அருள்மிகு ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில், ஓசூர்

அருள்மிகு ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில், கோபசந்திரம், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வெங்கடேஸ்வரர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

ஓசூர்

மாவட்டம்

கிருஷ்ணகிரி

மாநிலம்

தமிழ்நாடு

சுமார் 400 வருடங்களுக்கு முன் இப்பகுதியை விஜயநகர அரசர்கள் ஆண்டு வந்தனர். அப்போது ஓசூரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் கோட்டகுட்டா கிராமத்தில் இரண்டு சகோதரர்கள் ஆடு மேய்த்து வந்தனர். இவர்கள் பெருமாள் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்ததால் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க விரும்பினார்கள். வறுமையில் இவர்கள் வாடினாலும் ஆறு மாதத்திற்கொருமுறை திருப்பதி வெங்கடாஜலபதியை மட்டும் இவர்கள் தரிசிக்கத் தவறுவதில்லை. ஒரு நாள் பெருமாள் இவர்கள் கனவில் தோன்றி, “நான் தென்பெண்ணை நதிக்கரையில் சிலை வடிவில் உள்ளேன். என்னை எடுத்துச் சென்று வழிபடுங்கள்என்று கூறியுள்ளார். இதன் படி சகோதரர்கள் இருவரும் நதிக்கரை சென்று அங்கிருந்த பெருமாளின் சிலையை எடுத்து ஒரு மாட்டுக்கொட்டத்தில் வைத்து வழிபட்டு வந்தனர்.

ஒரு முறை கோட்டகுட்டா கிராமத்தை காலரா நோய் தாக்கியதில் கிராமமே அழிந்து விட்டது. பல்லாண்டுகளுக்கு பின் இந்த இடத்தில் பல ஊரின் மக்கள் ஒன்றாக கூடி மாட்டு சந்தை நடத்தி வந்தனர். அப்படி மாட்டு சந்தைக்கு வந்த மாடுகளில் ஒன்று புதருக்குள் இருந்த இந்த வெங்கடேஸ்வரசுவாமியின் சிலையை கண்டு, தினமும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்று வர ஆரம்பித்தது. இதைக்கண்ட அந்த மாட்டுக்கு சொந்தக்காரரான வெங்கட்ரமணப்பா 1878ம் ஆண்டு இந்த சிலையை மலை மீது வைத்து, கோயில் கட்டி வழிபட்டு வந்தார். அதன் பின் 1888ம் ஆண்டு முதல் இப்பகுதியில் தேர் திருவிழா நடத்த கமிட்டி அமைத்து ஆண்டு தோறும் ஏப்ரல் 13ம் நாள் விழா நடந்து வருகிறது. தொடர்ந்து 1895ம் ஆண்டு சித்திரை மாதம் கோபுரமும் கட்டி, காளை சிலையை கண்டுபிடித்ததால், அதற்கும் நந்தி சிலை வைத்து பூஜை செய்து வருகின்றனர். இப்படி பெருமாள் கோயிலில் நந்தி சிலை வைத்து பூஜை செய்யும் பழக்கம் இங்கு மட்டுமே இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

இந்த பழமை வாய்ந்த ஸ்ரீமத் வெங்கடேஸ்வரசுவாமியை தரிசிக்க ஓசூர், தேன்கனிக்கோட்டை, கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். அத்துடன் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த பெருமாள் தான் குல தெய்வம். மலை மீது அமைந்துள்ள மிகப் பழமையான இந்தக்கோயிலில் இருந்து உற்சவர் சிலைகள், அலங்காரப்பொருள்கள், மணி, தட்டு, கவசம் ஆகிய பொருள்கள் திருடு போய் உள்ளது. இதுகுறித்து பக்தர்கள் போலீசில் முறையிட்டு உள்ளனர். போலீஸ் நடவடிக்கை எடுக்கும் முன் திருடியவர்கள் கோயில் அருகே கொண்டு வந்து போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் இங்குள்ள பெருமாளுக்கு விசேஷ சக்தி இருப்பதாகவும், வேறு சில கோயில் பொருள்கள் காணாமல் போய், அதேபோல் பெருமாளிடம் முறையிட்டு இந்த கோயில் அருகே பொருள்கள் கிடைத்தததாகவும் கூறுகிறார்கள்.

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி.

கோரிக்கைகள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *