அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம்
அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம், வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.
91-4374-264 586, 4374-275 441, 94421 75441 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பாதாளேஸ்வரர், பாதாள வரதர் | |
அம்மன் | – | அலங்காரவல்லி, அலங்கார நாயகி | |
தல விருட்சம் | – | வன்னி | |
தீர்த்தம் | – | பிரம்மதீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | அரதைப்பெரும்பாழி | |
ஊர் | – | அரித்துவாரமங்கலம் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சம்பந்தர் |
பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தன்னில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படுகிறது. இதில் சிவனது பாதத்தையும், திருமுடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்ற நிபந்தனையில் போட்டி ஆரம்பமாகிறது. பிரம்மா அன்னப்பறவையில் ஏறி திருமுடியை தரிசிக்க கிளம்புகிறார். ஆனால் திருமுடி தரிசனம் கிடைக்கவில்லை. அப்போது சிவனின் தலையிலிருந்து தாழம்பூ கீழே வந்து கொண்டிருந்தது. தாழம்பூவை பார்த்த பிரம்மா, தான் சிவனின் திருமுடியைத் தரிசித்ததாக பொய் கூறும்படி சொன்னார். தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. இதையறிந்த சிவன் தாழம்பூவை பூஜைக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்றும், பிரம்மனுக்கு பூமியில் கோயில் இருக்க கூடாது என்றும் சபித்தார். விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவனின் திருவடியை பார்க்க முயன்றார். ஆனால் முடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். விஷ்ணு இத்தலத்தில் தான் பூமியை துவாரம் போட்டு சிவனின் திருவடி தரிசனம் தேடினார். எனவேதான் இத்தலம் – ஹரி(விஷ்ணு) துவார (பூமியை துளையிடுதல்) மங்கலம்(ஊர்)- “அரித்துவாரமங்கலம்” ஆனது. சிவனின் திருவடி தரிசனம் காண விஷ்ணு பூமியை தோண்டிய பள்ளம் இன்றும் மூலஸ்தானத்தில் உள்ளது. இதை கல்வைத்து மூடியுள்ளார்கள். சிவன் பன்றியின் கொம்புகளுள் ஒன்றை முறித்து, தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. சிவனின் “பஞ்ச ஆரண்ய (காடு)” தலங்களில் இதுவும் ஒன்று.
திருக்கருகாவூர் உஷகாலம், அவளிவநல்லூர் காலசந்தி, அரித்துவாரமங்கலம் உச்சிகாலம், ஆலங்குடி சாயரட்சை, திருக்கொள்ளம்புதூர் அர்த்தஜாம பூஜை. இந்த 5 தலங்களையும் ஒன்றாக தரிசிப்பது சிறப்பு.
அரித்துவாரமங்கலத்தில் உள்ள இறைவனை தரிசித்தால் “ஹரித்துவார்” தரிசித்த பலன் கிடைக்கும் என்பர். பாதாள ஈஸ்வரரை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும். அம்மன் துர்க்கை அம்சமாக இருப்பதால் துர்க்கைக்கு தனி சன்னதி கிடையாது. சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும். சிவனுக்கு வலது பக்கம் அம்மன் கிழக்கு நோக்கி இருப்பதால் இதை “கல்யாண கோலம்” என்பார்கள். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி சிறப்பு. இத்தலத்தில் மட்டும் 7 விநாயகர் அருள்பாலிக்கறார்கள்.
மூலவர் சுயம்பு மூர்த்தி. கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரம். பிரகாரத்தில் விநாயகர், பதஞ்சலி வியாக்ரபாதருடன் நடராஜர், காசிவிஸ்வநாதர், சனிபகவான், சூரியன், சந்திரன், பைரவர், சம்பந்தர், சுந்தரர், லிங்கோத்பவர், சப்தமாதர்கள் உள்ளனர்.
தேவாரப்பதிகம்:
மறையர் வாயின்மொழி மானாடு வெண்மழுக். கறைகொள் சூலம்முடைக் கையர் காரார் தரும் நறைகொள் கொன்றை நயந்தார் கரும்சென்னிமேல் பிறையார் கோயில் அரதைப் பெரும்பாழியே.
–திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 99வது தலம்.
திருவிழா:
வைகாசி விசாகம், மார்கழி திருவாதிரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தவிர சிவனது அனைத்து திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை:
திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அலங்காரவல்லியை தரிசித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இருப்பிடம் :
கும்பகோணத்திலிருந்து (20 கி.மீ.) அம்மாபேட்டை செல்லும் வழியில் அரித்துவாரமங்கலம் உள்ளது. தஞ்சாவூரிலிருந்து (30 கி.மீ) நாகப்பட்டினம் செல்லும் வழியில் அம்மாபேட்டையில் இறங்கி வடக்கே 8 கி.மீ.தூரத்தில் அரித்துவாரமங்கலம் உள்ளது. தஞ்சாவூரிலிருந்து நேரடி டவுன் பஸ்வசதியும் உள்ளது.
Leave a Reply