அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், வெள்ளூர்
அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், வெள்ளூர், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம்.
+91 94437 80719 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
திருக்காமேஸ்வரர் |
தாயார் |
– |
|
சிவகாமசுந்தரி |
தல விருட்சம் |
– |
|
வில்வமரம் |
தீர்த்தம் |
– |
|
ஐஸ்வர்ய தீர்த்தம் |
பழமை |
– |
|
1000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் |
– |
|
வில்வாரண்ய க்ஷேத்திரம் |
ஊர் |
– |
|
வெள்ளூர் |
மாவட்டம் |
– |
|
திருச்சி |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
தட்சன் யாகம் நடத்திய கதை எல்லோருக்கும் தெரியும். ஈசனை விடத் தானே உயர்ந்தவன் என்கிற செருக்கு கொண்டு பிரமாண்டமான ஒரு யாகத்தை நடத்தினான் தட்சன். அவனது மாப்பிள்ளையான அதாவது தட்சனின் மகளான தாட்சாயினியின் துணைவர் சிவபெருமானுக்கு இந்த யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு இல்லை. ஆனாலும், தந்தை நடத்தும் யாகத்தில் மகள் கலந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? பாசம் விரட்டியது. எனவே, அழைப்பு இல்லாமலே அங்கு போய் அவமானப்பட்டுத் திரும்பினாள் பராசக்தி. கூடவே, தந்தைக்கு சாபமும் கொடுத்து விட்டு வந்தாள். தன் அனுமதி இல்லாமல் சென்றதால், உமையை நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார் ஈசன். தவறை உணர்ந்த தேவி, மீண்டும் ஈசனுடன் இணைந்து கயிலையில் வசிக்க விரும்பினாள். “பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து என்னை வழிபடு. உரிய நேரம் வரும்போது உன் விருப்பம் நிறைவேறும்” என்று அருளினார் சிவபெருமான். அதன்படி பர்வதராஜனின் மகளாக அவதரித்த அன்னை, பார்வதி என்ற திருநாமம் பூண்டு பர்வதமலையில் தவம் புரியலானாள். இறைவனும் இறைவியும் பிரிந்து இருந்தால், உலக சிருஷ்டி எவ்வாறு நிகழும்? பிரபஞ்சம் பரந்து விரிய வேண்டாமா? சக்தியும் சிவனும் சேர்ந்தால்தானே இது சாத்தியம். இதற்காக பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். சின்முத்திரை காட்டி யோக நிலையில் இருக்கும் ஈசனுக்கு காமத்தின் மீது எப்படி நாட்டம் வரும்? காம பாணம் ஈசன் மேல் விழுந்தால்தானே அவருக்கு சக்தியின் நினைவு வரும்? இதற்காக அனைவரும் மன்மதனை அணுகினர். ஆனால், மன்மதன் சம்மதிக்கவில்லை. காமபாணத்தை எனக்கு அருளியவரே எம்பெருமான்தான். இதை அவர் மேல் நான் எய்வது எனக்கு நானே அழிவைத் தேடிக் கொள்ளும் முடிவாகும் என்று மறுத்தான். தேவலோகமே ஒன்று திரண்டு சாபம் விட்டது மன்மதனுக்கு. அதன் பின் வேறு வழியின்றி, பல மைல் தொலைவில் உள்ள ஒரு புன்னை மரத்தடியில் ஒளிந்து கொண்டு ஈசனைக் குறி பார்த்து காம பாணம் எய்யத் தயாரானான். நடந்ததையும், நடக்கப் போவதையும் அறியாதவரா ஈசன்? வில்லில் இருந்து பாணம் வெளிப்பட்ட நேரத்திலேயே தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்துப் பொசுக்கினார். விளைவு – பாணம் திசைமாறி பார்வதியின் மேல் விழுந்தது. தவம் கலைந்தது. தன் அவதார நோக்கம் உணரப் பெற்றாள் தேவி. சிவனை அடைவதற்கான காம பாணம் தன் மேல் விழுந்ததால், சிவகாம சுந்தரி ஆகி, ஈசனுடன் கூடினாள். எனவேதான் இங்குள்ள ஈசன் திருக்காமேஸ்வரராகவும், தேவி சிவகாம சுந்தரியாகவும் நமக்குக் காட்சி தருகிறார்கள்.
இந்த நிகழ்வை சித்திரிக்கும் புடைப்புச் சிற்பம் இந்த ஆலயத்தில் காணப்படுகிறது. சிவபெருமானை நோக்கி காமக் கணை விடும் மன்மதனின் சிற்பம் நம்மைக் கவர்கிறது. மன்மதனின் இழப்பை அவன் மனைவியான இரதிதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இழந்த கணவனை திரும்ப வேண்டி ஈசனிடம் மண்டியிட்டாள். அதே வேளையில் மன்மதன் இல்லாததால், ஜீவ ராசிகளிடம் காதல் உணர்வு பெருகவில்லை. உயிர்ப் பெருக்கம் நிகழவில்லை. எனவே, மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து இரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு கொணர்ந்தார். அதோடு, மன்மத மதன களிப்பு மருந்து எனும் மருத்துவ முறையை மன்மதனுக்குக் கற்பித்தார். இங்கு மருந்து, சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளில் நூறு பாடல்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மருத்துவ முறைகளை மன்மதனுக்கு எடுத்துரைத்ததால் திருக்காமேஸ்வரருக்கு வைத்தியநாதர் என்றொரு திருநாமமும் உண்டு.
திருப்பாற்கடல் கடைந்த நிகழ்வின்போது அமுதம் பெறுவதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போட்டி வந்தது. அசுரர்களுக்கு அமுதம் போகாமல் இருப்பதற்காக திருமாலானவர் மோகினி வடிவெடுத்து, தேவர்களுக்கு மட்டுமே அமுதத்தை வழங்கினார். அந்த வேளையில் மோகினியைப் பார்த்து சிவபெருமானே மோகித்ததால் ஐயப்பன் அவதரித்தார். இந்த நிகழ்வை அறிந்த மகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி கோபம் கொண்டு வைகுந்தத்தை விட்டே வெளியேறினாள். தன் கோபத்துக்குக் காரணமான சிவனிடம் நியாயம் கேட்பதற்காக அவரை அழைத்தாள். ஆனால், ஈசன் அங்கே வராததால் பூலோகத்துக்கு வந்து வில்வாரண்ய க்ஷேத்திரம் எனப்படும் வெள்ளூருக்கு வந்து ஈசனைக் குறித்து தவம் செய்யலானாள். இப்போதும் இறைவன் அவளுக்குக் காட்சி தரவில்லை. எனவே, தன்னையே ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ மழையாகப் பொழிந்து ஈசனை பூஜை செய்தாள். அதன் பின் ஈசன் அவள் முன் தோன்றி, ஐயப்பன் அவதார நோக்கத்தைக் கூறி, கோபத்தை தணித்து சாந்தமாக்கினார். மகாவிஷ்ணுவுடன் லட்சுமிதேவியை இணைத்து வைத்தார். வில்வ மரமாகத் தோன்றி, தன்னை அர்ச்சித்த காரணத்தால் ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமிதேவிக்கு அளித்து, ஐஸ்வர்யத்துக்கே அதிபதி ஆக்கினார். வேறெங்கும் காண இயலாத வகையில் தட்சிண பாகம் என்று சொல்லக் கூடிய வடமேற்குப் பகுதியில் மகாலட்சுமி இருக்க வேண்டிய ஸ்தானத்தில் வில்வ மரமும், அதன் நிழலில் ஐஸ்வர்ய மகுடம் தரித்த மகாலட்சுமியையும் இங்கே தரிசிக்க முடிகிறது. அபயம், வரதம் கூடிய திருக்கரங்களோடு மேலிரு கரங்களில் தாமரை மலர் கொண்டு காட்சி தருகிறாள் இவள். ஈசனை பூஜிக்க மகாலட்சுமி பயன்படுத்திய தீர்த்தம் ஐஸ்வர்ய தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வ மரத்துக்கே முதலில் பூஜை செய்கிறார்கள். வில்வாரண்யேஸ்வரர், ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்றெல்லாம் ஈசனுக்கு வேறு திருநாமங்கள் உண்டு. சுக்ரன் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியான தலம்.
முசுகுந்தனுக்கு சக்கரவர்த்தி பதவியையும், வாளாசுரனை வெல்லக்கூடிய ஆயுதங்களையும் கொடுத்து கால பைரவர் படைத்தளபதியாகச் சென்று முசுகுந்தனுக்கு வெற்றியைக் கொடுத்த தலம். ஆகவே, இவ்வூர் வெல்லூர் எனப்பெயர் பெற்றது. வலனை அழிக்கப் புறப்பட்ட முசுகுந்தனுக்குத் தளபதியாக வந்து அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் கிழக்கு நுழைவாயில் அருகே தரிசிக்க முடிகிறது.
போகர் ஏழாயிரம் எனும் நூலில் திருக்காமேஸ்வரர், திருச்சன்னதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்து அதில் அமர்ந்து தவம் செய்வதாகவும், சித்தர்கள் அனைவரும் எங்கு சென்று தவம் செய்தாலும், சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வர் சன்னதியில் அமர்ந்து தவம் செய்தால் சித்தி ஆகும் என்பதால், போகர், பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி ஆகியோர் தலைமையில் கோயிலைச் சூழ்ந்து சித்தர்கள் குழுமமே தவம் செய்வதாகவும், வெள்ளூர் திருக்காமேஸ்வரப் பெருமானிடம் போகர் சிவபோகச் சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பின்னரே பழனியில் நவபாஷாண ஞான தண்டாயுதபாணி விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்ததாக போகர் ஏழாயிரத்தில் குறிப்பிட்டுள்ளது வியக்கத்தக்கதாகும். இன்னும் திருக்காமேஸ்வரர் ஆலயத்தின் முன் மகா மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச்சக்கரத்தை தரிசனம் செய்யலாம். ஆலயத்தின் ஈசான பாகத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் சிவலிங்க வடிவமாக போகர் காட்சி தருகிறார். அரூபமாக இன்னும் எண்ணற்ற பல சித்தர்கள் தவம் செய்வதாக அகஸ்த்தியர் நாடியிலும், விசிஷ்ட நாடியிலும், காகபுஜண்டர் நாடியிலும் காணப்படுவது சிறப்பானதாகும். சித்தர்களுக்கே எங்கு சென்றும் சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வரர் சன்னதியில் சித்தியாகும் என்பதால் மனிதர்களாகிய நாம் நினைக்கும் காரியம் சித்தியாக திருக்காமேஸ்வரர் சன்னதியில் தவம் செய்வது சிறப்பு.
மன்மதன் திருக்காமேஸ்வர பெருமானிடம் காமபானத்தைப் பெற்று அதை உயிரினங்களின் மேல் எவ்வாறு செயல்படுத்துவது என்ற விகிதாச்சாரம் தெரியாமல் திகைத்தார். உடனே பைரவரை தியானித்து பைரவர் பாதங்களில் காமபானத்தினால் மலர்மாரி பொழிந்து வழிபட்டார். பைரவர் மகிழ்ந்து ஆவுடையார் மேல் நின்று ஞான பைரவராக காட்சித்தந்து காமபானத்தை எந்தெந்த உயிர்களுக்கு எந்தெந்த விகிதத்தில் செயல்படுத்த வேண்டுமென்ற ஞானத்தை மன்மதனுக்குக் கொடுத்து ஞானபைரவராக தற்போது காட்சி தருகின்றார். எனவே கல்வியில் சிறந்து விளங்க நினைக்கும் மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமை 4.30 மணி முதல் 6.00 மணி வரை இராகுகால நேரத்தில் 16 மிளகு தீபம் ஏற்றி செவ்வரளி மாலை அணிவித்து ஞானபைரவரை வழிபட்டால் ஞான அபிவிருத்தி ஏற்படும்.
இவ்வாலயமானது கி.பி. ஆறாம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழனால் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது என்றுதான் ஆலயக்கல்வெட்டு கூறுகின்றது. ஆலயத்திற்கு தெற்கு வாசல், கிழக்கு வாசல் என்று இரு நுழைவாயில்கள் உள்ளன. பலிபீடம், நந்திதேவர், திருமாளிகைப்பத்தியுடன் கூடிய பிராகாரம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை ஆகிய தெய்வங்கள் உள்ளன. விநாயகர், வள்ளி–தெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் போன்ற சன்னதிகள் அமைந்துள்ளன. தல புராணத்தைச் சொல்லும் முசுகுந்தனின் சிவ வழிபாடு, இரதியும் மன்மதனும் இணைந்து ஈசனை வணங்கும் கோலம் போன்றவை சிற்பமாகக் காணப்படுகின்றன. இத்தல சிவனை மகாலட்சுமி பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பது சிறப்பு. வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் அலைமகளாம் ஐஸ்வர்ய மஹாலட்சுமி அற்புத திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றாள்.
திருவிழா:
பிரதோஷம், சிவராத்திரி.
கோரிக்கைகள்:
தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கும், போகத்திற்கு அதிபதியான சுக்ரன் ஜாதகத்தில் சரியாக இல்லையெனில் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் காரியத்தடையும், மனக்குழப்பமும், பொருளாதார வீழ்ச்சியையும், திருமணத் தடையும், குழந்தையின்மையும், வியாபார வீழ்ச்சியையும் ஏற்படுத்துவார். எனவே, சுக்கிரதோஷம் நீங்கிட சுக்கிரனுக்கு அதிபதியான மஹாலக்ஷ்மியை சுக்ர ஹோரையில் இங்கு வந்து ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம். திருமணம் நல்லபடியாக நடப்பதற்கு ஜாதகம் வைத்துப் பிரார்த்தனை செய்கிறார்கள். குழந்தை பாக்கியத்திற்கும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. இழந்த தன் கணவனை இரதிதேவி திரும்பப் பெற்ற திருத்தலம் என்பதால் தம்பதியர் இங்கே வந்து வணங்கினால் ஒற்றுமை மேலோங்கும். மாங்கல்ய பலம், திருமணத் தடை, ஐஸ்வர்ய யோகம், பிரிந்த தம்பதியர் இணைவதற்கு என்று மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.
நேர்த்திக்கடன்:
சுக்கிரவாரமான வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையான, விடியற்காலை 6 முதல் 7 மணிக்குள் 16 வகையான அபிஷேகம் செய்து 16 நெய்தீபம் ஏற்றி, 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, வில்வமரத்தோடு சேர்த்து 16 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி, வாழ்வில் ஐஸ்வர்யம் பெருகி சந்தோஷமாக வாழலாம். அத்துடன் இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply