அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம்
அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 435 – 244 9830, 244 9800 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | உமாமகேஸ்வரர் (பூமிநாதர்) | |
அம்மன் | – | அங்கவள நாயகி (தேக சுந்தரி) | |
தல விருட்சம் | – | அரசமரம், வில்வம் | |
தீர்த்தம் | – | பூமி தீர்த்தம் | |
ஆகமம் | – | காமிய ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருநல்லம், திருவல்லம் | |
ஊர் | – | கோனேரிராஜபுரம் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர் |
ஒரு முறை புரூரவஸ் என்ற மன்னனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. இந்த நோயால் மிகவும் வருந்திய மன்னன், நோய் தீருவதற்காக பல திருத்தலங்கள் சென்று வழிபட்டான். கடைசியில் காவிரித்தென்கரையில் உள்ள இத்தலம் வந்து வழிபாடு செய்ததும் அவனுக்கு நோய் தீர்ந்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்த மன்னன் கோயிலுக்கு காணிக்கையாக, சிவசன்னதி விமானத்தை பொன் தகட்டால் வேய்ந்தான். அத்துடன் வைகாசி விசாக தினத்தில் திருவிழா நடக்கவும் ஏற்பாடு செய்தான் என்பது வரலாறு.
துர்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். எமதர்மன், திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தை போக்க இந்த துர்கையை வழிபாடு செய்துள்ளான்.
ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள். நந்தி பகவான் இங்கு வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. எனவே பிரதோஷ காலத்தில் இங்கு வழிபாடு செய்தால் ஒன்றுக்கு பல மடங்கு பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. அஷ்டதிக் பாலகர்கள் இங்கு வழிபாடு செய்ததன் நினைவாக கோயில் விமானத்தின் மேல் அஷ்டதிக் பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள். 16 சித்தர்கள் இங்கு வழிபாடு செய்துள்ளனர். மூன்று சண்டிகேஸ்வரர் உள்ளனர்.
பெருமாள் தாரை வார்த்து கொடுக்க சிவபார்வதி திருமணக்காட்சியை அகத்தியர் இங்கு தரிசனம் செய்துள்ளார். பூமாதேவி இங்கு வழிபாடு செய்திருக்கிறாள். எனவே இத்தல இறைவனுக்கு “பூமிநாதர்” என்ற பெயரும் உண்டு.
வரகுணபாண்டியன் என்ற மன்னனுக்காக, சிவனும் பார்வதியும் பஞ்சலோகத்தால் ஆன குழம்பை குடித்து, சுயம்பு மூர்த்தியாக நடராஜர் சிவகாமி அம்மனாக காட்சி கொடுத்துள்ளனர். மதுரை, உத்திரகோசமங்கை, கோனேரிராஜபுரம் ஆகிய இம்மூன்று தலங்களிலும் நடராஜருக்கு திருவீதிவுலா கிடையாது. பிரமாண்டமாக நடமாடும் இத்தல நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகிய அனைத்து அம்சங்களும் இருப்பது சிறப்பம்சமாகும். இப்பகுதி மக்களுக்கு நடராஜர் ஆலயம் என்றால் தான் தெரிகிறது.
இங்குள்ள சனிபகவான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர். மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணையில் தீபம் போட வேண்டும். சனி தோஷத்தில் பாதிக்கபட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. அகத்தியர் வழிபட்ட தலம். சிவன் சன்னதி கோஷ்டத்தின் பின்புறம் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருமே அருள்பாலிக்கிறார்கள். இக்கோயில் ராஜராஜ சோழனின் பாட்டி கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன் மாதேவியால் கட்டப்பட்டது. வைத்தியநாதருக்குத் தனி கோயில் உள்ளது. இத்தல விநாயகர் “அரசமர விநாயகர்” என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டதுவாரபால விமானம் எனப்படும். இத்தல இறைவன் நாலரை அடி உயர சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரே கொப்பில் 13 தளம் உள்ள வில்வ இலை கோயில் தல விருட்சமாக உள்ளது.
தேவாரப்பதிகம்:
அந்த மதியோடு மரவச் சடைதாழ முந்தி யனலேந்தி முதுகாட்டு எரியாடி சிந்தித்து எழவல்லார் தீராவினை தீர்க்கும் நந்தி நமையாள் வான்நல்ல நகரானே.
–திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 34வது தலம்.
திருவிழா:
வைகாசி விசாகத்திலும், மார்கழி திருவாதிரையிலும் பிரமோத்சவத் திருவிழா இரண்டு முறை நடக்கிறது.
பிரார்த்தனை:
சகல விதமான நோய்களும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாதரை வழிபட்டால் குணமாகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. வீடு கட்டுவதில் சிக்கல், நிலப்பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமண தடை உள்ளவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், வியாபாரத்தில் பிரச்னை உள்ளவர்கள் திங்கள் கிழமையில் இங்குள்ள சிவனுக்கும் பார்வதிக்கும் அபிஷேகம் செய்து “வசுதரா” என்ற யாகம் செய்தால் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. திரிபுரத்தை எரித்த “திரிபுரசம்ஹாரமூர்த்தி” இத்தலத்தில் தனியாக அருள்பாலிக்கிறார். இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் எமபயம், எதிரிகளின் தொந்தரவு விலகும் என்பது ஐதீகம். படிப்பில் மந்தம் உள்ளவர்கள், ஞாபக சக்தி வேண்டுபவர்கள் இங்குள் ஞானக்குழம்பு தீர்த்தம் சாப்பிட்டால் சிறந்த பலன் உண்டு.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பொருள் வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
Leave a Reply