அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், குகை, சேலம்
அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், குகை, சேலம், சேலம் மாவட்டம்.
+91- 427 – 2218 543, 99409 90984 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வீரபத்திரர் | |
அம்மன் | – | வேதநாயகி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | கிணறு | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | ஸ்ரீசைலம் | |
ஊர் | – | சேலம் | |
மாவட்டம் | – | சேலம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவத்தல யாத்திரை சென்ற அகத்தியர், இத்தலத்திற்கு அருகிலுள்ள ஊத்துமலையில் சிலகாலம் தங்கினார். அங்கு அவர் இலிங்கப் பிரதிஷ்டை செய்து, சிவ தரிசனம் வேண்டி பூஜை செய்தார். சிவன் காட்சி தந்தபோது அகத்தியர் அவரிடம், தனக்கு வீரபத்திரர் வடிவில் காட்சி தரும்படி வேண்டினார். சிவனும், வீரபத்திரராக காட்சி தந்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு வீரபத்திரருக்கு கோயில் கட்டப்பட்டது.
மூலஸ்தானத்தில் வீரபத்திரர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கரத்தில் தண்டாயுதத்திற்குப் பதிலாக கேடயம் வைத்திருக்கிறார். வலப்புறம் தட்சனும், இடப்புறம் பத்திரகாளியும் இருக்கின்றனர். காளியின் கைகளில் பாசம், சூலம், உடுக்கை ஆகியவை உள்ளன. தேய்பிறை அஷ்டமியில் வீரபத்திரருக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. சுகவன முனிவர், இவரைத் தரிசனம் செய்துள்ளார். வீரபத்திரர், சிவனின் அம்சம் என்பதால் சிவலிங்கம் ஒன்றை ஒரு சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், “ஜங்கமேஸ்வரர்” என்றழைக் கப்படுகிறார். இவரையும் வீரபத்திரராகவே பாவித்துப் பூஜை செய்கின்றனர்.
நவக்கிரக சன்னதி எதிரில், இராஜகணபதி இருக்கிறார். நவக்கிரக சன்னதியில் உள்ள சனீஸ்வரர், விநாயகரின் பார்வையில் இருப்பதால் இவர் “அனுக்கிரக மூர்த்தி“யாகக் காட்சி தருகிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விநாயகர் மற்றும் சனீஸ்வரரை வழிபடுகிறார்கள். சிவன் சன்னதி எதிரே மேல் விதானத்தில், 12 ராசிகளுடன் கூடிய இராசிக்கட்டம் மற்றும் இராசிக்குரிய பரிவார தெய்வங்கள் உள்ளன.
பவுர்ணமி, அமாவாசை, மாத சிவராத்திரிகளில் வீரபத்திரருக்கு நடக்கும் பூஜையில், மொச்சைப்பயிறு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு படைத்து வழிபடுகின்றனர். வீரபத்திரருக்கு வில்வம், வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம். ஆனால், இவருக்கு மூங்கில் இலை மாலை அணிவிப்பது விசேஷம். பிரிந்திருக்கும் தம்பதியர் மற்றும் உறவினர்கள் வீரபத்திரருக்கு மூங்கில் இலை மாலை அணிவித்து குடும்ப ஒற்றுமைக்காக வேண்டுகின்றனர். மூங்கில் கண்டுகள், எப்போதும் இணை பிரியாமல் ஒன்றாக இணைந்து வளரக்கூடியவை. வளைந்து கொடுக்கும் தன்மையைக் கொண்டவை. இதைப்போலவே, குடும்பப் பிரச்னைகளிலும் அனுசரித்து செல்வதற்காகவே மூங்கில் இலை வழிபாடு நடக்கிறது. அம்பாள் வேதநாயகி, வள்ளி, தெய்வானை சமேத முருகன் சன்னதிகளும் உள்ளன.
திருவிழா:
சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை.
மாசி சிவராத்திரி விழா 3 நாட்கள் நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் வீரபத்திரருக்கு ஒரு கால பூஜை நடக்கிறது. மறுநாள் அவர் அம்பாளுடன் முத்துப்பல்லக்கில் வீதியுலா செல்கிறார். ஐப்பசி பவுர்ணமியில் ஜங்கமேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற சிவாலயங்களில், சுவாமிக்கு அபிஷேகம் செய்த அன்னத்தை ஆண், பெண் இருபாலருக்கும் பிரசாதமாகத் தருவர். ஆனால், இங்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே இந்த ஸ்பெஷல் பிரசாதம் வழங்கப்படுகிறது.
கோரிக்கைகள்:
திருமண, புத்திர பாக்கியத்திற்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சிவனுக்கு அபிஷேகம் செய்தும், வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
Leave a Reply