அருள்மிகு பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர்

அருள்மிகு பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், சிவகங்கை மாவட்டம்.

+91- 4561-257 201, 257 213, 98424 59146

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – பாகம்பிரியாள்

தீர்த்தம்: – வாசுகி தீர்த்தம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – திருவெற்றியூர்

மாவட்டம்: – சிவகங்கை

மாநிலம்: – தமிழ்நாடு

இப்பூவுலகை மகாபலி சகரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கினான். இதனால் குடிமக்கள் மன்னனிடம் அதிக பாசம் வைத்திருந்தனர். மக்கள் அவனை தங்கள் துன்பங்களை நீக்கவல்ல கடவுள் என வழிபடலாயினர். இதனால் கர்வம் ஏற்பட்டு மற்ற தேவர்களையும், கடவுளர்களையும் மதிக்காமல் வாழத்துவங்கினான்.

நாரதரும் சிவபெருமானும்:

இதனை அறிந்த நாரதர் நேராகக் கயிலாயத்திற்கு சென்று சிவபெருமானை வணங்கி முறையிட்டார். இதற்கு பதிலளித்த எம்பெருமான்,”முற்பிறவியில் என்னுடைய சன்னதியில் அணையும் நிலையில் இருந்த தூண்டா மணிவிளக்கை எலி உருவத்தில் வந்து தூண்டிவிட்டான். இதற்காக 56 தேசங்களை ஆளும் மன்னனாக அவனுக்கு வரம் தந்தேன். எனவே இப்பிறவியில் அவனை அழிப்பது தர்மம் அல்ல,” என்றார்.

நாரதரும், திருமாலும்:

இதையடுத்து நாரதர் திருமாலிடம் தனது கோரிக்கையை கொண்டு சென்றார். இதனை ஏற்ற திருமால், வாமன உருவம் கொண்டு மாவலி மன்னனிடம் யாசிக்க சென்றார். அவனிடம் நான் யாகம் நடத்த 3 அடி இடம் வேண்டும் என்றார்.

தன் கொடைப் பெருமையால் முகமும், அகமும் மலர மூவடி தந்தேன் என்றான் மன்னன். ஆகாயத்திற்கும், பூமிக்குமாக விசுவரூபம் எடுத்த திருமால் தன் நீண்ட கால்களால் உலகை இரண்டடியால் அளந்தார்.

3ம் அடி கேட்டபோது வந்தவர் யார் என புரிந்த மன்னன் பணிவுடன் தன் தலையை காண்பித்தான். தலையில் 3ம் அடியை அளந்தார். மகாபலி பிறவிப்பயனை முடித்து அதல பாதாளத்தில் மறைந்தான்.

தர்மதேவதை:

இதனை அறிந்த தர்மதேவதை மகனை இழந்த துன்பம் ஏற்பட்டது போல் துடித்தாள். சிவபெருமானிடம் முறையிட்டாள். மகாபலியின் தலையில் 3ம் அடி அளந்த மாதவன் காலில் புற்று ஏற்படுமாறு சபித்தார் சிவபெருமான். செருக்குற்றவனை அழித்த தனக்கு புற்றால் வேதனை ஏற்பட்டது குறித்து சிவபெருமானிடம் திருமால் முறையிட்டார்.

சாபவிமோசனம்:

இதுகேட்ட சிவபெருமான் திருமாலிடம்,”18 தீர்த்தங்களில் நீராடி, சிவ ஆலயங்களை வணங்கி, திருவாடானை என்னும் திருத்தலத்திலுள்ள ஆதிரெத்தினேசுவரரை தரிசிக்க வேண்டும்என்றார்.

இரவில் துயில்கொள்ளும்போது சிவபெருமான் கனவில் தோன்றி, “இந்த இடத்திற்கு தெற்கில் திருவெற்றியூர் என்னும் தலம் உள்ளது. அங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி லிங்கத்தை தழுவி வழிபட்டால் உன் புற்று நீங்கும்,” என்று கூறி மறைந்தார். கங்கா தேவியை அழைத்து,”தர்ம தேவதை திருமாலுக்கு புற்று நோய் வருமாறு செய்து வேதனைபடுத்துகிறாள். தர்ம தேவதையின் கோபத்தை அடக்க நீதான் தகுதியானவள். திருமாலிற்கு நீதான் உதவி செய்ய வேண்டும்,” என்றார்.

திருவெற்றியூர் வந்த திருமால் சிவனை வழிபாடு செய்தார். புற்று மாயமாய் மறைந்துவிட்டது. அன்றுமுதல் சிவபெருமானுக்கு பழம்புற்றுநாதர்என்றும் உடன் உள்ள பார்வதிக்கு பாகம்பிரியாள்என்றும் பெயர் வழங்கலாயிற்று.

இந்த தேவி தாயுள்ளம் கொண்டவள். இவ்வூர் மக்கள் தங்கள் சொத்துக்களை அம்பாளுக்குரியதாக கருதுகின்றனர். தாய்வழி சொத்தாக மகள்களுக்கு சொத்தை எழுதி வைக்கின்றனர்.

