அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம்
அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம், உத்தர் கன்னடா மாவட்டம், கர்நாடகா மாநிலம்.
+91- 8386 – 256 167, 257 167 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர் | |
அம்மன் | – | கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி | |
தீர்த்தம் | – | கோடி தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கோகர்ணம் | |
ஊர் | – | திருக்கோகர்ணம் | |
மாவட்டம் | – | உத்தர் கன்னடா | |
மாநிலம் | – | கர்நாடகா | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், அப்பர் |
இத்தலத்தின் வரலாறு, விபீஷணன் அரங்கநாதரை இலங்கைக்கு கொண்டு சென்றதை கணபதி தடுத்ததை ஒத்துள்ளது.
கணபதியைப் பார்த்தால் பக்தர்கள் தான் தலையில் குட்டிக் கொள்வார்கள். ஆனால், இத்தலத்தில் குட்டு வாங்கிய கணபதி இருக்கிறார். இங்குள்ள பிராணலிங்கத்தின் பெருமையை கேள்விப்பட்ட இராவணன் அதை இலங்கை கொண்டு செல்வதற்காக, கயிலை மலை வந்து, சிவனை வேண்டிக் கடும் தவம் இருந்தான். இதையறிந்த நாரதர் சொர்க்கலோகம் சென்று இந்திரனிடம், “இராவணன் இந்த இலிங்கத்தை கொண்டு சென்றால், தேவர்கள் பலமிழப்பார்கள். அதைத் தடுக்க வேண்டும்” என்றார். உடனே இந்திரன் தேவர்களுடன் கைலாயம் சென்றான். அதற்குள் இராவணன் தன் தவத்தால் ஈசனை மகிழ்வித்து பிராணலிங்கத்தை பெற்றுக்கொண்டு இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான். ஈசன் இந்த இலிங்கத்தை இராவணனிடம் கொடுக்கும் முன், “இராவணா! நடந்து தான் இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் எந்தக்காரணத்தை கொண்டும் இதைக் கீழே வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது திரும்ப வராது” எனக் கூறி அனுப்பியிருந்தார். அவனிடமிருந்து அந்த இலிங்கத்தைக் கைப்பற்ற எண்ணிய விஷ்ணு, இராவணன் சந்தியாவந்தனம் செய்வதில் காலம் தாழ்த்த மாட்டான் என்பதை அறிந்து, கணபதியை அழைத்து,”நீ பிரமச்சாரி வேடத்தில் இராவணன் இருக்குமிடத்தில் சுற்றித்திரி. இராவணன் சந்தியாவந்தன நேரம் வந்தவுடன் இலிங்கத்தை கீழே வைக்காமல் உன்னிடம் கொடுப்பான். நீ அவனிடம், இலிங்கத்தின் பாரம் தாங்க முடியாத சமயத்தில் நான் மூன்று முறை உன்னை அழைப்பேன். அப்போது நீ வராவிட்டால், இலிங்கத்தைக் கீழே வைத்து விடுவேன் என்று சொல்” என்றார். இவ்வாறு கூறிய விஷ்ணு தன் கரத்தை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் நிறுத்தினார். அப்போது மாலை வேளை போல் சற்றே இருள் கவிய, இராவணன் சந்தியாவந்தனம் செய்வதற்காக கையிலிருந்த இலிங்கத்தை அருகில் நின்று கொண்டிருந்த கணபதியிடம் கொடுத்து விட்டுச் சென்றான். அப்போது தேவர்கள் மூன்று உலகங்களின் பாரத்தையும் அந்த பிராண இலிங்கத்தின் மீது செலுத்தினர். இந்த இலிங்கத்தின் பாரம் தாங்க முடியாத கணபதி மூன்று முறை இராவணனை அழைத்தார். அப்படி அழைத்தும் இராவணன் வராத காரணத்தினால் இலிங்கத்தை கீழே வைத்துவிட்டார். உடனே அந்த இலிங்கம் சப்த பாதாளங்களையும் தாண்டிக் கீழே சென்று ஊன்றி நிலைத்து விட்டது. இதனால் தேவர்கள் மகிழ்ந்தனர். சந்தியாவந்தனம் முடித்து வந்த இராவணன், இலிங்கம் கீழே வைக்கப்பட்டிருந்ததை கண்டு கணபதியின் தலையில் கோபத்தில் குட்டினான். தன் 20 கைகளாலும் இலிங்கத்தை தூக்கி பார்த்தான். முடியாமல் போனதால் அங்கேயே விட்டுவிட்டு இலங்கை சென்றான். பிறகு தேவர்கள், தேவசிற்பியை அழைத்து இலிங்கத்தைச் சுற்றி கோயில் அமைத்தனர். அதுவே கோகர்ண சிவன் கோயிலாகும். அதன் அருகிலேயே கணபதி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சிவனை “மகாபலேஸ்வரர்” என்றும், நதிவடிவிலுள்ள அம்பிகையை “தாமிரகவுரி” என்றும் அழைக்கின்றனர்.
கோகர்ணம்– பெயர் விளக்கம் முன்னொரு காலத்தில் படைக்கும் தொழிலை சிறப்பாக நிறைவேற்ற சிவன் கடும் தவம் இருந்தார். அப்போது அவரது நெற்றியிலிருந்து உருத்ரன் வெளிப்பட்டார். படைக்கும் தொழிலை சிறப்பாக செய்ய உருத்ரனே தகுதி வாய்ந்தவர் என்று சிவன், உருத்திரனை அத்தொழிலை ஒப்புக்கொள்ள வேண்டினார். உருத்ரரும் ஒப்புக்கொண்டு, தான் படைக்கும் சகல ஜீவராசிகளும் நல்ல குணத்துடனும் பலத்துடனும் விளங்க பாதாள உலகம் சென்று கடும் தவம் இருந்தார். இதற்குள் 3 யுகங்கள் கழிந்து விட்டன. எனவே பிரம்மா தானே உயிர்களை படைக்க தொடங்கினார். இதையறிந்த உருத்ரர் பயங்கர கோபத்துடன் பாதாள உலகிலிருந்து பிரம்மனிடம் வந்தார். ஆனால், அவரால் படைக்கப்பட்ட பெரிய உலகம் குறுக்கிட்டது. அவர் அதை நொறுக்கத் தொடங்கினார். பயந்து போன பூமாதேவி, “இறைவா! தாங்கள் தயவு செய்து கோபம் குறைந்து, தங்கள் உருவை சிறிதாக்கி கொண்டு என் காதின் வழியாக மெதுவாக வாருங்கள்” எனக் கெஞ்சினாள். இவளது வேண்டுதலை ஏற்ற உருத்ரன் கட்டை விரல் அளவில் உடலை சிறிதாக்கி கொண்டு அவள் காதின் வழியே வெளியே வந்து, “பூமாதேவியே! நான் பாதாள உலகில் இருந்து வெளியே வருவதற்கு நீ கருப்பையாக இருந்ததனால் இந்த இடம் “ருத்ரயோனி” என்றும், அதற்கு காரணமான நீ “கோ” (பசு) என்றும், உனது காது “கர்ணம்” என்றும் வழங்கப்படும் என்றார். அன்றிலிருந்து இத்தலம் “கோகர்ணம்” ஆனது. எனவே, இத்தலத்தை “காது துவார தலம்” என்றும் அழைக்கிறார்கள்.
கைலாயத்தில் சிவன் மலை வடிவிலும், அம்பிகை நதி வடிவிலும் காட்சி தருவதைப்போல இத்தலத்தில் சிவன் மலையாகவும், அம்பிகை நதியாகவும் அருள் புரிகின்றனர். அம்மனே இங்கு நதியாக ஓடுவதாக கூறப்படுகிறது. இக்கோயிலின் முன்புறம் நதியும், அதற்கடுத்து மலையும் இருக்கிறது. சிவன் மலையாக வீற்றிருக்கும் தலங்களில், கிரிவலம் மிகவும் விசேஷம். ஆனால், இங்கே நதி இருப்பதால் கிரிவலம் வர முடியாது.
சிவபெருமான், சுயம்புவாக எழுந்தருளிய தலங்களில் ஒன்று இது. சிவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பதால் இது ஒரு சித்தி தலமாக விளங்குகிறது.
இத்தலத்தில் அதிகளவில் பித்ருபூஜை செய்கிறார்கள். இதனால் முன்னோர்கள் நரகத்திலிருந்தாலும் சொர்க்கம் செல்வார்கள் என்பதும், பவுர்ணமியன்று இந்த ஆற்றில் நீராடி சிவனை வழிபாடு செய்தால் பிரம்மகத்தி தோஷம் (கொலை செய்ததற்கு ஈடான பாவம்) விலகும் என்பதும் நம்பிக்கை. இத்தலத்தில் செய்யப்படும் ஒரு புண்ணிய காரியம் கோடி மடங்கு செய்ததற்கான பலன் தரும். சிவன் இத்தலத்தில் தானே தோன்றியதால் மற்ற சிவத்தலங்களை விட மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. இங்குள்ள கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம். அகத்தியர் இங்கு பூஜை செய்துள்ளார். மரணமடைந்தவர்களுக்காக, இங்கு தினமும் “பிசாசு மோட்சம்” என்ற நிகழ்ச்சி நடக்கிறது.
