அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், குன்னியூர்
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மன்னார்குடி, குன்னியூர் – தஞ்சாவூர் மாவட்டம் .
********************************************************************************************************
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை திறந்திருக்கும்.
மதுவன சேத்திரம் என்று அழைக்கப்படும் மன்னார்குடி நகரின் கீழ்திசையில் அகத்திய நதியின் வடக்கிலும், அரிச்சந்திரா நதியின் தெற்கிலும் கன்னிபுரி என்ற கிராமம் இருக்கிறது. இப்போது இவ்வூர் குன்னியூர் எனப்படுகிறது.
இங்கே “சீதளா பரமேசுவரி” என்ற பெயரில் காமாட்சியம்மன் குடிகொண்டிருக்கிறாள். “காம” என்ற சொல்லுக்கு “அன்பு” எனப் பொருள். “அக்ஷி” என்ற சொல்லுக்கு கண் என்று பொருள். “அன்பு பொங்கும் கண்களை உடையவள்” என்று காமாட்சிக்குப் பொருள் கொள்ளலாம்.
மற்றொரு பொருளின் படி “கா” என்ற எழுத்திற்கு “சரசுவதி” எனப் பொருள். “மா” என்ற சொல்லுக்கு “மகாலட்சுமி” என்று பொருள். இருவரையும் தங்கள் கண்களாகக் கொண்டவள் காமாட்சி. இது சங்கராச்சாரியார் வாக்கு.
இந்த கோயிலில் உள்ள காமாட்சி விக்கிரகம் மிகவும் சிறியது. 200 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக தோன்றியது. இங்கு அம்மன் வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். ஆரம்பத்தில் கீற்றுக் கொட்டகையே இருந்தது. பின்பு பெரிய கோயிலாக கட்டப்பட்டது.
சிறப்பம்சம்: இங்குள்ள அம்மன் பூமியில் இருந்த தானாக தோன்றியவள் என்பதால், மக்கள் கோயில் அருகே செல்லும் போது வேகமாக அதிர்ந்துகூட நடக்க மாட்டார்கள். மிகமிக மெதுவாக அடிமேலடி வைத்து நடந்து செல்வார்கள்.
பச்சை போடுதல்:
“பச்சை போடுதல்” என்பது இங்கு பெரிய பிரார்த்தனை. அதாவது, யாராவது ஒருவர் வீட்டில் ஒரு மங்கல நிகழ்ச்சி நடந்தால் அம்பாளுக்கு அதிகாலையில் விசேட அபிசேகம், லலிதா சகஸ்ர நாமபூஜை நடக்கும். இரவில் அம்பாளை படிச்சட்டத்தில் வைத்து அலங்காரத்துடன் மங்கல நிகழ்ச்சி நடக்கும் வீட்டிற்கு எடுத்து வருவார்கள்.
அம்பாளின் முன்பு ஆறு மரக்கால் அரிசியை பரப்பி தேங்காய், பழவகைகள், காய்கறிகள் வெற்றிலை, பாக்கு பூ வைத்து நைய்வேத்தியம் செய்வார்கள். கிராம தேவதை காத்தவராயனின் பிரதிநிதியாக கோயில் பூசாரி சுக்குமாந்தடி எனப்படும் மரக்கட்டை ஒன்றை எடுத்து வருவார். இது அனுமானின் கையில் உள்ள கதாயுதம் போல தலைபாகம் உருண்டையாக செய்யப்பட்டிருக்கும்.
இந்த மரக்கட்டைக்கும் பழம், பூ, வேப்பிலை கொத்து, இளநீர், தென்னம்பாளை குருத்து, சுருட்டு, புகையிலை ஆகியவை படைக்கப்படும். இதற்குப் “பள்ளயம் போடுதல்” என்று பெயர். இதன் பிறகு உடுக்கு அடிக்கப்பட்டு அருள்வாக்கு சொல்லப்படும். தற்போது வீடுகளுக்கு அம்மன் வருவது நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு பதிலாக மங்கல நிகழ்ச்சி நடக்கும் வீட்டார் கோயிலுக்குச் சென்று பச்சை போடுதல் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
சித்திரை மாதத்தில் இங்கு தீமிதி விழா நடக்கிறது. அம்மனை குடத்து நீரில் ஆவாகனம் செய்து அந்த குடத்தைத் தலையில் சுமந்து கொண்டு பூசாரியும், பக்தர்களும் தீயின் மீது நடப்பார்கள்.
கோரிக்கைகள்:
திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க வேண்டுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு அபிசேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
Leave a Reply