அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், கொடிக்குளம்

அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், கொடிக்குளம், மதுரை மாவட்டம்.

+91- 452 – 2423 444, 98420 24866 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 10 – 10.30 மணி. பிற நேரங்களில் தரிசிக்க கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு செல்ல வேண்டும்.

மூலவர்

வேதநாராயணன்

தீர்த்தம்

பிரம்ம தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

ஜோதிஷ்குடி

ஊர்

கொடிக்குளம்

மாவட்டம்

மதுரை

மாநிலம்

தமிழ்நாடு

பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்னும் இரு அசுரர்கள் வேதங்களை எடுத்துச் சென்றனர். இதனால் படைப்புத்தொழில் நின்றது. மகாவிஷ்ணு அசுரர்களை வதம் செய்து, வேதங்களை மீட்டு வந்தார். ஆனால், பிரம்மாவிடம் கொடுக்கவில்லை. விஷ்ணுவிடம் வேதங்களை பெற்று, மீண்டும் படைப்புத்தொழில் செய்ய, பிரம்மா இத்தலத்தில் மனித வடிவில் தவமிருந்தார். பெருமாள் அவருக்கு ஹயக்ரீவ மூர்த்தியாகக் காட்சி தந்து வேதங்களைத் திருப்பி தந்தார். அப்போது பிரம்மா பெருமாளிடம், சுயரூபத்தில் தரிசனம் தரும்படி வேண்டவே அவர் நாராயணராக காட்சி தந்தருளினார். எனவே, “வேதநாராயணன்என்றும் பெயர் பெற்றார்.

ஸ்ரீரங்கம் தலைமை பீடப் பொறுப்பில் நம்பிள்ளை என்ற மகான் இருந்தார். “லோகாச்சாரியார்என்ற பட்டம் பெற்ற அவரது சீடரான, வள்ளல் வடக்குத்திருவீதிப்பிள்ளை, பெருமாளின் தீவிர பக்தர். இவருக்கு 1205, ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில், பெருமாளின் அம்சமாக ஆண்குழந்தைபிறந்தது. குழந்தைக்கு தன் குருவின் பெயரைச் சேர்த்து பிள்ளை லோகாச்சாரியார்எனப் பெயரிட்டார். கற்றுத்தேர்ந்த லோகாச்சாரியார், பெருமாள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1323ல், ஸ்ரீரங்கம் கோயிலை சேதப்படுத்த அந்நியர்கள் வந்தனர். அப்போது பிள்ளை லோகாச்சாரியாருக்கு வயது 118. தள்ளாத வயதிலும் உற்சவர் அழகிய மணவாளனைக் காக்க நினைத்த அவர் மூலவர் சன்னதியை மறைத்து சுவர் எழுப்பி, முன்பகுதியில் வேறு ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிட்டு, தாயார்களுடன் உற்சவரை மூடு பல்லக்கில் வைத்து சீடர்களுடன் தெற்கே கிளம்பினார். பல துன்பங்களுக்கிடையில் கொடிக்குளம் வந்தார். வேதநாராயணரை வழிபட்ட அவர், கோயிலின் பின்புறமுள்ள குகையில் அழகிய மணவாளரை மறைத்து வைத்து பூஜை செய்தார்.

அப்போது, அந்நியர்கள் இப்பகுதியிலும் நுழைந்தனர். பெருமாளை மட்டும் எடுத்துக்கொண்டு மலையுச்சிக்குச் சென்றார் லோகாச்சாரியார். அவர்கள் சென்றபின் செடி, கொடிகளைப் பிடித்து கீழிறங்கியபோது தவறி கீழே விழுந்தார். அப்போது பெருமாளுக்கு காயம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவரைத் தன் மார்பில் அணைத்துக்கொண்டு, தரையில் முதுகு படும்படியாக விழுந்தார். இதனால் பலத்த காயமடைந்தார். அதன்பின்பு மூன்று நாட்கள் மட்டுமே இருந்த அவர், தன் சீடர்களிடம் பெருமாளை சரியான காலத்தில் ஸ்ரீரங்கத்தில் சேர்க்கும்படி சொல்லி, உபதேசம் செய்தார். ஆனி மாதம் ஜேஷ்டசுத்த துவாதசி வளர்பிறையில் பரமபதம் அடைந்தார். அந்நேரத்திலும்கூட அவர் செடி, கொடி, எறும்பு போன்ற ஜீவராசிகளைத் தன் கையால் தொட்டு அவற்றையும் பரமபதத்திற்கு அழைத்துச் சென்றார். அவரது சீடர்கள் பெருமாளுக்கு அணிவித்திருந்த மாலை, பரிவட்டத்தை பிள்ளை லோகாச்சாரியாருக்கு சாத்தி இங்கேயே அடக்கம் செய்தனர். ஒரு மாதம் வரையில் தங்கி அவருக்கான சடங்குகளைச் செய்த சீடர்கள் 48 வருடங்கள் கழித்து ஸ்ரீரங்கம் திரும்பி உற்சவரை மீண்டும் கோயிலில் சேர்த்தனர். பிற்காலத்தில் கொடிக்குளத்தில் பிள்ளை லோகாச்சாரியாருக்கு தனி சன்னதி கட்டப்பட்டது. இவர் பிறந்த ஐப்பசி திருவோணத்தன்று சிறப்பு பூஜை நடக்கிறது. மகாலட்சுமியைத் தனது மார்பில் தாங்கியிருப்பவர் மகாவிஷ்ணு. ஆனால், மகாவிஷ்ணுவையே தன் மார்பில் தாங்கி, பரமபதம் அடைந்தவர் மகான் பிள்ளை லோகாச்சாரியார். இவர் ஐக்கியமான கொடிக்குளம் (ஜோதிஷ்குடி) மதுரை அருகில் உள்ளது.

வேதநாராயணர், தாயார்கள் இல்லாமல் சிறிய சன்னதியில் இருக்கிறார். பிரம்மா அந்தணராக வந்து தவம் செய்ததால், ஒரு தலையுடன் வேதநாராயணர் அருகில் வணங்கியபடி இருப்பது வித்தியாசமான தரிசனம். ஸ்ரீரங்கம் உற்சவர் வைக்கப்பட்டிருந்த குகையில் தற்போது, பெருமாள் பாதம் இருக்கிறது.

இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தின் புனிதம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக இதில் பக்தர்கள் நீராடுவதோ, கை, கால் அலம்புவதோ கிடையாது.

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி, லோகாச்சாரியார் பிறந்த ஐப்பசி திருவோணத்தன்று சிறப்பு பூஜை நடக்கிறது.

கோரிக்கைகள்:

தீர்த்தத்தை வீட்டிற்கு கொண்டு சென்று தண்ணீரில் கலந்து நீராடினால், தோல் வியாதி நீங்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *