அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், இரத்தினகிரி
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், இரத்தினகிரி, வேலூர் மாவட்டம்.
+91- 4172 – 266 350, 266 330, 94436 25887
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பாலமுருகன் | |
உற்சவர் | – | சண்முகர் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | இரத்தினகிரி | |
மாவட்டம் | – | வேலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது முதுமொழி. இவ்வாறு முற்காலத்தில் இங்குள்ள குன்றில் முருகன் கோயில் இருந்தது. சரியான வசதி இல்லாததால், சுவாமிக்கு முறையான பூஜை எதுவும் நடக்கவில்லை.
ஒருசமயம் இக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், அர்ச்சகரிடம் சுவாமிக்கு தீபாராதனை காட்டும்படி கேட்டார். அர்ச்சகர் கற்பூரம் இல்லை என்றிருக்கிறார். பின்பு, பத்தி ஏற்றி வைக்கும்படி வேண்டினார் பக்தர். பத்தியும் இல்லை என்றார் அர்ச்சகர். பரிதாப நிலையில் இருக்கும் கோயிலை நினைத்து வருத்திய பக்தர், தீபாராதனைகூட செய்யப்படாத முருகனுக்கு கோயில் தேவைதானா? என்ற சிந்தித்தார். உடன் அவரது மனதில் முருகன் பிரசன்னமாக தோன்றவே, மயக்கமானார் பக்தர். இதைக்கண்ட அர்ச்சகர் ஆட்களை அழைத்து வர, மலையடிவாரத்திற்கு சென்றார். இதனிடையே எழுந்த பக்தர், மணலில் “இந்த முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான். கோயில் திருப்பணி தவிர வேறு சிந்தனை எனக்கில்லை” என மணலில் எழுதி வைத்துவிட்டு அமர்ந்து விட்டார். அதன்பின்பு அவர் யாரிடமும் பேசவும் இல்லை. பிற்காலத்தில் இங்கு குன்றிலேயே முருகனுக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது.
இத்தலத்து முருகனுக்கு பூஜையின்போது மலர்கள், நைவேத்யம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் என அனைத்தும் 6 என்ற எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்குத்தான், அன்னத்தால் அபிஷேகம் செய்வர். ஆனால் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. முருகன், சிவனிலிருந்து தோன்றியவர் என்பதால் சிவ அம்சமாகிறார். இதன் அடிப்படையில் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்வதாக சொல்கின்றனர். அருணகிரியார் இத்தல முருகனைப் பற்றி திருப்புகழில், “ஒப்பில்லாத மாமணி, வித்தகர்” எனச் சொல்லி பாடியிருக்கிறார். ஆடி கிருத்திகையன்று சுவாமி, இரத்தினங்களால் ஆன ஆடையால் அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தருவது விசேஷம். இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால், தினமும் அர்த்தஜாம பூஜையில் பால் நிவேதனம் செய்கின்றனர். கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரமும் நடப்பதில்லை.
உற்சவர் சண்முகர் சன்னதி, கல் தேர் போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முன் மண்டபத்தில் கற்பக விநாயகர் இருக்கிறார். அடிவாரத்தில் துர்க்கைக்கு தனிக்கோயில் இருக்கிறது. நவராத்திரி, ஆடி, தை வெள்ளி மற்றும் ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. இக்கோயிலில் வாராகிக்கு சன்னதி உள்ளது. இவளுக்கு இருபுறமும் நந்தி, சிம்ம வாகனங்கள் இருக்கிறது. இங்குள்ளவிநாயகர் கற்பக விநாயகர். இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது.
பாடியவர்கள்: அருணகிரியார்
திருவிழா:
ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி.
பிரார்த்தனை:
திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமியில் இங்குள்ள வாராகியிடம் வாழை இலையில் அரிசி, தேங்காய், வெற்றிலை, பழம் வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
முருகனை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் முருகனுக்கு பாலபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
இருப்பிடம் :
வேலூரில் இருந்து ஆற்காடு செல்லும் வழியில் 14 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பஸ் வசதி உண்டு.
Leave a Reply