அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) திருக்கோயில், கீழப்பூங்குடி

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) திருக்கோயில், கீழப்பூங்குடி, சிவகங்கை மாவட்டம்.

+91 99436 59071, 99466 59072 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பிரம்மபுரீஸ்வரர் (சுந்தரேஸ்வரர்)

தாயார்

பிரம்மவித்யாம்பிகை (மீனாட்சி)

தல விருட்சம்

கடம்ப மரம்

தீர்த்தம்

பிரம்ம தீர்த்தம்

ஆகமம்

சிவாகமம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கீழப்பூங்குடி

மாவட்டம்

சிவகங்கை

மாநிலம்

தமிழ்நாடு

புராணங்கள் சொல்வதன்படி, சிவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. இதே போல, பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. மேலும், படைக்கும் தொழிலையும் செய்ததால், சிவனை விட தானே உயர்ந்தவர் என கருதினார். இதனால், சிவன் அவரது ஒரு தலையைக் கொய்தார். சிவபாவத்திற்கு ஆளான பிரம்மா, தவறுக்கு மன்னிப்பு கிடைக்க பல தலங்களில் சிவபூஜை செய்தார். அவ்வாறு பூஜித்த தலங்களில் இதுவும் ஒன்று. பிரம்மாவிற்கு அருளியதால் சிவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்ம வித்யாம்பிகை எனப்பட்டாள். பூங்குடியாள் என்றும் பெயருண்டு. இக்கோயில் காலப்போக்கில் அழிந்து விட்டது. அதன்பின் புதிதாக கோயில் எழுப்பப்பட்டது. சிவனுக்கு சுந்தரேஸ்வரர் என்றும், அம்பிகைக்கு மீனாட்சி என்றும் பெயர் சூட்டப்பட்டது.

ஆடம் என்றால் முதலில் தோன்றியது என்று பொருள். 27 நட்சத்திரங்களில் மூத்த நட்சத்திரமாக உத்திராடம் விளங்குகிறது. எனவே தான் முதன் முதலில் தோன்றிய உத்திராட நட்சத்திர தேவியான பூங்குடியாளை 26நட்சத்திர தேவியரும் பாதபூஜை செய்வதாக கூறப் படுகிறது. (உத்திராடம் முதல் நட்சத்திரம் என்பதால் தான், இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக முழுமுதல் கடவுளான விநாயகரை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்) உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு ஏற்படும் சகலதோஷங்கள் நீங்கவும், வாழ்வில் முன்னேற்றம் பெறவும் அந்த நட்சத்திர நாளில் வந்து வழிபடலாம். அன்று சிவனுக்கு விசேஷ பூஜை உண்டு.

பவுர்ணமியன்று சிவனுக்கு விசேஷ பூஜை உண்டு. சித்திரை பிறப்பன்று காலையில் விசேஷ ஹோமம் நடக்கும். அப்போது, அன்றிரவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாவர். மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடக்கும் நாளில், இங்கும் திருக்கல்யாணம் நடக்கும். மார்கழி திருவாதிரையன்று இரவில் அம்பாள் சன்னதியில் அதிகமான பூக்களை நிரப்பி விசேஷ பூஜை நடக்கும்.

ஐந்து நிலை கோபுரத்துடன் அமைந்த கோயில் இது. எதிரே தீர்த்தக்குளம் உள்ளது. தனிச்சன்னதியிலுள்ள நடராஜர், ஆடுவதற்கு தயாரான நிலையில் அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் காட்சி தருகிறார். இங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ பூஜை உண்டு. சிவன் சன்னதிக்கு பின்புறம் கோஷ்டத்திலுள்ள இலிங்கோத்பவருக்கு திருக்கார்த்திகையன்றும், சிவராத்திரி இரவில் மூன்றாம் காலத்திலும் விசேஷ பூஜை நடக்கும்.

திருவிழா:

சித்திரையில் திருக்கல்யாணம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி, தீபாவளி, கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம், மார்கழி திருவாதிரை, கூடாரவல்லி நோன்பு, தைப்பூசம், மாசிமகம், சிவராத்திரி, பங்குனி உத்திரம்.

கோரிக்கைகள்:

உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். குழந்தை பாக்கியம் கிடைக்க, குடும்பத்தில் ஒற்றுமை இருக்க அம்பிகையிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

இங்கு வேண்டி பிரார்த்தனை நிறைவேறியோர், சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சந்தனக்காப்பிட்டும் நேர்த்திக்கடன் செலுத்துவதுண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *