அருள்மிகு இராமசாமி திருக்கோயில், கும்பகோணம்

அருள்மிகு இராமசாமி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

இராமசாமி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கும்பகோணம்

மாவட்டம்

தஞ்சாவூர்

மாநிலம்

தமிழ்நாடு

அயோத்தி மன்னர் தசரதருக்கு நீண்ட நாட்களாக புத்திரப்பேறு இல்லை. தன் குலகுரு வசிஷ்டரின் ஆலோசனையின் பேரில் அவர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அதன் பலனாக விஷ்ணுவே அவருக்கு குழந்தையாக அவதரித்தார். சித்திரை புனர்பூசம் நட்சத்திரம் நவமி திதி அவரது பிறந்த நாளாகும். தசரதரின் முதல் மனைவி கவுசல்யா அந்த தெய்வ மகனைப் பெற்ற புண்ணியவதி. இதையடுத்து விஷ்ணுவின் கையிலுள்ள சக்கரம் பூமிக்கு வர ஆசைப்பட்டது. அது பரதன் என்ற பெயரில், இராமன் பிறந்த மறுநாள் பூசம் நட்சத்திரத்தில், இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில் அவதரித்தது. விஷ்ணு பூமிக்கு வந்த போது அவருடன் ஆதிசேஷனும் வருவேன் என அடம் பிடித்தது. தன்னை தினமும் தாங்கித் தூங்க வைக்கும் சேவை புரிந்த சேஷனின் சேவையைப் பாராட்டி, விஷ்ணு அதை தன் தம்பியாக ஏற்றார். மூன்றாவது மனைவி சுமித்திரைக்கு இராமன் பிறந்த மூன்றாம் நாள் ஆயில்ய நட்சத்திரத்தில் அக்குழந்தை பிறந்தது. அதே நாளில் சுமித்திரையின் வயிற்றில் சத்ருக்கனன், விஷ்ணுவின் கையிலுள்ள சங்கின் அவதாரமாக அவதரித்தார். இவர்களில் இலட்சுமணன் இராமனை மிகவும் நேசித்தார். குழந்தையாக இருந்த போது இவர் நான்காம் தொட்டிலில் கிடந்தார். இராமன் முதல் தொட்டிலில் படுத்திருந்தார். இலட்சுமணக் குழந்தை அழுதது. எவ்வளவோ ஆறுதல்படுத்தியும் முடியவில்லை. அதன் கண்கள் இராமனின் தொட்டிலை நோக்கி திரும்பியிருந்ததைக் கண்ட வசிஷ்டர், ஒரே தொட்டிலில் இரண்டு குழந்தைகளையும் படுக்க வைத்தார். இராமனைத் தன் மீது தூக்கிப் போட்டுக் கொண்ட அக்குழந்தை அழுகையை நிறுத்தியது. அந்த அளவுக்கு பாசமாக இருந்தனர் இராம சகோதரர்கள். இராமன் காட்டுக்கு போன வேளையில், அதற்கு காரணமான தன் தாயை நிந்தனை செய்தவர் பரதன். மேலும், அண்ணனுக்கு பதிலாக தற்காலிக ஆட்சி நடத்திய போது, அவரது பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து மரியாதை செய்து வந்தார். சத்ருக்கனன் தன் அண்ணன் இராமன் மீது கொண்டிருந்த அன்பிற்கு ஈடு இணை சொல்லமுடியாது. அண்ணன் காட்டில் இருந்த போது, அங்கிருந்து தன்னால் நகர முடியாது என அந்த குட்டித்தம்பி அடம் பிடித்தார். இராமனின் ஆறுதலின் பேரிலேயே ஊர் திரும்பினான். ஒருமித்த சகோதரர்களுக்கு, ஒருமித்த சகோதரிகள் மணவாட்டிகளாக அமைந்தனர். இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் உடன் பிறந்த சகோதரிகளான சீதையும், ஊர்மிளாவும் மனைவி ஆயினர். பரத சத்ருக்கனருக்கு ஜனக மன்னரின் தம்பி குசத்வஜனின் புத்திரிகளான மாண்டவியும், சுருதகீர்த்தியும் மனைவியாயினர். பல கஷ்டங்களை அனுபவித்தாலும், ஆசை வார்த்தைகள் காட்டினாலும் இந்த அன்புச் சகோதரர்களை யாராலும் பிரிக்க இயலவில்லை. பட்டாபிஷேக நாளன்று தன் தம்பிகளுடனும், எவ்வித எதிர்பார்ப்புமின்றி தனக்கு சேவை செய்த அனுமானுடனும், காட்டில் தன்னோடு கஷ்டப்பட்ட மனைவி சீதையுடனும் கொலு வீற்றிருந்தார். அயோத்தியில் மட்டுமே உள்ள இக்காட்சியை தென்னக மக்களும் காண வேண்டும் என தெற்கிலிருந்து பட்டாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்ற மன்னர்கள், தீர்த்த நகரும், புனித இடமும் ஆன கும்பகோணத்தில் இக் காட்சியை வடிவமைத்தனர்.

