அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், எல்லீஸ்நகர், மதுரை
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், எல்லீஸ்நகர், மதுரை, மதுரை மாவட்டம்
******************************************************************************************************
+91 99409 46092, 97897 91349(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
தல விருட்சம்: – அரசமரம், வேம்பு
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – மதுரை எல்லீஸ் நகர்
மாநிலம்: – தமிழ்நாடு
பல ஆண்டுகளுக்கு முன் காடாக இருந்த இப்பகுதியில் தானாக கிடைத்த சூலாயுதத்தை வைத்து மக்கள் சில காலம் வழிபட்டு வந்தனர்.
பின் சுயம்புவாக கிடைத்த மார்பளவு கருமாரி சிலையை வைத்து அதை மூலவராக வழிபாடு செய்து வருகிறார்கள்.
இங்கு கோயிலுக்கு முன்னும், பின்னும் அரசும் வேம்பும் இணைந்து வளர்ந்து வருகின்றன. இதில் கோயிலின் முன் அம்மனின் பார்வையில் உள்ளதில் வேப்பமரம் பெரியதாகவும் அரசமரம் சிறியதாகவும் வளர்ந்துள்ளது. அதே போல் கோயிலின் பின் உள்ளதில் அரசு பெரியதாகவும் வேம்பு சிறியதாகவும் வளர்ந்துள்ளது.
கிழக்கு பார்த்த இச்சன்னதியில் ஐம்பொன்னில் அமைந்திருக்கும் உற்சவ மூர்த்திக்கு நாள்தோறும் வெவ்வேறு அலங்காரம் சிறப்பாகச் செய்யப்படுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
மங்கையர் மனம் கலங்கினால் இந்த மகமாயிக்கு மனம் தாங்காது. இத்தலத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டாலே நமது தேவையறிந்து கொடுத்து காத்திடுவாள் தேவி கருமாரி.
இந்த தேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு சென்றால் விநாயகர், முருகன், சிவன், நாகர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், அட்டலட்சுமிகள், நவகிரகம் ஆகியவற்றை ஒரே தலத்தில் தரிசனம் செய்யலாம்.
ஆவணி வளர்பிறை முதல் வெள்ளியில் காப்பு கட்டி அடுத்த வெள்ளியில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் அபிடேக ஆராதனை, சமபந்தி போசனம், சக்தி கரகம் எடுத்தல் போன்றவைகள் நடைபெறும். மறுநாள் சனிக்கிழமை பொது மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். அன்று இரவு அப்பகுதி முழுவதும் சாமி சுற்றி வரும். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் மண்டகப்படி செய்வர். அனைத்து மதத்தினரும் வந்து வழிபாடு செய்வதும் தனி சிறப்பு. இத்தலத்தில் சங்கடகர சதுர்த்தியில் விநாயகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு, வெள்ளி தோறும் நடத்தப்படும் ராகு கால பூசை, மாத கடைசி வெள்ளி சிறப்பு அர்ச்சனை, செவ்வாய் தோறும் முருகனுக்கு சிறப்பு அலங்காரம், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிடேக ஆராதனை ஆகியவையும் ஆவணித்திருவிழாவும் உபயதாரர்களால் சிறப்பாக நடத்தப்படுகிறது.
செவ்வாய் தோறும் இங்குள்ள முருகனுக்கு காலை பத்து மணியளவில் செய்யப்படும் மாங்கல்ய தோடத்திற்கான பரிகார பூசை மிகவும் பிரசித்தமானது.
இக்கோயிலுக்கு அதிக காணிக்கையாக வருவது மாங்கல்யம்தான்.
அம்மனுக்கு திருமுழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
Leave a Reply