பிரம்மனின் படைப்பில் அதிருப்தியடைந்த உருத்ரன், பிரம்மாவின் படைப்புக்களை அழிக்க பூதகணங்களைத் தோற்றுவித்தார். இதையறிந்த விஷ்ணு “உருத்ரனே! பிரம்மனை மன்னித்தருள வேண்டும். அவரது படைப்புக்களை பிரளய காலத்தில் மட்டும் அழித்து அருள்புரிய வேண்டும். அத்துடன் நீங்கள் இத்தலத்தில் இருந்து வேண்டியவர்க்கு வேண்டிய வரங்களை தந்தருள வேண்டும்” என்றார். உருத்ரனும் அதை ஏற்றார். அன்றிலிருந்து இத்தலம் “உருத்ரபூமி” ஆனது.
ஒருமுறை பிரம்மா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அப்போது உருத்ரனின் கோபத்திற்கு ஆளாகி கவுரி என்ற பெயரில் நதியாக ஓடிக்கொண்டிருந்த பார்வதி அவரது வலக்கையில் தோன்றினாள். பிரம்மா அவளிடம் நீ விரைவில் உருத்ரனின் மனைவி ஆவாய் என்றார். அவளும் உருத்ரரை சந்திக்கச் சென்றாள். அவரை அடைவதற்காக பக்தியுடன் தாமிர பர்வத மலையில் நதிவடிவில் தவமிருந்தாள். இவளது பக்திக்கு மகிழ்ந்த உருத்ரன் அவளைத் திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு அந்த இடம் “வைவாஷிக பர்வதம்” (கல்யாண கிரி) என்று அழைக்கப்பட்டது. அம்பிகை “தாமிர கவுரி” ஆனாள். இந்த நதி கோயிலுக்கு எதிரில் ஓடிக்கொண்டிருக்கிறது.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு ஆத்மலிங்க பூஜை செய்வார்கள். இந்த லிங்கம் இராவணனிடமிருந்து விநாயகர் மீட்டுத் தந்ததே. அதைத்தான் இப்படிப் பூஜிக்கின்றனர். ஓரடி உயரமுள்ள சாளக்கிரம ஆவுடைமீது சொர்ண ரேகையுடன் நடுவில் குழியோடு இந்த ஆத்ம லிங்கம் காட்சி தருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பீடத்தை அகற்றி பூஜித்து, பக்தர்கள் தரிசனத்திற்கும் வைக்கிறார்கள்.
கோயிலமைப்பு, தமிழ்நாட்டு அமைப்பினின்றும் வேறானது. தெற்கிலும், மேற்கிலும் வாயில்கள் உள்ளன. மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. தெற்கு வாயில் வழியாக உட்சென்றால் கோபுர வாயில் கடந்ததும் விசாலமான வெளிப் பிராகாரம். உள்வாயில் தாண்டியதும் ரிஷபதேவர் தரிசனம். அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது. பக்கத்தில் தாம்ரகுண்டமென்னும் தடாகம் உள்ளது. உட்புறம் மகாபலேஸ்வரர். கருவறை பக்கத்தில் தத்தாத்ரேயர், ஆதிகோகர்ணேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. மூலஸ்தானம் சிறிய அளவுடையது. நடுவில் சதுரமேடை அதில் வட்டமான பீடம். இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது. விரலால் தொட்டுத் திருமேனியை உணரலாம். பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது. பிராகாரத்தில் விநாயகர், மகிஷாசுரமர்த்தினி சந்நிதிகள், விநாயகர், யானை முகத்துடனும் இரண்டு திருக்கரங்ளோடும் நின்ற கோலத்தில் “துவிபுஜ விநாயகராக“க் காட்சிதருகின்றார். இவர் முடியில் யானைத் தலையில் இருப்பதுபோல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்பர். கோயில் சிவலிங்கவடிவில் ஆதிகோகர்ணேஸ்வரர் காட்சி தருகிறார்.
தேவாரப்பதிகம்:
பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண் பேரவன்காண் பிறப்பொன்று மில்லாதான் காண் கறையோடு மணிமிடற்றுக் காபாலி காண் கட்டங்கன் காண்கையிற் கபாலம் ஏந்திப் பறையோடு பல்கீதம் பாடினான் காண் ஆடினான் காண்பாணி யாக நின்று மறையோடு மாகீதம் கேட்டான் றான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
–திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற துளுவ நாட்டுத்தலம்.
திருவிழா:
மாசி சிவராத்திரியில் 9 நாள் திருவிழா. முதல் நாள் தேர்த் திருவிழாவும் 8ம் நாள் பிரமோத்சவமும் நடைபெறுகிறது. கார்த்திகை பவுர்ணமியில் திரிபுரதகன விழா.
பிரார்த்தனை:
சிவபார்வதி திருமணத்தலமாதலால், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஓடும் நதியில் நீராடி சிவனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன்;
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply