அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், கோயில் கண்ணாப்பூர்

அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், கோயில் கண்ணாப்பூர், வலிவலம் (வழி), திருவாரூர் மாவட்டம்.

+91 -4365 – 204 144, 94424 59978 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நடுதறியப்பர், வஸ்ததம்பபுரீஸ்வரர், நடுதறிநாதர்
உற்சவர் பிடாரியம்மன்
அம்மன் மாதுமைநாயகி, ஸ்ரீ வல்லிநாயகி
தல விருட்சம் கல்பனை
தீர்த்தம் கங்காமிர்தம், சிவகங்கை, ஞானாமிர்த்தம், ஞானகுபம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கன்றாய்பூர்
ஊர் கோயில் கண்ணாப்பூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

ஒரு காலத்தில் சிவபெருமான் உமாதேவியாருடன் கயிலாய மலையில் வீற்றிருந்தார். படைத்தல் முதலிய தொழில்கள் பிரமதேவனை முதலாகக் கொண்ட தேவர்களால் நடத்தப்பெற்றன. அப்பொழுது இறைவன் முன்பு சுதாவல்லி என்னும் வித்யாதரப் பெண், உமை உருவம் தாங்கி நடித்து இறைவனுக்கு மகிழ்ச்சி உண்டாக்கினாள். இதைக்கண்ட உமாதேவியார் சுதாவல்லியை நோக்கி தன்னுருக்கொண்ட அவளிடத்தில் சினங்கொண்டு, “நீ மண்ணுலகத்தில் பிறக்கஎனச் சபித்தார். பின் நிகழ்ச்சி அறியாது நடித்த சுதாவல்லி கண்கலங்கினாள். என்ன செய்வேன் என பதறினாள். அப்பொழுது இறைவி,”நீ மண்ணுலகம் அடைந்து சிவனை பூஜித்து எம்மை அடைவாய்எனக்கூறி அருள்பாலித்தாள். அப்படியே சுதாவல்லி தென்தமிழ் நாட்டை அடைந்து, தேவூருக்குத் தென்பால் திகழ்கின்ற இத்திருத்தலத்தில் பரம்பரை சைவ வேளாளர் மரபில் சிவஞானம் நிரம்பப் பெற்று பிறந்து கமலவல்லி என்னும் திருப்பெயருடன் வளர்ந்துவந்தாள். இடையறாது சிவபெருமானை சிந்தித்து வந்தாள். கமலவல்லி சைவ நெறியில் வளர்ந்து வந்தாள். பழவினைத் தொடர்பால் சிவபூசனை செய்துவந்தாள். திருமணப் பருவத்தை அடைந்தாள். பெற்றோர் பார்த்து தக்கவன் என்று கருதிய ஒருவனுக்கு கமலவல்லியை மணம் செய்வித்தனர். அந்த ஊரிலேயே தனி இல்லத்தில் பெற்றோர் இல்லறத்தை நடத்தச் செய்தனர். கமலவல்லி காரைக்கால் அம்மையாரைப் போன்று இவ்விறைவனுக்கு இனியளாய் நடந்துவந்தாள். எனினும் உயிரிறைவனாகிய சிவபெருமானிடத்து பேரன்பு பூண்டு, தக்க அறங்ளை செய்து வாழ்ந்துவந்தாள். சிவனை இடைவிடாது பூஜை செய்தாள். கணவன், கமலவல்லியின் உயர்வை உணராமல் அவள் சிவனைப் பூஜிப்பதில் வெறுப்புகொண்டு சிவலிங்கத்தை ஒரு கிணற்றில் எறிந்துவிட்டான். கமலவல்லி இதை உணர்ந்து, கணவனுக்கு மாறாக சிவனைப் பூஜிப்பதா அல்லது சிவபூஜையை விடுவதா என சிந்தித்தாள். கணவன் அறியாதவாறு சிவபூஜை செய்வது என்ற முடிவிற்கு வந்தாள். தன் வீட்டு பசுங்கன்று கட்டும் தறி(முளை) ஒன்றை சிவலிங்கமாக பாவித்துப் பூஜை செய்துவந்தாள். இப்படி இவள் தன் கருத்துக்கு மாறாக நடக்கிறாள் என்பதை அறிந்த கணவன் சினம்கொண்டு, அக்கன்று கட்டும் தறியைக் கோடரி கொண்டு தாக்கினான். உதிரம் வெளிப்பட்டது. கமலவல்லியின் பக்தியை உலகவரும் அவள் கணவரும் அறிய இறைவன் அக்கட்டுத்தறியில் இலிங்க வடிவம் கொண்டு காட்சியளித்தார்.