அயோத்தியில் சீதாராமர் பட்டாபிஷேக கோலத்தில் இருப்பர். இங்கே இருவரும் திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றனர். திருமணத் தடையுள்ள ஆண், பெண்கள் இக்காட்சி கண்டால் தடை நீங்கி, என்றும் தியாக மனப்பான்மையுள்ள வாழ்க்கைத் துணையைப் பெறுவர். அது மட்டுமல்ல, ஒரே ஆசனத்தில் இராமனும் சீதையும் அமர்ந்திருப்பர். மற்ற கோயில்களில் இராமர், சீதையை தனித்தனி ஆசனத்தில் தான் காண முடியும். இராமனின் இடதுபுறம் சத்ருக்கனன், வலதுபுறம் பரதன் மற்றும் அனுமானைக் காணலாம். இலட்சுமணன் வழக்கம் போல் வில்லுடன் இருக்கிறார்.

அனுமானைக் கதாயுதத்துடன்தான் எங்கும் காண முடியும். இங்கோ அனுமான் தனது போர்க்குணத்தையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, இராமனின் காது குளிர வீணாகானம் மீட்டிக் கொண்டிருக்கிறார். கல்வியில் வல்லவரான அனுமான், இசையிலும் வல்லவர் என்பதை நிரூபிக்கும் வகையில் இக்காட்சி உள்ளது. மற்றொரு கையில் இராமாயண காவியத்தை வைத்துள்ளார். இராமாயணத்தை வீணை மீட்டி பாடுவதாக ஐதீகம். ஜெகம் புகழும் புண்ணியக் கதையான இராமாயணத்தை ஆஞ்சநேயர் இங்கே பாடி மகிழும் காட்சியை கண் குளிரக் காணலாம். பரதன் இராமனுக்கு குடை பிடிக்க, சத்ருக்கனன் சாமரம் வீச நிற்கும் காட்சிகள் அற்புதத்திலும் அற்புதம். இராம பக்தர்களின் உடலைப் புல்லரிக்க வைக்கும் காட்சிகள் நிறைந்த அரிய கோயில் இது.

இராமனுக்கு தனிக்கோயில் பல ஊர்களில் இருக்கிறது. பரதனுக்கு தனிக்கோயில் கேரள மாநிலம் இரிஞ்ஞாலக்குடாவில் உள்ளது. ஆனால், இராம சகோதரர்கள் நால்வரும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி, சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம், கும்பகோணம் ஆகிய இடங்களில் சேர்ந்து காட்சி தருகின்றனர். இதில் கும்பகோணம் இராமசுவாமி கோயிலும்ஒன்று.

கோஷ்டத்தில் (சுற்றுச்சுவரில்) விநாயகரும், பூவராகசுவாமியும் உள்ளனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் சன்னதியும் இங்கு உள்ளது. இராமாயண காட்சிகள் மூலிகையால் வரையப்பட்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு ரகுநாத நாயக்கர் என்ற மன்னர் இக்கோயிலைக் கட்டினார்.

திருவிழா:

இராமநவமியன்று இங்கு விசேஷ பூஜைகள் உண்டு. மாசிமகத்தன்று இராமனும், சீதையும் மகாமக குளத்தில் எழுந்தருளி தீர்த்தம் வழங்குவர்.

கோரிக்கைகள்:

திருமணத் தடையுள்ள ஆண், பெண்கள் இக்காட்சி கண்டால் தடை நீங்கி, என்றும் தியாக மனப்பான்மையுள்ள வாழ்க்கைத் துணையைப் பெறுவர்.

நேர்த்திக்கடன்:

இராமருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *