அருள்மிகு அக்னி வீரபத்திரர் ஆலயம், சூரக்குடி
அருள்மிகு அக்னி வீரபத்திரர் ஆலயம், சூரக்குடி, சிவகங்கை மாவட்டம்.
அக்னி வீரபத்திரருக்கு மதுரை சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில் என்ற கிராமத்தின் அருகில் உள்ள சூரக்குடி என்ற சிறு ஊரில் பிரபலமான ஆலயம் உள்ளது. அங்கு உள்ள ஒரு அரச மரத்தடியில்தான் வீரபத்திரர் வந்து தங்கி இருந்து தவம் இருந்து தோஷத்தைக் களைந்து கொண்டாராம். அது மட்டும் அல்ல அந்த நேரத்தில் அவர் அந்த கிராமத்தின் தேவதையாக இருந்து ஊரைக் காத்து வந்தாராம். ஆகவே, ஊர் மக்கள் அவருக்கு ஒரு ஆலயம் எழுப்ப முயன்றனர். ஆனால் பல காலம் எத்தனை முயன்றும் கோவில் எழுப்ப முடியாமல் இருந்தது எனவும், ஆனால் ஒரு நாத்தீகருடைய கனவில் ஒரு நாள் வீரபத்திரர் தோன்றி தனக்கு அந்த இடத்தில் ஆலயம் அமைத்து வழிபடுமாறு கூற அவரும் ஊர் பஞ்சாயத்தில் அந்த செய்தியைக் கூறி ஆலயம் அமைத்ததாகவும் ஆலயத்தின் கதை உள்ளது. ஆலயத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆலயம் எந்த காலத்தில் முதலில் தோன்றியது என்பதும் தெரியவில்லை அக்னி வீரபத்திரர் அங்கு வந்த கதை இது.
அக்னி வீரபத்ரர் சிவ பெருமானால் படைக்கப்பட்டவர். சிவனுடைய மாமனார் தட்சன் நடத்திய யாகத்தில் அவரை அவமதித்ததை கண்டு பார்வதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த நிலை கண்டு கோபமடைந்த சிவன் தன்னை மறந்தார். அனைவரையும் மறந்தார். தன் தலை முடியில் இருந்து ஒரு அகோர உருவைப் படைத்து அனைவரையும் அழிக்க உத்தரவு தர, அக்னி வீரபத்திரர், காளி தேவியுடன் சேர்ந்து கொண்டு அனைத்து தேவர்களையும் அழிக்கத் துவங்கினார். கன்னங்கரேர் எனக் காட்சி அளித்த அக்னி வீரபத்திரர் உடம்பெல்லாம் முடி இருக்க, தலையில் முடி நேராக நின்று இருந்தது, கண்களில் கனல் பறந்தது. அவருடைய ஆக்ரோஷத்தைக் கண்ட அக்னி, இந்திரன், சந்திரன், சூரியன் என அனைவரும் பயந்து ஓடினார்கள். அதைக் கண்டு பயந்த தேவர்கள் ஓடிச் சென்று விஷ்ணுவை வேண்ட, அவர் சிவன் தோளில் இருந்த பார்வதியின் உடலைத் தனது சக்கிராயுதத்தினால் வெட்டி வீழ்த்த சிவ பெருமானின் கோபம் தணிந்தது. அவர் சிவ பெருமானிடம் சென்று அக்னி வீரபத்திரரின் கோபத்தை அடக்குமாறுக் கேட்க அதன்பின் மற்ற தேவர்களும் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, கோபம் தணிந்த சிவ பெருமான் அக்னி தேவரின் உடலைப் பல பிரிவுகளாகப் பிரித்தார். அக்னி வீரபத்ரரும் சிவ பெருமான் கேட்டதற்கு இணங்கி தட்சனின் வெட்டப்பட்ட தலையில் ஒரு ஆட்டின் தலையை வைத்து அவருக்கு உயிர் தந்தார். அதன் பின் அவர் வலப்புறத்தில் தட்சனுடனும், இடப்புறத்தில் காளியுடன் காட்சி தந்தாராம்.
சிவ பெருமானின் கோபத்தினால் அவரிடம் இருந்து வெளிவந்த அக்னி வீரபத்ரர் யாகத்தில் வந்தவர்கள் பலரைக் கொன்றதினால் ஏற்பட்ட பிருமகத்தி தோஷத்தைக் களைய, அவரை உண்டாக்கிய சிவன் பூலோகத்தில் வீர பத்திரராகப் பிறவி எடுக்க வேண்டும். வானத்தில் இருந்து தம் உடலில் உள்ள அனைத்து ஆபரணங்களையும் கீழே வீச வேண்டும். அவை எந்த நதியில் விழுகின்றதோ அந்த நதிக் கரையில் சென்று தங்கி நதியில் குளித்து தவம் இருந்து பிருமகத்தி தோஷத்தை களைந்து கொண்டு, தன்னுடைய அவதாரமாக ஒரு இலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என சாபம் ஏற்பட்டது. அதனால் சிவபெருமான் வீசிய ஆபரணங்கள் எப்போது ஆலயம் உள்ள இடத்தில் வந்து விழுந்ததாகவும் அங்கு வந்து தவம் இருந்து பிருமகத்தி தோஷத்தை களைந்து கொண்டு, தன்னுடைய அவதாரமாக ஒரு இலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார் எனவும் அந்த கிராமத்தினர் காலம் காலமாக கூறப்பட்டு வரும் கதையை ஆதாரமாகக் கூறுகின்றார்கள் . சிவபெருமானே அகோர வீரபத்திரர், அக்னி வீரபத்திரர், குபேர வீரபத்திரர் என அறுபத்தி நான்கு விதமான ரூபங்களை எடுத்தாராம்.
சூரக்குடி அக்னி வீரபத்திரர் ஆலயத்தில் விளக்குகளை ஏற்றிய தட்டைத் தமது தலை மீது வைத்துக் கொண்டு பக்தர்கள் வணங்குவார்களாம். முக்கியமாக நவக்கிரகங்களினால் ஏற்படும் தீராத தொல்லைகளையும், மற்ற தீய சக்தியினால் ஏற்படும் தொல்லைகளையும் களைந்து கொள்ள அக்னி வீரபத்திரரை வணங்குவார்களாம். சென்னை காளிகாம்பாள் ஆலயத்திலும் உள்ள அவரது சன்னதி இதற்கு மிகவும் பிரபலமானது. அவருக்கு மதுரை மீனாஷி ஆலயத்திலும் தனிச் சன்னதி உள்ளது.
Leave a Reply