அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம்
அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம், காரைக்கால், புதுச்சேரி.
+91- 4368 – 226 616 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | யாழ்மூரிநாதர் | |
அம்மன் | – | தேனாமிர்தவல்லி | |
தல விருட்சம் | – | வாழை | |
தீர்த்தம் | – | பிரம்ம தீர்த்தம் | |
ஆகமம் | – | மகுடாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருத்தருமபுரம் | |
ஊர் | – | தருமபுரம் | |
மாவட்டம் | – | புதுச்சேரி | |
மாநிலம் | – | புதுச்சேரி | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர் |
சிவன், மார்க்கண்டேயரை பிடிக்க வந்த எமதர்மனை, திருக்கடையூரில் சம்காரம் செய்து அவரது பதவியை பறித்தார். இதனால், பூமியில் பிறந்த உயிர்கள் அனைத்தும் இறப்பின்றி பெருகின. பாரம் தாங்காத பூமிதேவி, எமதர்மனை உயிர்ப்பிக்கும்படி வேண்டினாள். அதேசமயம் எமதர்மனும் தன் தவறை மன்னித்து மீண்டும் பணி வழங்கும்படி சிவனிடம் வேண்டிக்கொண்டான். எமனுக்கு அருள் செய்வதற்காக சிவன், பூலோகத்தில் தவமிருந்து தன்னை வழிபட்டுவர இழந்த பணி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி எமன் சிவத்தல யாத்திரை சென்றான். இத்தலம் வந்த எமதர்மன் தீர்த்தம் உண்டாக்கி, தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் பணி கிடைக்கப்பெறும் என்றார். எமன் தனக்கு அருள் செய்ததுபோலவே இங்கு அருள வேண்டும் என வேண்டவே, சிவன் இங்கே தங்கினார்.
எருக்கத்தம்புலியூர் எனும் ஊரில் வசித்த நீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். திருஞானசம்பந்தரின் சிவ பணியை அறிந்த நீலகண்ட யாழ்ப்பாண நாயன்மாரும், அவரது மனைவி மதங்கசூளாமணியும் அவருடன் இணைந்து சிவத்தலயாத்திரை மேற்கொண்டனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாட அதற்கேற்ப யாழ்ப்பாணர் இசையமைப்பார். சம்பந்தர் பாடும் அனைத்து பாடல்களுக்கும் இனிமையாக யாழ் இசைக்கும் திறமை பெற்றிருந்ததால் யாழ்ப்பாணர் சற்று கர்வம் கொண்டார். அவரது கர்வத்தை அடக்க சிவன் எண்ணம் கொண்டார்.
அவர்கள் இத்தலத்திற்கு வந்தபோது, சம்பந்தர் பதிகம் பாடினார். யாழ்ப்பாணர் எவ்வளவு முயன்றும் அப்பாடலுக்கு சரியாக இசைக்க முடியவில்லை. கலங்கிய யாழ்ப்பாணர் கலையில் தான் தோற்றுவிட்டதாக கருதி யாழை முறித்து, தன் உயிரை விடச் சென்றார். அப்போது சிவன் அவருக்கு காட்சி தந்து யாழை வாங்கி, சம்பந்தரின் பதிகத்திற்கேற்ப வாசித்து, நடனம் ஆடினார். தன் நிலை உணர்ந்த யாழ்ப்பாணர் கர்வம் நீங்கப்பெற்றார்.
யாழை இசைத்து, யாழ்ப்பாணரின் கர்வத்தை அடக்கியவர் என்பதால் இத்தலத்து சிவன் “யாழ்மூரிநாதர்” என அழைக்கப்படுகிறார். கருவறையில் இலிங்க வடிவில் உள்ள சுவாமி எப்போதும் வெள்ளிக்கவசத்துடன் தரிசனம் தருகிறார். சிவன் யாழ் இசைத்தபோது அம்பாள் தேனும், அமிர்தமும் சேர்ந்தது போல இனிமையாக பாடி மகிழ்ந்தாளாம். எனவே இவளை, “தேனாமிர்தவல்லி” என்கின்றனர். இவள் இடது கையை தொடையில் வைத்தபடி தனிச்சன்னதியில் அருளுகிறாள். குரல் வளம் வேண்டுபவர்கள் இவளுக்குப் புத்தாடை சாத்தி, பூஜைகள் செய்தும், இசை கற்பவர்கள் சிவன், தெட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள். சிவன் யாழ் இசைத்தபோது, குயில்களும் தங்களது குரல்களால் கூவி பாடினவாம். இதனை திருஞானசம்பந்தர், “எழில் பொழில் குயில் பயில் தருமபுர பதியே” என்று பாடியிருக்கிறார். வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் சம்பந்தருக்கு குருபூஜை நடக்கிறது. அன்று சிவன் வீதியுலா வந்து சம்பந்தருக்கு காட்சி தருகிறார். தர்மன் உண்டாக்கியதாக கருதப்படும் தீர்த்தம் பிரகாரத்தில் உள்ளது. இனிப்புச்சுவையுடன் இருக்கும் இந்த நீரை பருகினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தின் தலவிநாயகர் கற்பகவிநாயகர் எனப்படுகிறார். 3 நிலையுடன் கூடிய இராஜ கோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
கோஷ்டத்தில் இலிங்கோத்பவரை பிரம்மா, திருமால் இருவரும் வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர்.
பிரகாரத்தில் விஸ்வநாதர், முருகன், இலிங்கோத்பவர், மகாவிஷ்ணு ஆகியோர் இருக்கின்றனர். கோஷ்டத்தில் உள்ள துர்க்கைக்கு பின்புறத்தில் மகிஷாசுரன் இருக்கிறான். சிவன் யாழ் இசைத்தபோது, அவரது அம்சமான தெட்சிணாமூர்த்தி இசையை விரும்பிக் கேட்டார். இசையில் மகிழ்ந்த அவர் தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும்விதமாக இங்குள்ள தெட்சிணாமூர்த்தி பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். பொதுவாக மஞ்சள் நிற ஆடைதான் தெட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால், இங்கு காவி நிற ஆடை சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். தெட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தைக் காண்பது அபூர்வம். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால் காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள். இங்கு சிவன் தன் கையில் யாழ் இசைத்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு வலப்புறம் சம்பந்தரும், இடப்புறத்தில் யாழ்ப்பாண நாயனாரும் இருக்கின்றனர்.
தேவாரப்பதிகம்:
மாதர் மடப்பிடியும் மடஅன்னமும் அன்னதோர் சடையுடைம் மலைமகள் துணையென மகிழ்வர் பூதஇனப்படை நின்றிசை பாடவும் அடுவர் அவர்படர் சடைந் நெடு முடியதொர் புனலர் வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்டிரை யிரைந் நுரை கரைபொரு துவிம்மி நின்றயலே தாதவிழ் புன்னை தயங்குமலர்ச் சிறை வண்டறை யெழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே.
–திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 51வது தலம்.
திருவிழா:
வைகாசி திருவிழா, சிவராத்திரி, திருக்கார்த்திகை.
பிரார்த்தனை:
இங்கு ஆயுள் விருத்தி ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்து சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமண தோசம், புத்திர தோசம் உள்ளவர்கள் உத்திராட நட்சத்திர தினத்தில் துர்க்கைக்கு அபிசேகங்கள் செய்து வேண்டுகிறார்கள்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply