அருள்மிகு பூவணநாதர்(புஷ்பவனேஸ்வரர்) திருக்கோயில், திருப்புவனம்

அருள்மிகு பூவணநாதர்(புஷ்பவனேஸ்வரர்) திருக்கோயில், திருப்புவனம், சிவகங்கை மாவட்டம்.

+91 4575 265 082, 265 084, 94435 01761 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூவணநாதர், புஷ்பவனேஸ்வரர்
அம்மன் சௌந்தரநாயகி, மின்னனையாள்
தல விருட்சம் பலா
தீர்த்தம் வைகை, மணிகர்ணிகை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பூவணம்
ஊர் திருப்புவனம்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

திருப்புவனத்தில் பொன்னனையாள் என்ற நடனமாது வாழ்ந்து வந்தார். தனது கலை ஞானத்தால் ஈட்டிய செல்வத்தை எல்லாம் சிவனடியார்களுக்கு அமுது படைத்தே காலம் கழித்தாள். சிவ பக்தையான அவளுக்கு அவ்வூரில் உள்ள பூவணநாதரை சொக்கத் தங்கத்தில் வடிக்க ஆசை இருந்தது. இவளது ஆசையை நிறைவேற்ற சிவனே சித்தராக மாறி இவள் வீட்டிற்கு சென்று வீட்டிலுள்ள செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை இரவில் நெருப்பிலிட்டால் பொன்னாக மாறும் எனக் கூறினார். பொன்னனையளும் அன்று இரவு செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை நெருப்பிலிட அவை பொன்னாக மாறின. அந்த பொன்னைக் கொண்டு பூவணநாதரை உருவாக்கினாள். அப்போது பூவணநாதர் திருமேனி அழகில் சொக்கி, அவர் கன்னத்தை கிள்ளி பொன்னனையாள் முத்தமிட்டாள். அவள் பதித்த நகக்குறி இன்றும் இங்குள்ள உற்சவரிடம் காணப்படுகிறது.

புராண காலத்தில் தர்மயக்ஞன் என்பவன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டு செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று ஓய்வு எடுக்கும் போது அவனுடன் வந்தவர் கலசத்தை திறந்து பார்க்க மலர்களாக இருந்ததாம். தான் பார்த்த இந்த காட்சியை தர்மயக்ஞனிடம் அப்போது அவன் கூறவில்லை. ஓய்வு முடிந்து இராமேஸ்வரம் சென்று கடலில் அஸ்தியை கரைக்க கலசத்தை திறந்தபோது அஸ்தியாகவே இருந்தது. இதனால் அதிர்ச்சியுற்ற உடன் வந்தவன், திருப்பூவனத்தில் தான் பார்த்த காட்சியை தர்மயக்ஞனிடம் சொல்ல, மறுபடியும் அஸ்தி கலசத்துடன் அங்கிருந்து திருப்பூவனத்திற்கு வந்தனர். அங்கு வந்து பார்த்த போது கலசத்தில் அஸ்தி மலர்களாக மாறி இருந்ததாம். காசியிலும், ராமேஸ்வரத்திலும் அஸ்தியாக இருந்தது இங்கு புஷ்பமாக இருந்ததால் காசி நகரத்தை விட 16 மடங்கு புண்ணியம் தரும் இடமாக இத்தலம் போற்றப்படுகிறது. இதை காசிக்கும் வீசம் அதிகம்எனும் சமயப்பெரியோர்கள் கூற்றிலிருந்து அறியலாம். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள வைகையில் அஸ்தியை கரைத்து மோட்ச தீபம் போடும் வழக்கம் இன்றளவும் நடந்து வருகிறது.

திருஞான சம்பந்தர் திருப்புவனத்திற்கு வந்த போது ஆற்றுமணல் எல்லாம் சிவலிங்கங்களாக காட்சியளித்தனவாம். அதன் மீது கால் வைக்க அஞ்சிய சம்பந்தர் வைகையாற்றின் மறுகரை மீதிருந்தபடியே சிவனைப் பாடினார். அப்போது நந்தி இலிங்கத்தை மறைத்திருந்தது. உடனே சம்பந்தர் சிவனை வேண்ட, சம்பந்தருக்காக நந்தியை சற்று விலகி தன்னை மறைக்காமல் இருக்கும்படி சிவன் கேட்டு கொண்டாராம். அதன்படி நந்தி சற்று விலகி இருப்பது தனிச்சிறப்பாகும்.

ஐந்து நிலை கோபுரத்துடன் சுவாமி சன்னதி நுழைவு வாயில் அமைந்துள்ளது. சுவாமி சன்னதியில் சுயம்புலிங்கமாய் உருத்ராட்ச மேனியாய் சிவபெருமான் காட்சியளிக்கிறார். இங்குள்ள சுயம்புலிங்கத்தில் திரிசூல முத்திரையும் உள்ளது. சுவாமிக்கு வலப்பக்கத்தில் அம்மன் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் 5 வகையான தீர்த்தங்கள் உள்ளன. இதில் மணிகர்ணிகை தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தீர்த்தத்திலே நீராடியதால், அகஸ்திய முனிவர் கடல் நீரை பருகும் சக்தி பெற்றதாகவும், நளன், பிரம்மா, விஷ்ணு, கவுதம் மகமுனி, சூரியன், மகாலட்சுமி, அகத்தியர், கோரக்கசித்தர் வந்து இறைவனை பூஜித்து நற்பலன் பெற்றதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

இத்தலத்தின் மறுபெயர்கள்: புஷ்பவனகாசி, பிதுர்மோக்ஷபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரமபுரம், இரசவாதபுரம். இங்கு எழுந்தருளியுள்ள சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். “பூவனம்என்பதால் இவ்வூர் திருப்புவனம்ஆயிற்று. வழிபடுவோர் வினைகளை தீர்ப்பவராக புஷ்பவனேஸ்வரர் விளங்குகிறார். மூர்த்தி, தலம் தீர்த்தம் மூன்றிலும் பெருமையுடையதாக இத்திருத்தலம் விளங்குகிறது.

தேவாரப்பதிகம்:

தன்னடியார்க்கு அருள்புரிந்த தகவுதோன்றும் சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும் மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும் வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும் துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்பும் தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும் பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 11வது தலம்.

திருவிழா:

வைகாசியில் விசாக விழா, ஆடி முளைக்கொட்டு உற்சவம், புரட்டாசியில் நவராத்திரி கொலு உற்சவம், ஐப்பசியில் கோலாட்ட உற்சவம், கார்த்திகையில் பெரிய தீபம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம், மாசியில் சிவராத்திரி, பங்குனியில் 10 நாள் உற்சவம் ஆகியவை சிறப்பானவைகளாகும்.

பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *