அருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில், திருவிடைமருதூர்
அருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 435- 2460660 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மகாலிங்கம் | |
அம்மன் | – | பெருமுலையாள் | |
தல விருட்சம் | – | மருதமரம் | |
தீர்த்தம் | – | காருண்யமிர்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஆகமம் | – | காமிகம் | |
புராணப் பெயர் | – | மத்தியார்ச்சுனம் | |
ஊர் | – | திருவிடைமருதூர் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் |
அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தடைந்தார். உமாதேவியை நினைத்து தவம் செய்தார். உமையும் முனிவர்க்கு காட்சி தந்தார். முனிவர்கள் முறைப்படி இறைவியை வழிபட்டு விட்டு இறைவனையும் காண வேண்டும் என்று கூற, உமையம்மை முனிவர்களுக்காக இறைவனை எண்ணி சிவதவமிருக்கிறார். இறைவன் உமையின் தவத்திற்கு இரங்கி உமைக்கும் முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார். காட்சி தந்து விட்டு ஜோதி இலிங்கத்தை இறைவனே வழிபடலானார். வியப்பு கொண்டு உமையம்மை, “இறைவனே. பிரம்மன் முதலானோரே தங்களை வழிபடுவதுதான் முறை. தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே” என்று வினவ, “உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே” என்றார். நம்மை நாமே பூசிப்பதற்கு காரணம், இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர். அதனாலே பூசிக்கிறேன் என்றார். முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை, காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெற்றனர் என்று தலவரலாறு கூறுகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமரூதூர் மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள். இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சந்நிதி உள்ளது. வேறு எங்கும் இல்லை. தனி சந்நிதி இங்கு மட்டுமே. இக்கோயிலில் அம்பாள் சந்நிதிக்குத் தெற்குபக்கம் மூகாம்பிகை சந்நிதி உள்ளது. இக்கோயிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோயிற் கோபுர அமைப்பில் அமைந்து விளங்குகிறது. இந்த சந்நிதியில் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலய அமைப்பு முறைப்படி திருவலஞ்சுழி–விநாயகர், சுவாமிமலை–முருகன், சேய்ஞலூர்–சண்டேசுரர், சூரியனார்கோயில்–சூரியன் முதலான நவகோள்கள், சிதம்பரம்–நடராஜர், சீர்காழி–பைரவர், திருவாவடுதுறை–திருநந்தி ஆகிய பரிவாரத் தலங்களுடன் அவற்றின் நடுவில் மூல மூர்த்தியாக இக்கோயிலில் நடுநாயகமாக ஸ்ரீ மகாலிங்கப் பெருமான் விளங்குகின்றார் என்பது சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.
திருவிடைமருதூரில் மருதப் பெருமானை வழிபடுவதற்குக் கோயிலையடைந்து முதல் மதிலின் உட்புறத்தில் வலம் வருதலை அசுவமேதப் பிரதட்சிணம் என்பர். இந்த அசுவமேதப் பிரதட்சிணம் செய்வோர் எல்லா நலன்களும் பெறுவர். தொடங்குங்கால் முருகப்பெருமானை வழிபட்டுத் தொடங்க வேண்டும். ஒரு மண்டலம், அரை மண்டலம், கால் மண்டலம் என்று வரையறை செய்து கொண்டு வலம் வருதல் வேண்டும். வலம் வருவதும் நூற்றி எட்டு, இருபத்து நான்கு, பன்னிரண்டு, ஏழு என்ற அளவில் அமைய வேண்டும். திருக்கார்த்திகை தீபம் மற்றும் தை மாத விழாவில் வலம் வருவோர் பெரும் பயன் அடைவர். இதனை அடுத்துள்ளது கொடுமுடிப்பிரகாரம். கயிலாய மலையை வலம் வருவதானால் கிட்டும் பேறு இப்பிரகாரத்தை வலம் வருதலால் கிடைக்கும்.
பட்டினத்தார் வாழ்க்கை வரலாற்றுக்கும் இந்த திருவிடைமருதூர் கோயிலுக்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது. பட்டினத்தார் இத்தலத்து மருதவாணர் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார். இவரது சீடர் பத்திரகிரியார் ஆவார். இவர் ஒரு நாட்டுக்கே ராஜாவாக இருந்து விட்டு, துறவு பூண்டு பட்டினத்தாரின் சீடரானவர். சிவதலம் தோறும் தரிசித்து வந்து இருவரும் திருவிடைமருதூர் வந்த தங்கினர். பட்டினத்தார் திருவோடு கூட வைத்துக் கொள்வதில்லை. சீடரோ திருவோடும், ஒருநாயையும் உடன் வைத்திருந்தார். இறைவன் ஒருநாள் அடியார் உருவில் வந்து பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டார். பட்டினத்தார், “நானோ பரதேசி என்னிடம் தருவதற்கு ஏதுமில்லை. இதே கோயிலின் மேலைக்கோபுரம் அருகே ஒரு சம்சாரி இருப்பான்” என்றார். இறைவனும் அவ்விடத்திற்கு சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம் பிச்சை கேட்க, தன்னை இந்த திருவோடும், நாயும் நம்மை சம்சாரியாக்கி விட்டதே என்று வருந்தி ஓட்டை நாயின் மீது எறிந்தார். ஓடும் உடைந்தது. நாயும் உயிர் விட்டது. பின்பு இறைவன் தோன்றி பத்திரகிரியாருக்கும், நாய்க்கும் முக்தி அளித்தார். அந்த முக்தி தந்த இடம் இன்றும் உள்ளது. கிழக்கு மட வீதியில் “நாயடியார் கோயில்” என்று இன்று அழைக்கப்படும் அந்த இடத்தை இத்தலத்துக்கு வந்தால் இன்றும் காணலாம்.
வடக்கே வடுகநாட்டிலுள்ள மல்லிகார்ச்சுனத்திற்கும் (ஸ்ரீசைலம்), தெற்கே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருப்புடைமருதூர்க்கும் (புடார்ச்சுனம்)இடையில் இத்தலம் இருப்பதால், இதற்கு “இடைமருது (மத்தியார்ச்சுனம்)” எனும் பெயர் அமைந்தது. “அர்ச்சுனம்” என்னும் வடசொல்லுக்கு மருதமரம் என்று பொருள். இம்மூன்று தலங்களிலும் தலவிருட்சம் மருத மரமே.
சனிபகவான், சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். காசிப முனிவர்க்கு இடைமருதீசனாகிய மருதவாணர் பால கண்ணனாகக் காட்சி தந்துள்ளார்.
அனைத்துப் பாவங்களையும் நீக்கும் காருணியாமிர்தத் தீர்த்தம், காவிரிப் பூசத் தீர்த்தம் என 32 தீர்த்தங்கள் உள்ளன. 27 நட்சத்திரத்திற்கும் 27 இலிங்கங்கள் உள்ளன
இத்தலத்தின் நான்கு திசைகளிலும் விசுவநாதர், ஆன்மநாதர், இரிஷிபுரீசுவரர், சொக்கநாதர் ஆகிய மூர்த்திகளுக்கு கோயில்கள் அமைந்து பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது. வரகுண பாண்டியன் இத்தலத்தை அடைந்து தன்னைப் பற்றியிருந்த பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்றான்.
பட்டினத்தார், பத்திரகிரியார், வரகுணபாண்டியன், அருணகிரிநாதர், கருவூர்தேவர் ஆகியோர் வழிபட்டு பெரும்பேறு பெற்ற பெருமையுடையது. பட்டினத்தாரின் சீடர் பத்திரகிரியாருக்கும் அவரது சீடருக்கும் முக்தி கிடைத்த தலம். பட்டினத்தார் இத்தலம் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம். அனுஷ நட்சத்திரத்திற்கு இது பரிகார தலம்.
தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளில் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. தேரடியில் விநாயகர் கோயிலும், கீழவீதியில் விசுவநாதர் கோயிலும், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோயிலும், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோயிலும் இருக்க, இவற்றிற்கு மத்தியில் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். எனவே இத்தலத்தை “பஞ்ச இலிங்கத்தலம்” என்றும் சொல்வர். இத்தல விநாயகர் ஆண்டகணபதி எனப்படுகிறார்.
அருள்மிகு மகாலிங்கப் பெருமான் திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருக்கோயில் அருகில் காருண்யாமிர்தத் தீர்த்தம் என்னும் திருக்குளம் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இருபது ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஏழு கோபுரம், ஏழு பிரகாரங்கள் கொண்டு இக்கோயில் விளங்குகிறது. கோயிலின் கீழைச் சன்னதி வழியாக திருக்கோயிலுக்குச் செல்லும் போது கீழைக் கோபுர வாசலில் தென்புறம் அருள்மிகு விநாயகர் திருக்கோயிலும், வடபுறம் அருள்மிகு வள்ளி தேவசேனா முருகன் திருக்கோயிலும் அமைந்துள்ளது. திருக்கோயில் கீழைக் கோபுரம் வழியில் உள்ளே செல்ல பட்டினத்தார் சன்னதியைத் தரிசித்து, மேலே செல்ல, அருள்மிகு படித்துறை விநாயகர்; அவரை வணங்கிச்செல்ல பலிபீடம், கொடி மரம், நந்தி மற்றும் சுதையால் ஆன மகாநந்தியைக் கண்டு தரிசிக்கும் பொழுது அங்கிருந்து நேரே அருள்மிகு மகாலிங்க பெருமானைக் கண்டு வணங்கலாம். நந்தியின் முன் அமைந்துள்ள மண்டபத்தில் இருபக்கமும் புராணச்செய்திகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. இரண்டாம் கோபுரவாயிலில் (சோழ கோபுரத்தில்) பிரம்மகத்தி ஒரு மாடத்தில் உள்ளது. அதைக்காண மாடிப்படிப் போல் அமைக்கப்பெற்ற இடத்தில் ஏறவேண்டும். இரண்டாம் கோபுரத்தைக்கடந்து செல்ல வடபுறத்தில், ஆடல் வல்லான் மண்டபம் உள்ளது. இம்மண்டபம் முன்பு ரெட்டியார் மண்டபம் என வழங்கப் பெற்றது. இம்மண்டபத்தில் இருபத்தேழு நட்சத்திர இலிங்கங்கள் உள்ளன. மேலும் ஆத்மலிங்கம், மேதா தெட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகிய திருமேனிகள் அருள்பாலிக்கின்றனர். இருபத்தேழு நட்சத்திரலிங்கங்களை வழிபட்டுச்செல்ல வடபுறத்தில் நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது. மூன்றாம் கோபுரமாகிய பாண்டியன் கோபுரவாயிலில் சுதையால் ஆன துவாரபாலகர்கள் மிக அழகாகக் காட்சி தருகின்றனர். இக்கோபுரவாயிலில் தென்புறமாடத்தில் வரகுணபாண்டியனின் திருவுருவம் அமைந்துள்ளது. அதனை அடுத்து அதிகார நந்தி, மாடத்தில் விநாயகர் ஆகிய திருமேனிகள் உள்ளன. நான்காம் கோபுரவாசலில் துவாரபாலகர்கள் திருமேனி அமைந்துள்ளது. அதனைக்கடந்து படிவழி கீழிறங்கி தென்புற மேடையில் பாவை விளக்கும் (வரலாற்றுச்சிறப்புடையது) சந்திரனும், எதிர்புறத்தில் சூரியன் உஷா தேவியுடன் உள்ளனர். பின் வலமாக வர நால்வர் திருவுருவங்கள், அறுபத்துமூவர் உற்சவத் திருமேனிகளைக் காணலாம். தல விநாயகராகிய அருள்மிகு ஆண்டவிநாயகர் சன்னதியை வணங்க அச்சன்னதிக்கு நேரே உள்ள வழியாக உள்ளே செல்ல அருள்மிகு மகாலிங்கப் பெருமானைத் தரிசித்து வணங்கலாம். அர்த்தமண்டபத்தில் போக சக்தி அம்மன் காட்சி தருகிறாள். மகாமண்டபத்தில் பன்னிரு தூண்கள் உள்ளன. அப்பன்னிரு தூண்களும் பன்னிருராசியைக் குறிக்கும் என்பர். மகாமண்டபத்தில் வடபுறத்தில் சாம்பதட்சிணாமூர்த்தி (சுதைத் திருமேனி) மற்றும் உற்சவத் திருமேனிகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அருள்மிகு மகாலிங்கப் பெருமான் சன்னதியில் துவாரபாலகர்கள் அமைந்துள்ளனர். பின் சென்ற வழியே வந்து வலமாக வர கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தியும் அருகில் அகஸ்தியரையும் தரிசிக்கலாம். தென்புறத்தில் சப்தகன்னியர், ஏகதசருத்திரர்கள் (இலிங்க வடிவமாக) காட்சித் தருகின்றனர். தென்மேற்கு மூலையில் சோமாஸ்கந்தர் திருச்சன்னதி அமைந்துள்ளது.
இங்குள்ள சோமாஸ்கந்தர் ஏகநாயகர் என்று போற்றப்பெறுகிறார். மேற்குக் கோஷ்டத்தில் இலிங்கோத்பவரும் அவருக்கு எதிரே ஸ்ரீவள்ளி தேவ சேனாபதியாக ஸ்ரீ சுப்பிரமணியரும் காட்சி தருகின்றார். அடுத்து திருமாளிகைப் பத்தியில் பிரம்மா, சகஸ்ரலிங்கம், சேரலிங்கம், சோழலிங்கம், பாண்டியலிங்கம் உள்ளது . அடுத்து கயிலைக்காட்சி; அருள்தரு அன்பிற்பிரியாளுடன் அருள்மிகு மருதவாணர் காட்சி தருகிறார். வடமேற்கு மூலையில் கஜலெட்சுமியும், மருதமரம் (கல்சிற்பம்) உள்ளது. வடக்குத் திருமாளிகைப் பத்தியில் 63 நாயன்மார் திருமேனிகள் உள்ளன. அதனை அடுத்து அருள்தரு சிவகாமி உடனாய அருள்மிகு நடராசப் பெருமான் திருச்சன்னதி உள்ளது. வடக்குக் கோஷ்டத்தில் பிரும்மா அதனை அடுத்து துர்க்கையும், அதன் எதிரே சண்டீசர் சன்னதியும் உள்ளது.
இரண்டாம் பிரகாரம் பிரணவப் பிரகாரம் ஆகும். இதனை சிங்கக் கேணி பிரகாரம் என்றும் கூறுவர். இப்பிரகாரத்தை வலமாகவர வடக்குப்பிரகாரத்தில் அருள்மிகு முருகப் பெருமான் திருக்கோயிலில் மகா விஷ்ணு சன்னதியும் உள்ளது. இதன் எதிரே நூதனமாக அமைக்கப் பெற்ற வேல் மண்டபமும் தல விருட்சமாகிய மருதமரமும் உள்ளன. மருதமரத்தடியில் கிருஷ்ணன் சன்னதி உள்ளது. அடுத்து பைரவர் திருக்கோயில், அதனருகில் சிங்கக் கேணி மிக அழகாக உள்ளது.
பின் வெளியே வந்து நவக்கிரகத்தை வழிபட்டு, கொடுமுடி பிரகாரத்தை வலம் வரலாம். கொடுமுடி பிரகாரம் சித்திரப் பிரகாரம் என்றழைக்கப்படுகிறது. இப்பிரகாரத்தில் சுதைச்சிற்பங்களும், ஓவியங்களும் காண்பதற்கு அழகாக அமைந்துள்ளன.
இப்பிரகாரத்தை வலம் வந்து அம்மன் கோயிலுக்குச்செல்லும் வழியில் செல்ல வேண்டும். அங்கு சட்டைநாதரை வணங்கி, அம்மன் சன்னதியை அடைய வேண்டும். அம்மன் சன்னதி வெளி மண்டபத்தில் ஆறுமுகசாமி, ஆடிப்பூர அம்மன், பள்ளியறை அம்மன் ஆகிய சன்னதிகளைத் தரிசித்து அம்மன் சன்னதியில் மகா மண்டபத்தில் நின்று அருள்வடிவமாக விளங்கும் அருள்தரு பெருநலமாமுலையம்மையைத் தரிசிக்க வேண்டும். பின் அம்மன் கருவறையைச்சுற்றியுள்ள பிரகாரத்தை வலமாக வரவேண்டும். இத்திருச்சுற்றுச்சுவரில் பல்வேறு தலங்களில் உள்ள அம்பிகையின் திருவுருவங்கள் ஓவியமாகத் தீட்டப் பெற்றுள்ளன. இப்பிரகாரத்தில் கன்னிமூலை கணபதி, சண்டசக்தி, திருஞானசம்பந்தர் தனிச்சன்னதி மற்றும் தெட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்களை வழிபட்டு வெளியில் வந்து தென்புறம் தனிச்சன்னதியாக உள்ள மங்கள சனீஸ்வரரை வணங்கி, வெளிப் பிரகாரத்தை வலமாக வர அன்பிற்பிரியாள் சன்னதி அஷ்டதசபுஜ மகாலெட்சுமி சன்னதியைத் தரிசிக்கலாம். பின் அம்மன் கோபுரவாசல் வழியாக வெளியில் வர வலப்புறம் வல்லப கணபதியையும், இடபுறம் வள்ளி தேவசேனா முருகனையும் வணங்கி ஸ்ரீ மூகாம்பாள் சன்னதிக்கு வரவேண்டும். ஸ்ரீ மூகாம்பாள், ஸ்ரீ மகா மேரு ஆகிய தெய்வங்களை வணங்கி வெளியில் வந்து, கொடிமரம், நந்தி வணங்கிப் பின் அசுவமேதப் பிரகாரத்தை வலமாக வர வேண்டும். தென்மூலையிலும், வடமேற்கு மூலையிலும் விநாயகர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. வடகிழக்கு மூலையில் யாகசாலை அமைந்துள்ளது. இவ்வாறு வலம் வந்து படித்துறை விநாயகர் சன்னதியில் வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். படித்துறை விநாயகர் சன்னதிக்கு எதிரே கல்யாண மண்டபம் என்னும் நாடகசாலை உள்ளது.
தேவாரப்பதிகம்:
பொங்குநூல் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர் எங்கும் எழிலா மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில் மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
– திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 30வது தலம்.
திருவிழா:
தை மாதம் – தைப்பூசம் – 10 நாட்கள் திருவிழா – பிரம்மோற்சவம் – தினந்தோறும் காலையும் மாலையும் ஒவ்வொரு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கும். 10 ம் நாள் தீர்த்தவாரியுடன் திருவிழா முடிவடையும்.
வைகாசி மாதம் – வசந்த உற்சவ பெருவிழா – 10 நாட்கள் திருவிழா – திருக்கல்யாண உற்சவம், அம்பாள் தபசு, அம்பாள், தன்னைத்தானே உற்சவம் ஆகியன சிறப்பாக நடைபெறும்.
திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை ஆகிய நாட்கள் இத்தலத்தில் விசேசமாக இருக்கும். மாதாந்திர பிரதோச நாட்கள், வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
பிரார்த்தனை:
இத்தலத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி சிறப்பு வாய்ந்தது என்பதால் பக்தர்கள் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகின்றனர். இந்த அம்பிகையை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்கள் தங்களுக்கு பிரச்சினை ஏதும் இல்லாத வகையில் கர்ப்பம் தரிக்க வேண்டுகின்றனர். அதுபோல் சுக பிரசவம் அடைவதற்காகவும் பெண்கள் பிரார்த்திக்கிறார்கள். இவ்வகையான பிரார்த்தனை இந்த சந்நிதியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இத்திருக்கோயிலின் பெரிய பிரகாரத்தை முறையாக வலம் வந்து மூலவரை வழிபடுவோர் சித்த சுவாதீனமின்மை, மனநோய் பீடிக்கப்பட்டவர்கள், பைத்தியம் முதலிய பெருநோய்களினின்றும், பாவங்களினின்றும் நீங்கி வேண்டும் நலன்களெல்லாம் எய்தி இன்புறுதல் இன்றும் கண்கூடு. மூலவரான மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், அரிசி மாவு, தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மா பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மேலும் சுவாமிக்கு வேட்டி படைத்தல் அம்பாளுக்கு சேலை வழங்கல், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.
Leave a Reply