கமலவல்லியும், கணவனும் சிவலோகம் அடைந்தனர். கன்று கட்டும் தறி இலிங்கமாக மாறியதால் இத்தலம் கன்றாப்பூர்என வழங்கப்பெற்றது. இந்த இலிங்கத்திருமேனி சுயம்பு மூர்த்தியாகத் தோன்றினாலும் தறியிலிருந்து தோன்றியதால் இறைவன் நடுதறிநாதர்எனப்பட்டார். அந்த கன்றுக்குட்டியின் நடுதறி இருந்த இடமே இன்று நடுதறிநாதர் கோயிலாக விளங்குகின்றது. இன்றும் மூலவரது உச்சியில் கோடறி வெட்டு உள்ளதைக் காணலாம். இடும்பன் என்னும் அசுரன் இத்தலத்தில் நடுதறி நாதரை வழிபட்டு அருள்பெற்றான்.

இவ்வூரில் உள்ள எல்லா நிலங்களும் அருள்மிகு நடுதறிநாதர் பெயரிலேயே பட்டாவாக உள்ளன. தனிப்பட்ட எவருக்கும் சொந்தமாக வேறு பட்டா நிலங்கள் இல்லையாம்.

சிதம்பரம், திருக்காளத்தி, கீழ்வேளூர், நாகைக்காரோணம் முதலிய தலங்களில் மேம்பட்டது கன்றாப்பூர். இத்தலத்தை இருமுறை வழிபட்டால் உலகிலுள்ள எல்லா சிவத்தலங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இத்தலத்தின் வழியே நடந்துசென்றால் இத்தலத்தில் தங்கி வாழ்ந்த புண்ணியத்தைப் பெறலாம். இத்தலத்தில் தங்கி அறம் புரிவோர் நல்ல மனைவி நல்ல மகள் எய்தப்பெற்று, எல்லா நலங்களையும் பெறுவர். கன்றாப்பூர் என்று ஒருமுறை சொன்னாலேயே பாவம் கெடும். நோய் நீங்கும். நல்வாழ்வு கிட்டும்” – இது நம்பிக்கை.

சிறிய அழகான கோயில். ஆலய முகப்பு வரை வாகனங்கள் வரலாம். மூன்று நிலைகள் கொண்ட சிறிய இராஜகோபுரம். கொடிமரமில்லை. உயரமான பீடத்தில் நந்தி உள்ளது. உள்வலம் வந்தால் தீர்த்தக்கிணறு மற்றும் வினாயகர். அடுத்துள்ள மண்டபத்தில் வரிசையாக சிவலிங்கம், வினாயகர் மூர்த்தங்கள் நான்கு, பிடாரியம்மன், சுப்பிரமணியர், சந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், சனீஸ்வரர் சன்னிதிகள் உள்ளன. அடுத்துள்ள நால்வருள் இருவர் அப்பராகவும், இருவர் சம்பந்தராகவும் காட்சிதருகின்றனர். மற்றிருவர் இல்லை. வலம் முடித்து முன்மண்டபம் அடைந்தால் வலப்பால் அம்பாள் சன்னிதி. நின்ற திருக்கோலம். நேரே மூலவர் சன்னிதி. வலப்பக்கம் நடராஜ சபை, இடப்பக்கம் உற்சவ மூர்த்தங்கள். மூலவர் சதுர பீடம். பாணத்தில் வெட்டிய தழும்புள்ளது.

உள்பிரகாரத்தில் விநாயகர், சுந்தரேசுவரர், அறுவகை விநாயகர், முருகன், துர்க்கை, இலிங்கோத்பவர், கற்பகநாதர் முதலிய சன்னதிகள் உள்ளன. தேவாரப்பதிகம்:

விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச் செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றும் செல்கதிக்கு வழிகாட்டும் சிவனே என்றும் துடியனைய இடைமடவாள் பங்கா என்றும் சுடலைதனில் நடமாடும் சோதீ என்றும் கடிமலர்தூய்த் தொடுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

திருநாவுக்கரசர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 120வது தலம்.

திருவிழா:

5 கால பூஜை. வைகாசி விசாகத்தில் மூன்று நாட்கள் பெருவிழா நடைபெறுகிறது. இங்கு உற்சவராக எழுந்தருளியிருக்கும் மாரியம்மனுக்கு (சீதளாம்பிகை) ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் சிறப்பாக பெருவிழா நடைபெறுகிறது.

பிரார்த்தனை:

கண் நோய் நீங்க ஞானகுப தீர்த்தத்தில் நீராடியும், குழந்தைப்பேறு, புகழ் பெற இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடியும் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் சாட்டியக்குடி வந்து அங்கிருந்து இடப்பக்கமாக கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் 2 கீ மீ சென்று ஆதமங்கலம் தாண்டி கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு என்று கேட்டு அங்கு வலப்புரமாக பிரியும் சாலையில் 1 கீ மீ வந்தால் இத்தலத்தை அடையலாம். இரயிலில் வருவோர் பாசஞ்சர் இரயில் ஏரி, மாவூர் ரோடு நிலையத்தில் இறங்கி அங்கிருந்து மருதூர் வந்து அங்கு கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு எனும் கை காட்டி உள்ள இடத்தில், இடப்பக்கமாக வந்தால் இத்தலத்தை அடையலாம். மினிபஸ் வசதி உள்ளது. பேருந்தும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *