அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம்

அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டம்.

+91-4144-245090 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஸ்ரீ பூவராகன்

உற்சவர்

ஸ்ரீயக்ஞவராகன்

தாயார்

அம்புஜவல்லி

தல விருட்சம்

அரசமரம்

தீர்த்தம்

நித்யபுஷ்கரணி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

ஸ்ரீமுஷ்ணம்

மாவட்டம்

கடலூர்

மாநிலம்

தமிழ்நாடு

ஸ்ரீ மந் நாராயணன் மிகப்புனிதமான வராக அவதாரம் எடுத்து பூமியை கவர்ந்து சென்ற ஹிரண்யா சூரன் என்னும் அசுரனைக் கொன்றார். பின் அப்பூமியை தனது கோரைப்பற்களினால் சுமந்து வந்து ஆதிசேஷன் மேல் முன்னிருந்த நிலையில் நிலைக்கச் செய்து, தனது இரண்டு கண்களினின்றும் அசுவத்த விருட்சத்தையும் (அரச மரம்) துளசியையும் உண்டாக்கி, தனது வியர்வை நீரின் பெருக்கை கொண்டு நித்யபுஷ்கரணி என்ற புனித தீர்த்தத்தையும் ஏற்படுத்தி, ஸ்ரீ முஷ்ணம் என்னும் இத்தலத்தை இருப்பிடமாக ஏற்றார். பிரம்மன் முதலானோர் பூஜிக்க ஸ்ரீ பூவராகன் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

பெருமாளின் பத்து அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வராக அவதாரம் ஆகும். அந்த சிறப்பு வாய்ந்த அவதார கோலத்தில் பெருமாள் இந்த ஊரில் இருப்பதால் இவரை வழிபடுவது மோட்சத்திற்கு செல்வதற்கான வழி ஆகும். அசுரர்களை வென்றதால் ஏற்பட்ட வெற்றிப் பெருமித உணர்ச்சி பொங்க இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக பார்க்கிறார். இங்கு பெருமாளின் மூலவர் விமானம் பாவன விமானமாகும். வடபுறத்தில் உள்ள கோபுரத்தின் பக்கத்தில் குழந்தை அம்மன் ஆலயம் உள்ளது. இங்கே அம்புஜவல்லித் தாயாரின் தோழிமார்களுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அர்த்த மண்டபத்தில் உற்சவர் யக்ஞ வராகமூர்த்தி ஸ்ரீ தேவி, பூதேவியருடன் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். உடன் ஆதி வராகமூர்த்தியும் கண்ணனும் எழுந்தருளியுள்ளார். விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில் இது.

இங்கு பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தானே தோன்றிய மூர்த்திகளை கொண்ட வைணவத் தலங்கள் எட்டு. 1. ஸ்ரீ ரங்கம் 2.ஸ்ரீ முஷ்ணம் 3. திருப்பதி 4. வானமாமலை 5. சாளக்கிராமம் 6. புஷ்கரம் 7. நைமிசாரண்யம் 8. பத்ரிகாச்ரமம். ஸ்ரீ பூவராகசுவாமி சந்நிதி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முகம் மட்டும் தெற்கு நோக்கி உள்ளது.

திருவிழா:

மாசி மகம் பிரம்மோற்சவம் -10நாட்கள் திருவிழா மாசிமாதம் பரணி நட்சத்திரத்தன்று தொடங்கும். இந்த உற்சவத்தில் சமுத்திரத்திற்கு எழுந்தருளும் முன் தைக்கால் கிராமத்தில் ஒரு நவாப் அடக்கம் செய்யப்பட்ட மசூதி வழியாகப் பெருமாள் எழுந்தருள்வதும், மசூதி மேட்டில் மேள தாளங்களுடன் பூசையை ஏற்றுக்கொள்வதும் நவாப்பின் அரண்மனை வரையில் எழுந்தருள்வதும் ஒரு சிறப்பு. சித்திரை பிரம்மோற்சவம் – 10 நாள் தேர் தெப்பம் சித்திரை மாதத்தில் ஸ்ரீமுஷ்ணத்திலேயே நடைபெறுவது. ஒன்பது நாட்கள் பகல், இரவு பெருமாள் வீதிக்கு எழுந்தருள்கிறார். ஒன்பதாவது நாள் மட்டையடி உற்சவம் விசேஷமானது. சித்ராபவுர்ணமி அன்று நண்பகலுக்கு மேல் புஷ்கரணியில் தீர்த்தவாரி. ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் , பவுர்ணமி, அமாவாசை, மாதப்பிறப்பு இந்த நாட்களில் யோக நரசிம்மசுவாமி பிரகாரத்தில் எழுந்தருள்கிறார். அவதார தினமாகிய சித்திரை மாத ரேவதியில் பூவராகன் எழுந்தருள்கிறார். வைகாசி விசாகம் உற்சவர் கருடவாகனம். ஆடிப்பூரம் ஆண்டாள் உற்சவம். ஆவணி பத்துநாள் ஸ்ரீஜெயந்தி, உறியடி. புரட்டாசி பெருமாள் தாயார் நவராத்திரி கொலு. ஐப்பசி தீபாவளி உற்சவம். கார்த்திகை திருக்கார்த்திகை சொக்கப்பனை. மார்கழி பகல் பத்து, இராப்பத்து, ஆண்டாள் நீராட்டு; வைகுண்ட ஏகாதசி யக்ஞவராகன் வீதி உற்சவம், கருடசேவை. தை சங்கராந்தி யக்ஞவராகனுக்கும் ஆண்டாளுக்கும் திருக்கல்யாணம். மாட்டுப்பொங்கல் பாரிவேட்டை தைப்பூசம் தீர்த்த உற்சவம். பங்குனி உத்திரம் பெருமாள் தாயார் திருக்கல்யாணம் திரு ஊரல் உற்சவம்

கோரிக்கைகள்:

ஸ்ரீ வராக பெருமாளை வணங்குவோர் சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெற்று வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்று புராணங்களும் மந்திர சாஸ்திரங்களும் சொல்கின்றன.

குரு, இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அத்தகைய தோஷம் நிவர்த்தி ஆகும்.

தவிர புதிய வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு கொண்டு வந்து அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. இதற்கு வாகனம் படைத்தல் என்று கூறுகிறார்கள். தவிர விபத்துக்குள்ளான வாகனங்களை ரிப்பேர் செய்த பின்பு இங்கு ஓட்டி வந்து பூவராக பெருமாளிடம் வழிபட்ட பின்னர் ஓட்டுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

தங்கள் பிரார்த்தனை நிறைவேறப்பெற்ற பக்தர்கள் பெருமாளுக்கு துளசி மாலை சாத்துகிறார்கள். நெய்தீபம் ஏற்றுகிறார்கள்.இவை தவிர சுவாமிக்கு திருமஞ்சனம், உலர்ந்த தூய வெள்ளாடை சாத்துதல், அபிசேக ஆராதனைகள் செய்கிறார்கள்.பிரசாதம் செய்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்து விட்டு பக்தர்களுக்கு தருகிறார்கள். வசதி படைத்தோர் அன்னதானம் செய்கிறார்கள்.

2 Responses to அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம்

  1. Srinivasan Seshadri says:

    This Srimushna Shetram listed in Suyambu Seshatram list.

  2. எ.அப்பர்சுந்தரம் மயிலாடுதுறை says:

    அருமையான கோவில் பழமையானதும் கூட…அதனை காக்க நாம் அனைவரும் துணை நிற்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *