அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில், திருநெல்லிக்கா
அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில், திருநெல்லிக்கா, திருவாரூர் மாவட்டம்.
+91- 4369-237 507, 237 438 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நெல்லிவனநாதர், நெல்லிவனேஸ்வரர் | |
அம்மன் | – | மங்கள நாயகி | |
தல விருட்சம் | – | நெல்லிமரம் | |
தீர்த்தம் | – | பிரம, சூரிய தீர்த்தங்கள் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருநெல்லிக்கா | |
ஊர் | – | திருநெல்லிக்கா | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
மூலவர் நெல்லிவனநாதர். அம்மன் மங்களநாயகி. தேவ லோகத்தில் உள்ள கற்பகம், பாரிஜாதம், சந்தானம், அரிசந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் வேண்டியதைத் தரக்கூடிய ஆற்றல் பெற்றவை. இதனால் இந்த மரங்களுக்கு மிகுந்த கர்வம் உண்டாகி விட்டது. ஒரு முறை துர்வாசரை மதிக்காததால், அவர்,”நீங்கள் பூமியில் புளிக்கும் கனிகளைக் கொண்ட நெல்லி மரங்களாக மாறுங்கள்” என சாபமிட்டார். அவை சாப விமோசனமடைந்து மீண்டும் தேவலோகம் செல்லவும், நெல்லி மரத்தின் அருமையை பூலோகத்தினர் அறிந்து கொள்ளவும், ஈசன் அந்த நெல்லி மரத்தின் அடியிலேயே சுயம்புலிங்கமாகத்தோன்றினார். ஐந்து தேவ மரங்களும் இறைவனுக்கு தொண்டு செய்தபின் தேவலோகத்திற்கு சென்றன. அவற்றின் வழியாக வந்த நெல்லி மரங்கள் காலங்காலமாக இறைவனுக்கு நிழல் தந்து தொண்டு செய்யும் பாக்கியத்தை பெற்றன. நெல்லி மரத்தின் அடியில் தோன்றியதால் இறைவன் “நெல்லிவனநாதர்” என அழைக்கப்படுகிறார். இறைவன் தங்கிய தலமும் “திருநெல்லிக்கா” என அழைக்கப்பட்டது.
திருவாரூரில் வாழ்ந்த சிவபக்தர் ஒருவர் இத்தலம் வந்து இறைவனை தரிசித்தார். அப்போது அங்கு கொடிய மிருகங்கள் அனைத்தும் ஒற்றுமையாய் இருப்பதையும், தேவகணங்கள் நாள்தோறும் வந்து இறைவனை தரிசித்து விட்டு பொழுது விடிவதற்கு முன் சென்று விடுவதையும் பார்த்து சோழ மன்னனிடம் தெரிவித்தார். சோழ மன்னன் மகிழ்ச்சியடைந்து அந்த தலத்தை பார்த்து, அங்கிருந்த காடுகளை அழித்து, நகரமாக்கி பெரிய கோயிலைக் கட்டினான். “ஆமலா” என்பது சமஸ்கிருதத்தில் நெல்லியை குறிக்கும். எனவேதான் இங்குள்ள இறைவனுக்கு “ஆமலகேசன்” என்ற திருநாமம் உண்டு. ஈசனுக்கு இங்கு கோயிலைக் கட்டியதால் சோழமன்னனும் பிற்காலத்தில் ஆமலகேச சோழன் என அழைக்கப்பட்டான். ஆமலகேச சோழனின் மகன் உத்தம சோழன். இவனது மனைவி பதும மாலை. இவர்களுக்கு நெடுங்காலமாக புத்திர பாக்கியம் இல்லை. இருவரும் இத்தலம் வந்து இறைவனிடம் வேண்டினார்கள். அப்போது அன்னை பராசக்தியே மூன்று வயது பெண்ணாக வடிவம் கொண்டு மன்னனின் மடியில் வந்து அமர்ந்தாள். அப்போது வானில் ஒரு அசரீ தோன்றி, அம்பாளே குழந்தை வடிவில் வந்துள்ளதாகவும், அவளை “மங்களநாயகி” என பெயரிட்டு வளர்த்து வரும்படியும் கூறியது. மன்னன் அக்குழந்தையை வளர்த்து வந்தான். உத்தம சோழனின் மறைவுக்கு பின் தாயார் வளர்ப்பில் மங்களநாயகி பருவப்பெண்ணாக வளர்ந்தாள். ஒரு சமயம் மங்களநாயகி திருவாரூர் கோயிலில் தரிசனம் செய்து கொண் டிருந்த போது, “வரும் ஆவணித் திங்கள் முதலாம் வெள்ளியில் திருநெல்லிக்கா வந்து உன்னை திருமணம் செய்வோம்” என்று இறைவனின் திருவாய் மொழி கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தாள். ஆவணி முதல் வெள்ளியில் ஈசன் தேவர்கள் சூழ, வேதமந்திரங்கள் ஒலிக்க, மங்களநாயகிக்கு மாலை சூடி மாங்கல்யம் அணிவித்து திருமணம் செய்து கொண்டார்.
5 நிலைகள் கொண்ட இராஜகோபுரம். பிரகாரத்தில் நால்வர், வினாயகர், பிரம்மா, சுப்பிரமணியர், சனீஸ்வரர், தலமரம் நெல்லி, மரத்தினடியில் நெல்லிவனநாதர், பைரவர், நவங்கிரகங்கள் ஆகியன உள்ளன. வலம் முடித்து படிகளேறி முன்மண்டபம் சென்றால், இடப்பால் சோமாஸ்கந்தர் தரிசனம். எதிரில் நடராஜ சபை உள்ளது. மண்டபத்தின் மேற்புறத்தில் நவக்கிரகங்கள், பன்னிரு ராசிகள், தசாவதாரங்கள் முதலியன தீட்டப்பட்டுள்ளன.
நேரே தெரிவது மூலவர். மேற்கு நோக்கிய திருமேனி. கோஷ்ட மூர்த்தங்களாக தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, துர்கை உள்ளனர். அம்பாள் தெற்கு நோக்கிய திருமேனி. மண்டபத்திலேயே உள்ளார். கோயில் கோபுரங்கள் வண்ணப்பூச்சுடன் அழகாக உள்ளன.
கோயிலை ஒட்டியே தென்புரத்தில் பிரம்மதீர்த்தம் உள்ளது. தீர்த்தக்கரையில் படித்துறை வினாயகர் உள்ளார். மேற்கு பார்த்த இத்தலத்தில் ஆண்டு தோறும் மாசி 18 முதல் ஓரு வார காலத்திற்கு மாலை வேளையில் சூரிய ஒளிக் கதிர்கள் இங்குள்ள மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடக்கும். பிறத்தல், தரிசித்தல், நினைத்தல், இறத்தல் முதலியவைகளால் வெவ்வேறு இடங்களில் கிடைக்கும் புண்ணிய பயன்கள் அனைத்தும் இந்த ஒரே தலத்தில் கிடைத்து விடும். இத்தல இறைவனை பிரம்மா, விஷ்ணு, சூரியன், சந்திரன், சனி, கந்தர்வர், தேவலோக மரங்கள் வழிபாடு செய்துள்ளன.
தேவாரப்பதிகம்:
வெறியார் மலர் கொன்றை யந்தார் விரும்பி மறியார் மலைமங்கை மகிழ்ந்து தவன்தான் குறியாற் குறிகொண்டு அவர்போய்க் குறுகும் நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
–திருஞானசம்பந்தர்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 117வது தலம்.
திருவிழா:
சித்திரையில் முதல் பெருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுகின்றது. தவிர, ஆவணி முதல் வெள்ளிக்கிழமையில் அம்பாள் கல்யாண உற்சவம், நவராத்திரி, சஷ்டி, தைப்பூசம், தைமாதம் கடைசி வெள்ளிக்கிழமையில் திருவிளக்கு வழிபாடு முதலிய உற்சவ விசேஷங்களும் நடைபெறுகின்றன.
பிரார்த்தனை:
திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கோபம் குறையவும், குஷ்டரோகம் நீங்கவும் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள்நிறைவேறியவர்கள்இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
வழிகாட்டி:
திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் மார்க்கத்தில் சுமார் 15 கீ.மீ தொலைவில் நால்ரோடு அல்லது கூட்டுரோடு என்றழைக்கப்படும் பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்கு இறங்கி 4 கீ.மீ மேற்கு நோக்கி செல்லும் சிறிய சாலையில் புதூர் தாண்டிச் சென்றால் இருப்புப்பாதை வருகிறது. இருப்புப்பாதை கடந்தவுடன் திருநெல்லிக்காவல் கிராமம் உள்ளது.
மிகச்சிறிய ஊர் அல்லது சற்றே பெரிய கிராமம். ஊரின் மேற்கு கோடியில் கோயில் உள்ளது. திருவாரூரிலிருந்து நகரப்பேருந்து உள்ளது. திருவாரூரிலிருந்து செருவாமணி செல்லும் நகரப்பேருந்தும் இத்தலத்தின் வழியே செல்கின்றது.
திருவாரூர் – திருத்துறைப்பூண்டி இருப்புப்பாதையில் உள்ள தலம். பாசஞ்சர் ரயில்கள் நின்று செல்லும். கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலும் நின்று செல்கின்றது.
Leave a Reply