அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவிடைவாசல்

அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவிடைவாசல், அத்திக்கடை வழி, குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.

+91- 4366-232 853,94433 32853, 99431 52999 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் புண்ணியகோடியப்பர்
உற்சவர் திருவிடைவாயப்பர்
அம்மன் அபிராமி
தல விருட்சம் கஸ்தூரி அரளி
தீர்த்தம் ஸ்ரீ தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவிடைவாய்
ஊர் திருவிடைவாசல்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

விடையன் என்னும் சூரிய குலத்து அரசன் கோயில் கட்டி வழிபட்ட தலமாதலால், இத்தலத்திற்கு திருவிடைவாசல்என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் சிவனின் வாகனமாகவும், கொடியாகவும் விடைஉள்ளது. சிவத்தலமான இங்கு விடையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாலும், இத்தலம் திருவிடைவாசல் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டிருக்கிறது. திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் திருவிடைவாசல் என அழைக்கப்பட்டிருக்கிறது. எனவே தான் சம்பந்தர் தனது பாடலில் விடைவாயேஎன குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.

இத்தல சாஸ்தா குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாக அருளுகிறார். இத்தல தட்சிணாமூர்த்தி சிம்மாசன மண்டபத்தில் வீற்றிருக்கிறார். கோயிலின் மேற்கே காவிரியின் கிளைநதியான வெண்ணாறு, தெற்கே வெள்ளையாறு, வடக்கே பாண்டையாறு, கிழக்கே கடல் சூழ இத்தலம் அமைந்துள்ளது. கிழக்குப் பார்த்த கோயில். கோயில் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி, கஜலட்சுமி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலசாஸ்தா, நவகிரகம், பைரவர், அய்யனார், மற்றும் சூரியன், சந்திரன் இருவரும் வாகனத்துடன் உள்ளனர்.

தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவிடைவாய் தலத்திற்காக சம்பந்தர் பாடல்கள் 1917ல் கண்டுபிடிக்கப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டு 275வது தலமானது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு.

தேவாரப்பதிகம்:

மறியார் கரத்து எந்தை அம்மாது உமையோடும்
பிரியாத பெம்மான் உறையும் இடம் என்பர்
பொறிவாய் வரிவண்டு தன்பூம்பெடை புல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே.

ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச்
செவ்வான் மதிவைத்தார் சேர்வுஇடம் என்பர்
எவ்வாயிலும் ஏடு அலர் கோடல் அம் போது
வெவ்வாய் அரவம் மலரும் விடைவாயே.

கரையார் கடல் நஞ்சு அமுது உண்டவர் கங்கைத்
திரையார் சடைத் தீ வண்ணர் சேர்விடம் என்பர்
குரையார் மணியும் குளிர்சந்தமும் கொண்டு
விரையார் புனல்வந்து இழியும் விடைவாயே.

கூசத் தழல் போல் விழியா வருகூற்றைப்
பாசத்தொடும் வீழ உதைத்தவர் பற்றாம்
வாசக்கதிர்ச் சாலி வெண்சாமரையே போல்
வீசக் களிஅன்னம் மல்கும் விடைவாயே.

திரியும் புரம்மூன்றையும் செந்தழல் உண்ண
எரிஅம்பு எய்தகுன்ற வில்லி இடம் என்பர்
கிரியும் தருமாளிகைச் சூளிகை தன்மேல்
விரியும் கொடிவான் விளி செய் விடைவாயே.

கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத்
தள்ளித் தலை தக்கனைக் கொண்டு அவர் சார்வாம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச் செவ்வாய்
வெள்ளை நகையார் நடம்செய் விடைவாயே.

பாதத்து ஒலிபார் இடம்பாட நடம்செய்
நாதத்து ஒலியார் நவிலும் இடம் என்பர்
கீதத்து ஒலியும் கொழுமும் முழவோடு
வேதத்து ஒலியும் பயிலும் விடைவாயே.

எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்துப்
பண்ணார் தருபாடல் உகந்தவர் பற்றாம்
கண்ணார் விழவிற் கடிவீதிகள்தோறும்
விண்ணோர்களும் வந்து இறைஞ்சும் விடைவாயே.

புள்வாய் பிளந்தான் அயன் பூமுடி பாதம்
ஒள்வான் நிலம் தேடும் ஒருவர்க்கு இடமாம்
தெள்வார் புனல்செங்கழுநீர் முகைதன்னில்
விள்வாய் நறவு உண்டு வண்டுஆர் விடைவாயே.

உடை ஏதும் இலார் துவர் ஆடை உடுப்போர்
கிடையா நெறியான் கெழுமும் இடம் என்பர்
அடையார் புரம்வேவமூவர்க்கு அருள்செய்த
விடையார் கொடியான் அழகுஆர் விடைவாயே.

ஆறும் மதியும் பொதிவேணியன் ஊராம்
மாறில் பெரும் செல்வம்மலி விடைவாயை
நாறும் பொழில் காழியர் ஞானசம்பந்தன்
கூறும் தமிழ்வல்லவர் குற்றம் அற்றோரே.

திருஞானசம்பந்தர்

திருவிழா:

சித்ரா பவுர்ணமி இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனை:

திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு வேண்டிகொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

தங்களது வேண்டுதல் நிறைவேற பஞ்ச மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *