அருள்மிகு வனவேங்கடப் பெருமாள் திருக்கோயில், பெருந்துறை
அருள்மிகு வனவேங்கடப் பெருமாள் திருக்கோயில், பெருந்துறை, துடுப்பதி, ஈரோடு மாவட்டம்.
+91-4294 – 245 617 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
வனவேங்கடப் பெருமாள் |
தல விருட்சம் |
– |
|
வேப்ப மரம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
பெருந்துறை |
மாவட்டம் |
– |
|
ஈரோடு |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
400 ஆண்டுகளுக்கு முன்பே இக்கோயில் இங்கு அமைந்திருக்கிறது. இக்கோயில் குறித்த தெளிவான வரலாறு ஏதுமில்லாவிடினும், செவி வழிச் செய்திகள் இக்கோயிலின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. கோயிலின் பழமையைப் பறைசாற்றும் வகையில் சில கல்வெட்டுக்கள் தென்படுகின்றன.
வேப்ப மரம் பொதுவாக அம்பாளுக்கு உகந்தது. ஆனால், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா துடுப்பதி அருகேயுள்ள ஸ்ரீரங்ககவுண்டன் பாளையம் கிராமத்தில் வேப்ப மரத்தடியில் வீற்றிருந்து பல நூறு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீவனவேங்கடப் பெருமாள். ஊருக்கு வெளியே, வயல்களுக்கு நடுவே பசுமை போர்த்திய பின்னணியில் அமைந்திருக்கிறது இக்கோயில். மிகப் பிரம்மாண்டமான வேப்பமரம் கோயிலின் பெரும் பகுதியை வியாபித்திருக்கிறது. மரத்தடியில் எவ்வித சிலைகளும் இல்லை. ஐந்து கற்கள் மட்டுமே அமைந்துள்ளன. இவற்றையே வன வேங்கடப் பெருமாளாகவும், தாயாராகவும் உருவகம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர். ஸ்ரீரங்ககவுண்டன்பாளையத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் வனவேங்கடப் பெருமாளை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.
இக்கோயிலுக்கு அருகிலேயே சிறு குட்டை உள்ளது. இதில் தண்ணீர் நிரம்பும் காலங்களில் பக்கத்தில் உள்ள சிறு பள்ளத்தில் இருந்து வெள்ளை நிறத்தில் நாமக்கட்டி உருவாகிறது. அதை சுயம்புவாக தோன்றியுள்ள துடுப்பதி பெருமாளுக்கு மேனியில் சாற்றுவதும் நடைமுறையில் உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது. ஸ்ரீரங்ககவுண்டன்பாளையம் கிராமம் மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராம மக்கள் பல் வேறு வழிபாடுகள் நடத்தி, நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். அருகில் உள்ள துடுப்பதியில் கரிவரதராஜ பெருமாள் கோயில் மற்றும் காசிவிஸ்வநாதர் கோயில் ஒரே வளாகத்தில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளன. கோயிலுக்கு மத்தியில் இருக்கும் வேப்ப மரத்தைச் சுற்றிலும் மிகப்பெரிய மதில் சுவர்கள் அமைந்துள்ளன. இதுதவிர வேறு மேற்கூரை ஏதுமில்லை. கோயில் வளாகத்துக்கு உள்ளேயே நாவல் பழ மரங்கள் உள்ளன. பாம்புகள் ஏராளமாக நடமாடுகின்றன.
இங்கு புரட்டாசி நான்காவது சனிக்கிழமையன்று இரவில் பெருமாளும், ஈஸ்வரரும் திருவீதி உலா வருவார். வீதியுலா நிறைவுறும் சமயத்தில் துடுப்பதியில் இருந்து ஆஞ்சநேயர் தனி சப்பரத்தில் ஸ்ரீரங்ககவுண்டன் பாளையத்துக்கு எடுத்து வரப்படுவார். இரவில் வன வேங்கடப்பெருமாள் கோயிலில் வைத்து அவருக்கு அபிஷேகங்கள், தீபாராதனைகள் மற்றும் தளிகை நடக்கும். அதுவரை ஸ்ரீரங்ககவுண்டன் பாளையம் மக்கள் காலையில் இருந்தே சாப்பிடாமல் விரதமாக இருப்பர். இரவில் ஆஞ்சநேயருக்கு தளிகை நடந்த பின்னரே அனைவரும் உண்பர். மீண்டும் ஸ்ரீரங்க கவுண்டன் பாளையத்தில் இருந்து ஆஞ்சநேயர் அதிகாலையில் துடுப்பதிக்கு எழுந்தருள்வார். அதுவரையிலும், துடுப்பதியில் வீதியுலா வந்த பெருமாளும், ஈஸ்வரரும் கோயில் வாசலிலேயே காத்திருப்பர். ஆஞ்சநேயர் வந்ததுமே மூவரும் கோயிலுக்குள் செல்வர். 400 ஆண்டுகளாக இவ்வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. நவராத்திரி விழாவைப் பொறுத்து சில ஆண்டுகளில் இவ்விழா புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையன்று நடப்பதும் உண்டு. விழாவின் போது துடுப்பதியில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் உள்ள ஸ்ரீரங்க கவுண்டன் பாளையத்துக்கு பல்லக்கை எடுத்து வரும் போது, அதன் எடையே தெரியாதாம். சுவாமி பறந்து வருவதுபோல் உணர்வு இருக்கும் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.
திருவிழா:
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நான்காவது சனிக்கிழமையன்று நடக்கும் திருவிழாவே இங்கு விசேஷம்.
கோரிக்கைகள்:
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
Leave a Reply