அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கழுகாசல மூர்த்தி (முருகன்)
அம்மன் வள்ளி, தெய்வானை
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கழுகு மலை
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

இராவணனால் ஜடாயு கொல்லப்பட்டார். இராமனால் இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார். இ‌தை அனுமார் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பி சம்பாதி என்ற கழுகு, இராமனிடம், தன்னால் என் சகோதரனுக்கு ஈமக்கிரியை செய்ய இயலாமல் போயிற்றே; இதனால் ஏற்பட்ட பாவம் எப்‌போது தீரும்? எங்கு போய் இதைக் களைவது?” என்றார். அதற்கு இராமன், “நீ கஜமுகபர்வதத்தி்ல் உள்ள தீர்த்தத்தில் நீராடி, பூஜை செய்து வந்தால் இதற்கான விடை கிடைக்கும்என்றார். இதன்பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. சம்பாதி முனிவர் கஜமுக பர்வதத்திலேயே தங்கியிருந்தார். அப்‌போது, முருகன் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியாக வந்தார்.

அந்நேரத்தில் முனிவர்களையும், மக்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் துன்புறுத்திக் கொண்டிருந்தான். முருகன் தாரகாசூ‌ரனை ஐப்பசி பஞ்சமி திதியில் வதம் செய்தார். வதம் செய்த களைப்பு தீர, கஜமுக பர்வதத்தில் ஓய்வெடுத்தார். அவருக்கு தங்கும் இடம் தந்தார் சம்பாதி. அத்துடன் சூரபத்மனின் இருப்பிடத்தையும் காட்டினார். இதனால் மகிழ்ந்த முருகன் சம்பாதிக்கு முக்தி தந்தார். இதனால் சம்பாதி தன் சகோதரனுக்கு ஈமக்கிரி‌யைகள் செய்ய முடியாத பாவம் நீங்கியது. கழுகு முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே அவரது பெயரால் கழுகுமலைஎனப் பெயர் பெற்றது.

கந்த புராணத்தின் ஆசிரியர் கச்சியப்பர், குமரன் மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று என்றும் அதில் இராஜபோகமாக வீற்றிருக்கும் தலம் கழுகுமலை என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தலத்தின் மிகச்சிறந்த அம்சம் ‌மலையை குடைந்து, கோயிலை மலைக்குள் அமைத்திருப்பதுதான். இந்தக் குடவரைக்கோயிலுக்கு மலையே கோபுரமாக அமைந்துள்ளது. இக்கோயிலை சற்றி வர வேண்டுமானால் மலையையே சுற்றி வர வேண்டும். இந்த கழுகாசலமூர்த்திக்கு முகம் ஒன்று, கரம் ஆறு, தன் இடது காலை மயிலின் கழுத்திலும், வலது காலைத் ‌தொங்க விட்டும் கையில் கதிர்வேலுடன் காட்சிதருகிறார்.

பிற கோயில்களின் அசுரன் தான் முயலாக இருப்பான். எனவே மயிலின் முகம் முருகனுக்கு வலது பக்கமாக இருக்கும். ஆனால், இத்தலத்தில் இந்திரனே மயிலாக இருப்பதால் மயிலின் முகம் முருகனுக்கு இடப்பக்கமாக உள்ளது. எனவே, சூரசம்ஹார நாட்களில் மயிலின் முகம் மூடப்பட்டிருக்கும். இத்தலத்தில் குருவும் (தட்சிணாமூர்த்தி) முருகனும் (‌செவ்வாய்) இருப்பது சிறப்பு. எனவே குரு மங்கள ஸ்தலம்என்கிறார்கள். கழுகாசலமூர்த்தியை அகத்தியர் தினமும் பூஜிப்பதாக ஐதீகம். இங்கு முருகனுக்குத் தனி பள்ளியறையும், சிவபெருமானுக்குத் தனி பள்ளியறையும் அமைந்திருப்பது ஓர் தனிசிறப்பாகும். இராமாயண கால தொடர்புடையது. இத்தலநாயகன் கழுகாசலமூர்த்தி மேற்குபார்த்தும், வள்ளி தெற்குபார்த்தும், தெய்வானை வடக்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். அமர்ந்த நிலையில் 4 அடி உயரத்தில் பெரிய திருமேனி.

திருவிழா:

வைகாசி விசாகம் 10 நாள் திருவிழாவாக ‌‌‌கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியில் 13 நாளும், தைப்பூசத்தில் 10 நாளும், பங்குனி உத்திரம் 13 நாளும் திருவிழா ‌கொண்டாடப்படுகிறது.

வேண்டுகோள்:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இருப்பிடம் :

வடமாவட்டங்களில் இருந்து செல்பவர்கள் மதுரையிலிருந்து கோவில்பட்டி சென்று அங்கிருந்து 30 கி.மீ,. தொலைவிலுள்ள இத்தலத்தை எளிதில் அடையலாம். ‌‌கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் பஸ்கள் இவ்வழியாகச் செல்லும். திருநெல்வேலியில் இருந்தும் அடிக்கடி பஸ் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *