அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில், செமினரி ஹில்ஸ்

அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில், செமினரி ஹில்ஸ், நாக்பூர் மாவட்டம், மகாராஷ்டிர மாநிலம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

மூலவர் முருகப்பெருமான், வெங்கடேசப் பெருமாள்
அம்மன் வள்ளி, தெய்வானை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் செமினரி ஹில்ஸ்
மாவட்டம் நாக்பூர்
மாநிலம் மகாராஷ்டிரா

நாக்பூரில் மோதிபாக் ரயில்வே காலனி இருக்கிறது. காலனியின் மைதானத்தில் ஒரு வேல் நடப்பட்டு பூஜை நடந்து வந்தது. அப்பகுதியிலுள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து சிறிய கோயில் ஒன்றை அந்த இடத்தில் உருவாக்கினர். இடப்பிரச்னை காரணமாக அங்கிருந்த கோயில் செமினரி ஹில்ஸ் என்ற மேடான இடத்தில் கட்டப்பட்டது. அந்த பகுதி சேட்கள் ஒன்றிணைந்து இந்த கோயிலை எழுப்பினர். தமிழகத்திலிருந்து வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சிலை, நவக்கிரகங்கள் ஆகியவை வரவழைக்கப்பட்டு அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டன.

பின்னர் சேட்களின் கோரிக்கையின் பேரில் கோயிலை இரண்டு தளங்களாக அமைக்க முடிவு செய்தனர். கீழே பாலாஜியும், மேல் தளத்தில் முருகப் பெருமானையும் ஸ்தாபனம் செய்ய முடிவெடுத்தனர்.

சில கட்டடக் கலைஞர்கள் கட்டடத்திற்குரிய வரைபடத்தை இலவசமாகவே வரைந்து தந்தனர். சாஸ்திர முறைப்படி விமானம், பரிவார தெய்வ சன்னதிகள் ஸ்தாபனம் செய்யப்பட்டன. 1975ல் கும்பாபிஷேகம் நடந்தது. 2005ல் ராஜகோபுரம் கட்டப்பட்டு கூடுதலாக பரிவார மூர்த்தங்கள் அமைக்கப்பட்டன.

மூன்றடுக்கு முறையில் ஏகதள விமானம் பாலாஜிக்கும், முருகப்பெருமானுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. 60 அடி நீள மகா மண்டபம் கட்டப்பட்டது. முருகனின் முன்னால் 2 மயில் வாகனங்கள் அமைக்கப்பட்டன. மேல் கருவறையில் 3 அடி உயர முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். கீழ்தள கருவறையில் பாலாஜி என்ற வெங்கடேசப் பெருமாள் ஆறு அடி உயரத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இந்த கோயிலுக்கென்று திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து குடை, சடாரி ஆகியவை பூஜிக்கப்பட்டு எடுத்து வரப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தை ஸ்கந்தசமாஜ் என்ற குழுவினர் கவனிக்கின்றனர்.

சுற்றுப்பிரகாரத்தில் கணபதி, நவக்கிரகங்கள், ஸ்ரீமா துர்காம்பிகை, சர்ப்பராஜர், சீதாளமாதா, மகாசிவன், ஜெயவீர அனுமான், மகாசாஸ்தா ஆகிய மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர்.

சங்கடஹர சதுர்த்தியில் மகா கணபதி ஹோமம், சஹஸ்ரநாம அர்ச்சனை, சஷ்டி திதியன்று முருகனுக்கும், வேலுக்கும் விசேஷ திரவிய அபிஷேகம், வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீமா துர்காவுக்கு ராகுகால பூஜை, சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு மாலை நேர அர்ச்சனை, வியாழக்கிழமைகளில் தெட்சிணாமூர்த்தி அர்ச்சனை, வீர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பிடுதல் ஆகியவை குறிப்பிடும்படியாக நடக்கின்றன.

சர்ப்பராஜருக்கு நாகசதுர்த்தியன்று நாக பூஜை, பிரதோஷ நாளில் சிவார்ச்சனை ஆகியவை நடக்கிறது. பாலாஜிக்கு ஏகாதசியன்று திருமஞ்சணம், சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. இங்கு வரும் பக்தர்களே விழாக்களுக்குரிய செலவை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றனர்.

திருவிழா:

கந்தசஷ்டி, சங்கடஹர சதுர்த்தி, ராகுகால பூஜை, வெண்ணெய்க்காப்பு, நாகசதுர்த்தி, பிரதோஷம், ஏகாதசி. சித்திரை மாதத்தில் சித்ரா பவுர்ணமிக்கு முந்தைய 15 நாட்கள் பாலாஜிக்கு விழா நடத்தப்படுகிறது. முதல்நாள் கொடியேற்றமும், மற்ற நாட்களில் சிறப்பு பூஜையும் உண்டு.

வேண்டுகோள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *