அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், சண்முகபுரம்
அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், சண்முகபுரம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.
+91- 4259 – 229 054(மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வீரஆஞ்சநேயர் | |
தீர்த்தம் | – | பாலாறு | |
ஆகமம் | – | பாஞ்சராத்ரம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | சண்முகபுரம் | |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இராமரின் மனைவி சீதையை இராவணன் இலங்கைக்கு கடத்திச்சென்ற போது, அவரது சீடரான ஆஞ்சநேயர் சீதையைச் சந்திக்க இலங்கைக்கு சென்றார். இலங்கையில் சீதாதேவியை சந்தித்த ஆஞ்சநேயர் தற்போது கோயில் அமைந்துள்ள பாலாற்றின் வழியாகத் திரும்பினார். அவர் பறந்து சென்ற வழியின் கீழே பாலாற்றங்கரையில் உள்ள பாறையில் தங்கி ஓய்வெடுத்த பாறையில் சுயம்புவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பிற்காலத்தில், இப்பகுதியை சோழமன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் ஆற்றின் நடுவே ஆஞ்சநேயர் சுயம்புவாக இருந்தது கண்டறியப்பட்டு தொடக்கத்தில் சிறிய அளவில் கோயில் எழுப்பி வழிபாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக செவிவழிச்செய்தி கூறுகிறது.
ஆஞ்சநேயர் இலங்கை சென்ற போது பல மலைகளைக் கடந்து பறந்து சென்றார். அவ்வாறு சென்ற போது, அவர் கால் பதித்த இடமாகக் கருதப்படும் கோயம்புத்தூர் மாவட்டம் சண்முகபுரத்திலுள்ள பாலாற்றங்கரையின் நடுவிலுள்ள பாறையில் அவருக்கு சிலை வடிக்கப்பட்டுள்ளது. இத்தலத்தின் அருகே ஓரிடத்தில் சிறிய தீர்த்தம் போன்று நீர் வடிகிறது. அதில் இரண்டு நாகங்கள் இன்றுவரையிலும் எழுந்து நீராடி அவ்வப்போது சுவாமியின் கருவறைக்கு வந்து செல்வதாக அக்காட்சியை நேரில் கண்ட பக்தர்கள் சிலாகிப்புடன் தெரிவிக்கின்றனர். இங்கு யோகநரசிம்மர், சக்கரத்தாழ்வார், இரட்டைமுகத்துடன் கூடிய விநாயகர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்
இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் பாலாற்றின் நடுவே படுத்த நிலையில் உள்ள பாறையில் வீரஆஞ்சநேயராக சுமார் ஐந்து அடி நீளத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரகாரத்தெய்வமாக இல்லாமல் இத்தலத்தின் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் வீரஆஞ்சநேயரின் முகம் இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது. கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடகநாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள இரட்டைமுகத்துடன் கூடிய விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.
திருவிழா:
ஆஞ்சநேயர் ஜெயந்தி, ஆடி மற்றும் தை அமாவாசை, புரட்டாசி சனிக்கிழமைகளில் திருவிழா கொண்டாடப்படுகிறது. தீபாவளி,பொங்கல், கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு ஆகிய வருடத்தின் முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது.
வேண்டுகோள்:
இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்குகிறது, எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றியடைகிறது, பயம் நீங்குகிறது, நற்புத்தி, சரீரபலம், செயலில் கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை,நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்குசாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது. தவிர கடன் தொல்லை, விரோதிகள் தொல்லைகளும் நீங்குகிறது.
நேர்த்திக்கடன்:
வேண்டிக்கொண்ட காரியங்கள் நிறைவேறிட சுவாமிக்கு துளசி, வடை, வெற்றிலை மாலை சாத்தி அவல், சர்க்கரை நைவேத்யம் படைத்து சிறப்பு அபிஷேகங்கள் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது. மேலும் வெண்ணெய் காப்பு சாத்தியும் நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றலாம்.
Leave a Reply