அகத்திய விநாயகர்

பொதிகைக்குச் சென்ற அகத்தியர், இங்குள்ள விநாயகரை வழிபட்டார். அவரை, “அகத்திய விநாயகர்என்கிறார்கள். பிரகாரத்திலுள்ள உள்ள வில்வ மரத்தடியில் புற்றடி விநாயகர்இருக்கிறார். திருமணதோடம் உள்ளவர்கள் இவருக்கு பால்முழுக்கட்டு செய்தும், அருகிலுள்ள நாகருக்கு மாங்கல்யம் அணிவித்தும் வணங்குகின்றனர்.

அமுக்கிப் போட்டா சரியாப் போகும்!

தீராத நோய்களையும் தீர்ப்பவளாக அருளுவதால் இவளை மருத்துவச்சி அம்மன்என்றும் அழைக்கிறார்கள். விவசாயிகள் தங்கள் நிலத்தில் பணி துவங்கும் முன், விதை நெல்லை அம்பாள் சன்னதியில் வைத்து பூசித்துச் செல்கின்றனர். முதலில் அறுவடை செய்யும் நெல்லையும் இவளுக்கு காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இப்பகுதியில் யாரேனும் நச்சுப்பூச்சிகளால் கடிபட்டால், அவர்களை கோயிலுக்கு கொண்டு வருகின்றனர். அவர்களை கோயில் எதிரேயுள்ள வாசுகி தீர்த்தத்தில் மூழ்கச்செய்து, மண்டபத்தில் படுக்க வைத்து, அம்பிகைக்கு முழுக்காட்டு செய்த தீர்த்த பிரசாதம் தருகின்றனர். தற்போதும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களை தீர்த்தக்குளத்தில் அமுக்கி குளிக்க வைப்பதால், “அமுக்கிப்போட்டா சரியாப்போகும்என்று சொல்லும் வழக்கம் உள்ளது.

ஐந்து இருடிகளுடன் தெட்சிணாமூர்த்தி:

சனகாதி முனிவர்கள் நால்வருடன் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இங்கு அகத்தியர், கவுதமர், காஷ்யபர், ஆங்கீரசர், பரத்வாசர் என ஐந்து இருடிகளுடன் காட்சி தருகிறார். இவர் இடது கையில் மலர் வைத்திருப்பதும், பின்புறம் கல்லால மரம் இல்லாததும் சிறப்பு. குரு பெயர்ச்சிக்குப் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் இவரை வழிபட்டு வரலாம்.

பெண்களின் பிரச்னைகளுக்கான பிரதான பிரார்த்தனை தலம் இது. திருமணம், குழந்தை பாக்கியம், ஆரோக்கியம் என எதற்காகவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். இங்கு வழிபடும் பக்தைகள் தங்கி வழிபடுதல்என்னும் சடங்கைச் செய்கிறார்கள். வியாழனன்று மாலையில் அம்பிகையை வணங்கி, அன்றிரவில் கோயிலிலேயே தங்கி விடுகின்றனர். மறுநாள் வாசுகி தீர்த்தத்தில் நீராடித் திரும்புகின்றனர். பக்தைகள் தங்குவதற்காக கோயில் சார்பில் மண்டபமும் உள்ளது.

கால் புற்றால் அவதியா?
காலில் புற்று உண்டாகி அவதிப்படுபவர்கள் நிவர்த்தி பெற இங்கு வருகிறார்கள். திருமால், மகாபலியை வதம் செய்து ஆட்கொண்ட பிறகு தர்மதேவதை இட்ட சாபத்தால் திருமாலின் காலில் புற்று வெடித்தது. இதனால் அவதிப்பட்ட பெருமாளுக்கு, இங்கு சிவன் கால் புற்று நோயை குணப்படுத்தினார். இதனால் சுவாமிக்கு பழம்புற்றை தீர்த்த பழம்புற்று நாதர்என்ற பெயர் ஏற்பட்டது. நீண்ட நாட்களாக காலில் புற்று உள்ளவர்களுக்கு இங்கு தீர்த்தம், வேப்பிலை, விபூதி பிரசாதம் தருகின்றனர். இதைச்சாப்பிட நோய் குணமாவதாக நம்பிக்கை. புற்றுநோய் தீர அம்பிகையை வணங்கி நம்பிக்கையுடன் தீர்த்தம் வாங்கி குடித்துச் செல்லலாம்.

பூச்சொரிதல் விழா:

ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு சிறப்பு பூசை நடக்கும். ஆடி கடைசி திங்களன்று, நள்ளிரவில் அம்பிகைக்கு பூச்சொரிதல்விழா நடக்கிறது. சித்திரையில் பிரம்மோத்சவம் நடக்கிறது.

குழந்தை பாக்கியம் வேண்டிப் பெண்கள் பிரார்த்தனை செய்கின்றனர், நல்ல கணவர் அமையவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும் பெண்கள் இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

பிரார்த்தனை நிறைவேறியவர்கள் உரல், உலக்கை, அம்மிக்குளவியை காணிக்கையாகச் செலுத்தியும், தங்கள் உருவம் போன்று பொம்மை செய்து வைத்தும், அம்பிகைக்குத் திருமுழுக்காட்டு செய்தும் புத்தாடை சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *