அருள்மிகு விநாயகர் திருக்கோயில், கேரளபுரம்

அருள்மிகு விநாயகர் திருக்கோயில், கேரளபுரம், தக்கலை அருகில், நாகர்கோவில், கன்னியாகுமரி.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

விநாயகர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கேரளபுரம்

மாவட்டம்

கன்னியாகுமரி

மாநிலம்

தமிழ்நாடு

வீரகேரளவர்மா என்ற மன்னர், இராமநாதபுரம் மன்னரைக் காண்பதற்காக இராமேஸ்வரம் சென்றார். அங்கு அக்னி தீர்த்தத்தில் நீராடியபோது, அவர் காலில் ஒரு சிறியகல் இடறியது. அந்தக் கல்லை எடுத்துப் பார்த்தபோது, அது பிள்ளையார் வடிவத்தில் இருப்பதைக் கண்டு வியந்தார். இராமநாதபுரம் மன்னரைச் சந்தித்த வீர கேரளவர்மா, தான் நீராடியபோது கண்டெடுத்த கல்லை அவரிடம் காட்டினான். இது பிள்ளையார் போல்தான் தெரிகிறது. நீங்கள் இதை உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள். இது என் பரிசாக இருக்கட்டும் என்றார். கேரளபுரம் வந்த வீர கேரள வர்மா, தற்போது உள்ள இடத்தில் அந்தப் பிள்ளையார் உருவம் கொண்ட திருமேனியைத் திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்து அங்கு ஓர் அரச மரக் கன்றினையும் நட்டு வைத்துப் பராமரித்தார். நாளடைவில் அரசமரம் வளர்ந்து கொண்டே வந்தது. அத்துடன் சிறிய அளவிலிருந்த விநாயகரும் வளர்ந்து கொண்டே வந்தார். ஆரம்ப காலத்தில் ஆறு அங்குலம் அளவு இருந்த விநாயகர், தற்போது பதினெட்டு அங்குலம் வளர்ந்து கம்பீரமாகத் திகழ்கிறார்.

கேரளபுரத்தில் அரசமரத்தடியில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலத்தில் வெள்ளை நிறமாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான தட்சிணாய காலத்தில் கறுப்பு நிறமாகவும் மாறி பக்தர்களுக்கு அருள் புரிகிறார். மேற்கூரை இல்லாமல் அரசமரத்தடியில் அமர்ந்து இருக்கும் இந்தப் பிள்ளையாரைத் தரிசிக்க வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் தினமும் வந்து தரிசித்து பேறு பெறுகிறார்கள். முதல் ஆறு மாதம் வெள்ளை நிறமாக இருக்கும் விநாயகர் திருமேனியில் ஆடி மாத ஆரம்பத்தில் கறுப்புப் புள்ளிகள் ஏற்படுகின்றன. பிறகு, தொடர்ந்து சிறிது சிறிதாக கறுப்பு நிறம் சூடுகிறார். இந்த அதிசய விநாயகரை ஆய்வு செய்த புவியியல் துறை நிபுணர்கள், திருமேனி உருவாக்கப்பட்ட கல் இந்திர காந்தம் என்னும் அபூர்வ வகையைச் சார்ந்தது என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

திருவிழா:

விநாயக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி.

கோரிக்கைகள்:

இங்குள்ள விநாயகரை வழிபட வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

இங்குள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், தேங்காய் உடைத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *