அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆண்டார்குப்பம்
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆண்டார்குப்பம், திருவள்ளூர் மாவட்டம்.
+91- 44 – 2797 4193, 99629 60112 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பால சுப்பிரமணியர் | |
உற்சவர் | – | சுப்பிரமணியர் | |
அம்மன் | – | விசாலாட்சி | |
தீர்த்தம் | – | வேலாயுத தீர்த்தம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | ஆண்டார்குப்பம் | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பாடியவர் – அருணகிரியார்
கைலாயம் சென்ற பிரம்மா, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். பிரம்மாவை அழைத்த முருகன், “நீங்கள் யார்?” எனக்கேட்டார். “நான்தான் படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா” என அகங்காரத்துடன் கூறினார். அவரது அகந்தையை ஒழிக்க முருகன், எதன் அடிப்படையில் படைப்புத்தொழில் செய்கிறீர்கள் எனக்கேட்டார். அவர் “ஓம்” என்று சொல்லி அதற்கு பொருள் தெரியாமல் விழிக்க, முருகன் அவரைச் சிறை வைத்தார். பொதுவாக, பிறரிடம் கேள்வி கேட்பவர்கள், மேலான பொறுப்பில் உள்ளவராகவோ அல்லது அவரை விடவும் பெரியவராகவோதான் தான் இருக்க முடியும். இங்கு பிரணவத்தின் வடிவமான முருகன், பிரம்மாவை விடவும் உயர்ந்தவராக இருக்கிறார். எனவே பிரம்மாவிடம் அதிகாரத்துடன், தனது இரண்டு கரங்களையும் இடுப்பில் வைத்து கேள்வி கேட்டார். இந்த அமைப்பிலேயே இத்தலத்தில் அருள்புரிகிறார். முருகனை இத்தகைய வடிவில் காண்பது மிக அபூர்வம்.
பிற்காலத்தில் இந்த முருகனை, ஆண்டிகள் சிலர் வழிபட்டு வந்தனர். அப்போது தலயாத்திரை சென்ற பக்தர் ஒருவர், இங்கு தங்கினார். மாலையில் தீர்த்த நீராடிவிட்டு முருகனை வழிபட வேண்டுமென நினைத்து, ஆண்டிகளிடம் “நீராடும் இடம் எங்கிருக்கிறது?” எனக் கேட்டார். அவர்கள் அப்படி தீர்த்தம் எதுவும் இல்லை என்றனர். அப்போது ஆண்டிக்கோலத்தில் சிறுவன் ஒருவன் அங்கு வந்தான். பக்தரிடம் தான் தெப்பத்திற்கு அழைத்துச் செல்வதாக சொல்லியவன், தான் வைத்திருந்த வேலால் ஓரிடத்தில் குத்தினான். அங்கு நீர் பொங்கியது. ஆச்சர்யத்துடன் அதில் நீராடிய பக்தருக்கு, சிறுவன் முருகனாகக் காட்சி கொடுத்தார். இவரே இத்தலத்தில் பாலசுப்பிரமணியராக அருளுகிறார்.
பாலசுப்பிரமணியர் வேல், வஜ்ரம், சக்தி என எவ்வித ஆயுதமும் இல்லாமல் காட்சி தருகிறார். சுவாமிக்கு அருகில் இரண்டு யானை வாகனம் இருக்கிறது. அதிகார தோரணையுடன் இருப்பதால் இவரை, “அதிகார முருகன்” என்றும் அழைக்கிறார்கள். அருணகிரியார் இவரைப் பற்றி திருப்புகழ் பாடியிருக்கிறார். காலையில் இவர் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞர், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம். ஆண்டிக்கோல சிறுவனாக வந்து முருகன் அருள்புரிந்த தலமென்பதால் ஊர், “ஆண்டியர்குப்பம்” என்றழைக்கப்பட்டு, “ஆண்டார்குப்பம்” என மருவியது. ஆளும் கோலத்தில் முருகன் இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.
முருகனிடம் சிறைத்தண்டனை பெற்ற பிரம்மா, அவரிடம் வேலையைப் பற்றி சரியாகத் தெரியாமல் செய்ததற்கு மன்னிப்பு வேண்டினார். இவர் சுவாமி சன்னதி எதிரில், நீள்வட்ட சிலை வடிவில் இருக்கிறார். இதில் பிரம்மாவின் உருவம் இல்லை. அவருக்குரிய தாமரை, கமண்டலம், அட்சரமாலை மட்டும் இருக்கிறது. முருகனின் பிரதான வாகனம் மயில். அறுபடை வீடுகளில் சுவாமிமலை, திருத்தணி மற்றும் சென்னை குமரன்குன்றம் ஆகிய தலங்களில் முருகன் யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். ஆனால் இத்தலத்தில் மயிலுடன், சிம்ம வாகனமும் இருக்கிறது. சிம்மம், அம்பிகைக்குரிய வாகனம். தாய்க்கு உரிய வாகனத்துடன், இங்கு முருகன் அருளுகிறார். இந்த சிம்மம், மயிலைத் தாங்கியபடி இருப்பது மற்றொரு சிறப்பு. இங்குள்ள விமானம் ஏகதளம். இங்குள்ள விநாயகர் வரசித்தி விநாயகர். முன் மண்டபத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நடராஜருக்கு சன்னதிகள் இருக்கிறது.
திருவிழா:
சித்திரை பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில் தெய்வானை திருமணமும், 9ம் நாளில் வள்ளி திருமணமும் நடக்கிறது. முருகன் அவதரித்த கார்த்திகை மாதத்தில் குமார சஷ்டி விழாவின்போது லட்சார்ச்சனை செய்யப்படுகிறது. வைகாசி விசாகம், ஆடிகிருத்திகை, கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.
கோரிக்கைகள்:
பொறுப்பான பதவி கிடைக்க, அதிகாரமுள்ள பதவியில் இருப்போர் பணி சிறக்க, புத்திசாலித்தனமான குழந்தைகள் பிறக்கவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
முருகனுக்கு பாலபிஷேகம் செய்தும், சந்தனக்காப்பிட்டும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
Leave a Reply