அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், சிங்கிரிகுடி

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், சிங்கிரிகுடி, கடலூர் மாவட்டம்.

+91- 413-261 8759, +91-4142-224 328 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

நரசிம்மர்

உற்சவர்

பிரகலாத வரதன்

தாயார்

தாயார்: கனகவல்லி

தல விருட்சம்

வில்வம்

தீர்த்தம்

ஜமத்கனி தீர்த்தம், இந்திர தீர்த்தம், பிருகு தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம்

ஆகமம்

வைகானசம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

சிங்கிரி குடி

மாவட்டம்

கடலூர்

மாநிலம்

தமிழ்நாடு

நரசிம்மர், தனது பக்தன் பிரகலாதனுக்காக இரண்யனை வதம் செய்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் அருள்பாலிக்கிறார். நரசிம்மர் கோயில்களில் உக்கிர மூர்த்தியான நரசிம்மர் இலட்சுமியை மடியில் அமர்த்திய கோலத்தில் அருள்பாலிப்பார். சில கோயில்களில் யோக நிலையில் தனித்து காட்சி தருவார். கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் உக்கிரமாக அருள் பாலிக்கிறார்.

பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர், மூலஸ்தானத்தில் 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிகப்பிரமாண்டமாக அருள் பாலிக்கிறார். இரணியனை மேற்கு பார்த்து நின்று நரசிம்மர் வதம் செய்தார். இதைக் குறிக்கும் வகையில், இங்கு மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். வடக்கு நோக்கி சிறிய வடிவில் யோக நரசிம்மர், பாலநரசிம்மர் ஆகியோரும் உள்ளனர். இவ்வாறு ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பதை காண்பது அரிது. இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள். இத்தலம் மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். நரசிம்மர் தன் 16 திருக்கரங்களில் பதாகஹஸ்தம், பிரயோக சக்கரம், க்ஷீரிகா எனப்படும் குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவை ஏந்தியுள்ளார். மற்ற கரங்களால் இரணிய சம்ஹாரம் நடக்கிறது. குடலைக் கிழிப்பது, குடலை மாலையாகப் பிடித்திருத்தல், இரணியனின் தலையை அழுத்தி பிடித்திருப்பது ஆகிய சாகசங்களைச் செய்கிறார்.

ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட கோயில் இது. ஐந்து நிலை, ஏழு கலசங்களுடன் மேற்கு பார்த்த ராஜகோபுரமும், மிகப்பெரிய கொடி மரமும் உள்ளது. தாயார் கனகவல்லி தனி சன்னதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். பிரகாரத்தில் இராமர், ஆண்டாள், கருடன், விஷ்வக்சேனர், 12 ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள், தும்பிக்கை ஆழ்வார், விஷ்ணு துர்க்கை, ஆஞ்சநேயர் ஆகியோர் தனி சன்னதிகளில் அருளுகின்றனர். அகோபிலம் 4வது ஜீயரின் பிருந்தாவனம் உள்ளது. திருவிழா காலங்களில் கோயிலின் பின்புறம் உள்ள பத்து தூண் மண்டபத்தில் தாயாருக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

திருவிழா:

சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தியன்று தேர்த்திருவிழா நடக்கிறது. அதற்கு 9 நாள் முன்பாக கொடியேற்றி பிரமோற்சவம் தொடங்குகிறது. மாசி மகத்தன்று புதுச்சேரி கடலில் தீர்த்தவாரி, ஐப்பசியில் பவித்ர உற்சவம், வைகுண்ட ஏகாதசியன்று காலையில் சொர்க்க வாசல் திறப்பு, மாலையில் கருட சேவை, ஜனவரி மாதம் மாட்டுப்பொங்கலன்று தீர்த்தவாரி.

கோரிக்கைகள்:

மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். வேண்டுதல் நிறைவேற செவ்வாய்க் கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுதல் நிறைவேறியதும், நரசிம்மருக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் சாற்றுகிறார்கள். பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது தலத்தினம் முக்கிய நேர்த்திக்கடனாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *