் பக்தர்களின் கடமை. இங்குள்ள தாயார் சுந்தரவல்லி எனப்படுகிறார்.

ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆஞ்சநேயர். நிகமாந்த வேதாந்த தேசிகர், மார்க்கண்டேய மகரிஷி ஆகியோர் சன்னதிகள் உள்ளன.

திருவிழா:

மார்கழியில் வைகுண்ட ஏகாதசி விழா.

கோரிக்கைகள்:

குழந்தை பாக்கியம் கிடைக்கவும், திருமணத்தடை நீங்கவும் இங்கு பிரார்த்திக்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுந்தரராஜப்பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் செய்தும், புது வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *