அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில், அகஸ்தியம்பள்ளி

அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில், அகஸ்தியம்பள்ளி, (வழி) வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-4369 – 250 012 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அகத்தீஸ்வரர்
அம்மன் மங்கை நாயகி, பாகம்பிரியாள்
தல விருட்சம் வன்னி, அகத்தி
தீர்த்தம் அகத்திய தீர்த்தம், அக்னிதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அகஸ்தியான்பள்ளி
ஊர் அகஸ்தியன் பள்ளி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் திரண்டிருந்தனர். இதனால் வடதிசையிலிருந்த கைலாயம் தாழ்ந்தது. தென்திசை உயர்ந்தது. இதை சமப்படுத்த, சிவபெருமான் அகத்தியரை அழைத்து, தென்திசைக்கு செல்லும்படி உத்தரவிட்டார். சிவனின் ஆணைப்படி அகத்தியர் தென்திசைக்கு சென்றார். செல்லும் வழிகளில் சிவலிங்கப் பிரதிஷ்டைசெய்து வழிபாடு நடத்தினார். அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்தில் அகத்தியருக்கு சிவன் திருமணக்காட்சி தந்து அருளினார். இதனால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர்ஆனார். அகத்தியர் திருவுருவம் கோவிலில் உள்ளது. குலசேகர பாண்டியனுக்கு இருந்த வியாதிபோக்க இத்தலத்தில் உற்சவம் நடத்தி நீங்கப் பெற்றதாக வரலாறு. எமன் வழிபட்ட சிறப்புடையது.

இராஜகோபுரம் மூன்று நிலைகளை உடையது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே திசை பார்த்து உள்ளன. இராசராசன் மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு உள்ளன. சுவாமி சன்னதியில் உள்ள குளம் அக்னி புஷ்கரணி எனப்படுகிறது. மக்கள் இக்கோயிலை அகஸ்தியர் கோயில் என்றே கூறுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையின் பெயர்ப்பலகையும் அகஸ்தியர் கோயில் என்றே எழுதப்பட்டுள்ளது.

தேவாரப்பதிகம்:

ஓதியெல்லாம் உலகுக்கொர் ஒண்பொரு ளாகிமெய்ச் சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும் ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே.

திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 126வது தலம்.

திருவிழா:

சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.

பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக, இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *