அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தேங்கூர்
அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தேங்கூர், திருவாரூர் மாவட்டம்.
+91- 94443- 54461 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வெள்ளிமலைநாதர் | |
அம்மன் | – | பெரியநாயகி | |
தல விருட்சம் | – | தென்னை | |
தீர்த்தம் | – | சிவகங்கை | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருத்தேங்கூர், திருத்தெங்கூர் | |
ஊர் | – | திருத்தங்கூர் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
முன்னொரு காலத்தில் உலகம் ரளயத்தினால் அழிந்தது. இதை மறுபடியும் உண்டாக்கும்படி விஷ்ணுவிடம் சிவன் கூறினார். விஷ்ணு தன் நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மனை உருவாக்கி, உலகைப்படைக்கும்படி ஆணையிட்டார். உலகமும் உருவானது. ஓரிடத்தில் பிரளய காலத்திலும் அழியாத வில்வவனம் இருந்தது. அவ்விடம் மகிமையானதாக இருக்க வேண்டும் எனக்கருதிய இராகு, கேது உள்ளிட்ட நவக்கிரகங்கள், அவ்வனத்தில் இருந்த அகஸ்திய நதியின் கரையில் ஆளுக்கு ஒரு இலிங்கத்தை உருவாக்கி, ஆயிரம் ஆண்டுகள் பரமசிவனைக் குறித்து தவமிருந்தனர். பரமசிவன் அங்கு தோன்றி, புதிய உலகத்தை மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நவக்கிரகத்தை தலைவராக நியமித்தார். உலகில் மக்கள் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பலன்களை அளிக்கும் அதிகாரத்தையும் வழங்கினார். பிரம்மன் இத்தலத்துக்கு வந்து, நவக்கிரகங்கள் அமைத்த இலிங்கங்கள் கண்டு மகிழ்ந்து அவ்விடத்திற்கு “நவக்கிரகபுரம்” எனப் பெயரிட்டார். இதன்பின் தேவேந்திரன் இங்கு வந்து வெள்ளிமலை மன்னவனுக்கு இலிங்கம் அமைத்தான். இறைவன் “வெள்ளிமலை நாதர்” என்றும், அம்பிகை “பிரகன்நாயகி” என்றும் அழைக்கப்பட்டனர்.
இக்கோயிலில் மகாலட்சுமி தங்கி சிவபூஜை செய்திருக்கிறாள். வெண்தாமரையும், செந்தாமரையும் கலந்து வளர்ந்த குளம் ஒன்று ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்தது. தற்போது, அக்குளம் தூர்ந்து விட்டது. இருப்பினும், இத்தலத்து சிவன் செல்வத்தை வாரி வழங்குபவராக உள்ளார். மகாலட்சுமியே பூஜை செய்த இடம் அல்லவா? சுவாமியை “ரஜதகிரீஸ்வரர்” என்றும் சொல்வார்கள். “ரஜதகிரி” என்றால் “வெள்ளிமலை” எனப் பொருள். இது மேற்கு பார்த்த கோயிலாகும். மேற்கு பார்த்த கோயிலுக்கு, கிழக்கு பார்த்த கோயிலை விட அதிக சக்தியுண்டு. மேற்கு சிவ தரிசனம் ஆயிரம் மடங்கு பலனைத்தரும் என்று வாமதேவர் என்ற மகான் தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார். கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும் என்பது பொதுவான விதி. ஆனால், மேற்கு நோக்கிய இலிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம். விழாக்கள் ஏதும் இத்தலத்தில் இல்லை. வழக்கமான பூஜைகளே நடக்கின்றன. இது ஒரு சிறிய கோயில். பழமையான கோயில் என்பதால் களை இல்லை. இக்கோயிலில் நவக்கிரக இலிங்கங்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டு வருவது விசேஷம். அனைத்தும் கல்லால் ஆனவை. பெரிதும் சிறிதுமாக உள்ள இந்த லிங்கங்கள் சூரியலிங்கம், சந்திரலிங்கம், அங்காரகலிங்கம், புத லிங்கம், குருலிங்கம், சுக்ரலிங்கம், சனீஸ்வர லிங்கம், இராகுலிங்கம், கேதுலிங்கம் எனப்படுகின்றன. கோயில் பிரகாரத்தில், இந்த இலிங்கங்கள் வரிசையாக உள்ளன. இராகு, கேது பெயர்ச்சிகாலத்தில் சிவனோடு ஐக்கியமாகி விட்ட இந்த இலிங்கங்களைத் தரிசிப்பதன் மூலம், கிரக தோஷங்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. இலிங்க வடிவில் நவக்கிரகங்கள் இருந்தாலும், சாதாரணமாக அமைக்கப்படும் நவக்கிரக மண்டபமும் இங்கு உள்ளது. அம்பாள் சன்னதி கோயிலின் நுழைவு வாயிலில் வலது கைப்பக்கம் உள்ளது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
தேவாரப்பதிகம்:
தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலை வெண்பொடியணி சுவண்டர் எல்லி சூடிநின்றாடும் இறையவன் இமையவர் ஏத்தச் சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற வில்லினார் திருத்தெங்கூர் வெள்ளியங் குன்றுஅமர்ந் தாரே.
–திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 116வது தலம்.
திருவிழா:
வைகாசி விசாகத்தன்று மட்டும் சிறப்பு பூஜை நடத்தப்படும்.
பிரார்த்தனை:
இங்கு வேண்டிக்கொள்ள லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
Leave a Reply