அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில், ரத்னமங்கலம்
அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில், ரத்னமங்கலம், வண்டலூர்-600 048. சென்னை .
+9144 2431 4572, 94440 20084 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்
தல விருட்சம்: – வில்வம்
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – ரத்னமங்கலம், வண்டலூர் அருகில்
மாநிலம்: – தமிழ்நாடு
புதுக்கோட்டைப் பகுதியில் ஆட்சி செய்து வந்த மன்னர்கள், திருக்கோகர்ணம் பிரகதாம்பாளை விருப்ப தெய்வமாக வணங்கி வந்தனர். இவளுக்கு நவராத்திரி விழா கொண்டாடியபோது, பக்தர்களுக்கு பிரசாதமாக அரிசி, வெல்லம் மற்றும் அப்போது புழக்கத்தில் இருந்த அரைக்காசில், அம்பாள் உருவத்தை பொறித்துக் கொடுத்தனர். இதனால் இந்த அம்பிகைக்கு, “அரைக்காசு அம்மன்‘ என்ற பெயர் ஏற்பட்டு விட்டது.
ஒருமுறை, மன்னர் ஒருவர் தான் தொலைத்த பொருள் மீண்டும் கிடைக்க வேண்டி இந்த அம்பாளிடம் வேண்டினார். அதுவும் கிடைத்து விட்டது. அன்றுமுதல் தொலைந்த பொருளை மீட்டுத்தரும் தெய்வமாகவே இவளை மக்கள் கருதினர்.
அரைக்காசு அம்மனுக்கென தமிழகத்தில் தனிக்கோயில் எதுவும் இல்லை. ஒரு சில கோயில்களில் அவளுக்கு சன்னதி மட்டும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அரைக்காசு அம்மனை மூலவராகக் கொண்டு, இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் அமர்ந்த கோலத்தில் அருளுகிறாள்.
அம்பாள் அமைப்பு:
பார்வதியின் அம்சமான இந்த அம்பிகை 4 கரங்களுடன் பாசம், அங்குசம் ஏந்தி, பீடத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள். தலையில் நாக கிரீடம், பிறைச்சந்திரன் மற்றும் கையில் சூலம் இருக்கிறது. இவளுக்கு மஞ்சள் ஆடையே அணிவிக்கப்படுகிறது. அம்பாள் எதிரே சிம்ம வாகனம் உள்ளது.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அம்பிகைக்கு விசேட பூசை செய்யப்படுகிறது. இவளது சன்னதியில் அரைக்காசு அம்மன் படம் பொறித்த டாலர் பிரசாதம் தருகின்றனர். 108 எண்கள் பொறிக்கப்பட்ட இயந்திரம் ஒன்று இத்தலத்தில் உள்ளது. பக்தர்கள் ஏதேனும் ஒரு எண்ணைத்தொட்டு தங்கள் பலனைத் தெரிந்து கொள்கிறார்கள். இந்த அம்பிகைக்கு வெல்லத்தைப் பிரதான நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள்.
ஞாபக மறதியால் பொருள் வைத்த இடம் தெரியாமல் தேடுபவர்கள் இவளை மனதில் நினைத்து வேண்டிக்கொள்ள, அப்பொருள் உடன் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. காணாமல் போன பொருள் மட்டுமின்றி, நம் குடும்பத்தில் யாரேனும் காணாமல் போய் அவர்கள் திரும்ப கிடைக்க வேண்டுமானாலும் இவளை வணங்கலாம்.
பொருள் கிடைத்துவிட்டால் வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து, வெல்லம், சுக்கு கலந்த பானகம் நைவேத்யம் படைக்க வேண்டும்.
இந்த கோயிலுக்கு மிக அருகில் லெட்சுமி குபேரருக்கு தனிக்கோயில் இருக்கிறது.
ஆடியில் வருடாந்திர திருமுழுக்காட்டும், நவராத்திரி விழாவும் கொண்டாடப்படுகிறது.
இழந்த பொருள் கிடைக்க, ஞாபக மறதி நீங்க இவளிடம் வேண்டிக்கொள்ளலாம்.
வேண்டுதல் நிறைவேறியவர்கள் அம்பிகைக்கு எலுமிச்சை மாலை அணிவித்து, அம்பிகைக்கு சிறப்பு பூசைகள் செய்து வழிபடுகிறார்கள்.
Leave a Reply