அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில், மன்னார்கோயில்
அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில், மன்னார்கோயில், திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4634 – 252 874 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
வேதநாராயணப்பெருமாள் |
உற்சவர் |
– |
|
ஸ்ரீ ராஜகோபாலர் |
தாயார் |
– |
|
ஸ்ரீ தேவி, பூதேவி |
தல விருட்சம் |
– |
|
பலா |
தீர்த்தம் |
– |
|
பிருகுதீர்த்தம் |
ஆகமம் |
– |
|
வைகானசம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் |
– |
|
வேதபுரி |
ஊர் |
– |
|
மன்னார்கோயில் |
மாவட்டம் |
– |
|
திருநெல்வேலி |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
தற்போது கோயில் அமைந்திருக்கும் பகுதியானது முன்பு பலா மரங்கள் நிறைந்திருந்த அடர் வனமாக இருந்தது. பெருமாளின் அடியார்களான பிருகு முனிவர் மற்றும் மார்க்கண்டேய முனிவர் ஆகியோர் அவரின் திருப்பாதம் பணிந்து பல இடங்களிலும் அவரைத் தரிசனம் செய்து வந்தனர். அவ்வாறு வந்த அவர்கள் இவ்வனப்பகுதிக்கு வந்து சுவாமியை நோக்கித் தவம் புரிந்து தமக்கு அருட்காட்சி தந்து அருள்புரியும்படி வேண்டினர். அவர்களின் தவவலிமையைக் கண்டு மகிழ்ந்த பெருமாள் அவர்களுக்கு இவ்விடத்தில் பிரசன்னமாகத் தோன்றி அருட்காட்சி தந்து அருள்புரிந்தார். இதனால், அகம் மகிழ்ந்த பிருகு மற்றும் மார்க்கண்டேய முனிவர்கள் தமது குரலுக்கு செவிசாய்த்து அருள்புரிந்தது போலவே இவ்விடத்தில் வீற்றிருந்து தன்னை நோக்கி வரும் பக்தர்களுக்கும் காட்சி தந்து அவர்களின் இல்வாழ்வு சிறக்கும்படியாக அருள்புரிய வேண்டும் என வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் இவ்விடத்தில் வேதங்கள் அருளும் வேதநாராயணனாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். பிற்காலத்தில், இப்பகுதியை ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பல்வேறு காலகட்டங்களில் இக்கோயிலை எடுத்துக்கட்டி சீரமைத்துள்ளனர்.
சேரநாட்டு திடவிரத மன்னரின் மகனாக அவதரித்த ஆழ்வார்களில் ஒருவரான குலசேகரர், பெருமாள் குடிகொண்டிருந்த பல தேசங்களுக்கும் சென்று அவ்விடங்களில் பெருமாளைத் தரிசனம் செய்து அவரது அருளைப்பெற்று வந்தார். அவ்வாறு, பயணம் செய்த அவர் இத்தலத்திற்கு வந்தபோது அரங்கநாதனாக காட்சி தந்த வேதநாராயணனின் கோலத்தில் கண்ணுற்று மயங்கினார். இதனால். பிற தலங்களுக்கு செல்வதை மறந்த அவர் இத்தலத்திலேயே தங்கி நாராயணனின் பாதத்தில் முக்தி பெற்றார். குலசேகர ஆழ்வார் முக்தி பெற்ற இத்தலத்தில் விபீஷ்ணாழ்வாரும் வந்து சுவாமியைத் தரிசனம் செய்து சென்றுள்ளார். இவ்வாறு, ஆழ்வார்களால் வணங்கப்பெற்ற பெருமை வாய்ந்த தலம். இத்தலத்தில் அருள்பாலிக்கும் பெருமாள் தெற்கே தாமிரபரணி, வடக்கே கடனாநதி ஓட, அதன் நடுவிலே சுற்றிலும் வேதங்கள் ஒலித்திட, மூலிகைகள் அடங்கிய சுதையால் செய்யப்பட்டவராக வீற்றிருக்கிறார். இங்குள்ள கருவறையில் பெருமாள் நின்ற கோலம், அவருக்கு மேல், அஷ்டாங்க விமானத்தின் முதல் அடுக்கில் வீற்றிருந்த கோலம், அதற்கு மேல் உள்ள அடுக்கில் சயனகோலம் என கருவறையிலும், அதற்கு மேலேயும் மூன்று கோலத்திலும் காட்சி தருவது பிற வைணவ ஆலயங்களில் இல்லாத சிறப்பாக உள்ளது.
வேதங்கள் ஒலிக்கும் இடமென்பதால் வேதபுரி என்றும் அழைக்கப்படும் இத்தலத்தில் அருள்புரியும் வீற்றிருந்த பெருமாளுக்கு நேர் எதிரே பிள்ளைத்தொண்டு ( தொண்டு – பாதை) எனும் சிறிய துளைபோன்ற பகுதி உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், வேதநாராயணனை மனமுருகி வேண்டிக்கொண்டு இத்தொண்டு வழியாக சென்று வர அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் அதிசயம் நிகழ்வதாக பக்தர்கள் பக்திப்பெருக்குடன் தெரிவிக்கின்றனர். விமானத்தில் சயன கோலத்தில் இருக்கும் சுவாமிக்கு முன் உள்ள மரமண்டபத்தில் மேற்கூறையில் 12 ராசிகளும் தத்ரூபமான முறையில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. சுண்ணாம்பு கருப்பட்டி கொண்டு கட்டப்பட்டு மிகவும் புராதனமான கோயிலாக உள்ள இங்கு வீற்றிருந்த பெருமானை சுற்றி யானைத்தொண்டு எனும் பிரகாரப்பாதையும், சயனத்தில் உள்ள பெருமானைச் சுற்றி பூனைத்தொண்டு எனும் மிகச்சிறிய பிரகாரமும் இருப்பதும், ஸ்ரீ ராஜகோபாலருக்கு அருகில் கருடாழ்வார் காட்சி தருவது பிற தலங்களில் இல்லாத சிறப்பாக உள்ளது. குலசேகர ஆழ்வார் முக்திபெற்ற தலமாதலால் அவருக்கு இங்கு சுவாமிக்கு முன்பு இடப்புறம் தனியே வெளிப்பிரகாரத்தில் கொடி மரத்துடன் கூடிய தனிச்சன்னதி உள்ளது.
சுற்றுப்பிரகாரத்தில் நரசிம்மர், வேதவல்லி, இராமானுஜர், மணவாளமாமுனி, புவனவல்லி ஆகியோரும் அருள்புரிகின்றனர்.
திருவிழா:
சித்திரை மற்றும் மாசியில் 10 நாள் பிரதானத்திருவிழா.
கோரிக்கைகள்:
வேதம் ஒலிக்கும் இடமென்பதால் கல்வி, கேள்விகளில் சிறக்க பிரதானமாக வேண்டப்படுகிறது. திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்க, குடும்பம், தொழில் சிறக்கவும் பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:
வேண்டிக்கொண்டசெயல்கள் நிறைவேறிட சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யலாம்.
Leave a Reply