அருள்மிகு ராதா கிருஷ்ணர் திருக்கோயில், புது நத்தம் ரோடு, திருப்பாலை

அருள்மிகு ராதா கிருஷ்ணர் திருக்கோயில், புது நத்தம் ரோடு, திருப்பாலை, மதுரை மாவட்டம்.

+91 452 2681079, 95850 46910 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 3 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ராதா கிருஷ்ணர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

திருப்பாலை

மாவட்டம்

மதுரை

மாநிலம்

தமிழ்நாடு

ராதை கண்ணன் மீது கொண்ட காதலுக்கு அடையாளமாக பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு கதை. ஒருசமயம் தன் கோபாலனைப் பற்றிய செய்தி ஒன்றுமே யசோதைக்கு தெரியாமல் போயிற்று. “கோபாலன் எங்கே போய் விட்டான். அவனை நீண்ட நாட்களாகக் காணவில்லையே அவனைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாதே. அவன் பசி தாங்க மாட்டானே. இப்போது பெரியவன் ஆகி விட்டான். வெண்ணெய் திருட இப்போது போவதில்லையேஎன வருந்திக் கொண்டிருந்தவளுக்கு ராதையின் நினைவு வந்தது. “ராதாவிடம் கேட்டால் தெரிந்து விடும். இதற்குப் போய் கவலைப்பட்டோமே! அவளிடம் சொல்லாமல் இந்த மாயக்கண்ணன் எங்கும் போக மாட்டான். ராதையும் அவனது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருப்பவள். கண்ணன் இல்லா விட்டால் ராதை இல்லைஎனக் கருதியவள் ராதையின் வீட்டிற்குச் சென்றாள்.

ராதா. கண்ணனைப் பற்றிய சேதி எதாவது உனக்கு தெரியுமா? அவனைக் காணவில்லை. எங்கே போனான்? உன்னிடம் சொன்னானா?” பதைபதைப்புடன் கேட்டாள் யசோதா. அப்போது ராதை தெய்வீகப்பரவச நிலையில் ஆழ்ந்திருந்தாள். யசோதை கேட்டது அவள் காதில் விழவில்லை. யசோதை அவள் கண் விழிக்கட்டும் எனக் காத்திருந்தாள். சிறிது நேரத்திற்கு பிறகு ராதைக்கு மெல்ல மெல்ல தெய்வீகப் பரவச நிலை கலைந்து உலக நினைவு திரும்பியது. தன் முன்னால் அமர்த்திருந்த யசோதையைக் கண்டதும் அவள் முன் விழுந்து வணங்கினாள். பிறகு தன்னைத்தேடி வந்ததற்கான காரணத்தைக் கேட்டாள். யசோதை கண்ணனைக் காணவில்லை, அவன் எங்கே?” என பரபரப்பாகக் கேட்டாள். ராதா இதைக் கேட்டு எந்த பரபரப்பையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.

அம்மா! கண்ணை மூடிக் கொண்டு நம் கோபாலனின் உருவத்தை தியானியுங்கள். நீங்கள் அவனைக் காண்பீர்கள்என்றாள். யசோதா கண்களை மூடித் தியானிக்க ஆரம்பித்தாள். உடனே தூய பக்தியும், தூய தெய்வீகப் பரவச நிலையுமே வடிவெடுத்தவளாகிய ராதை, தனது தெய்வீக சக்தியை யசோதையிடம் செலுத்தினாள். அதன் காரணமாக, மறுகணமே யசோதையால் கோபாலனைக் காண முடிந்தது. பிறகு யசோதை ராதையிடம், “அம்மா! நான் கண்களை மூடிக் கொள்ளும் போதெல்லாம், என் அன்பிற்குரிய கோபாலனை நான் பார்க்கும்படியாக செய்ய வேண்டும்என பிரார்த்தித்துக் கொண்டாள். இந்த கதையின் மூலம் கண்ணனே நினைவாக இருந்தால், அவன் எப்போதுமே நம்முடன் இருப்பது போல தோன்றும் என்று தெரிய வருகிறது.

இப்படி கண்ணனையே உயிராக, உடலாகக் கொண்ட ராதைக்கு மதுரையில் ஒரு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. துவாரகை கிருஷ்ணன் கோயில் கோபுரத்தைப் போல வடஇந்தியக் கலையின்படி அழகிய கோபுரம் கோயில் வாசலை அலங்கரிக்கிறது. கிருஷ்ணரும், ராதையும் பசுவின் முன்னால் நிற்பது போன்ற கருவறை.

ஒரு வைணவத்தலத்தில் துர்காவுகம், மதுரையின் காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமியும் காட்சி தருவது இன்னும் சிறப்பான அம்சம். ராதைக்கு தமிழகத்தில் வேறு எங்கும் தனிக்கோயில் இருப்பதாகத்தெரியவில்லை. சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் உண்டு. மார்கழி மாதத்தில் சூரிய ஒளி கருவறையை தரிசிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு. ராஜகோபுரத்தை அடுத்து மகாமண்டபமும், அதில் கருவறையும் அமைந்துள்ளன. கோயிலை சுற்றி வரும் போது சக்கரத்தாழ்வார், நரசிம்மர், துர்கா, அனுமான், கருப்பண்ண சுவாமி சன்னதிகள் உள்ளன. இவர்கள் அனைவரையும் ஒருசேர தரிசிக்கும் பாக்கியம் ஒரே இடத்தில் கிட்டுகிறது.

திருவிழா:

கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி.

கோரிக்கைகள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *