அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில்
அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில், திருச்சி மாவட்டம்.
+91 431 254 4927 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சத்தியவாகீசுவரர், பிரம்மபுரீசுவரர் | |
அம்மன் | – | சவுந்திரநாயகி | |
தல விருட்சம் | – | ஆலமரம் | |
தீர்த்தம் | – | காயத்திரி தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | அன்பிலாலந்துறை, கீழன்பில் ஆலந்துறை | |
ஊர் | – | அன்பில் | |
மாவட்டம் | – | திருச்சி | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – |
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் |
இக்கோயில் அற நிலையத்துறைக்கு உட்பட்டிருந்தா லும் கூட, பாழ்பட்டுப் போனதால் தல வரலாறு தெளிவாக கிடைக்க வில்லை. மூலவர் சத்யவாகீசுவரர். இவர் கிழக்கு நோக்கி சுயம்புவாக எழுந்துள்ளார். வாகீச முனிவர் பூஜை செய்ததால் “சத்தியவாகீசுவரர்” என அழைக்கப்படுகிறார். பிரம்மன் வழிபட்டதால் “பிரம்மபுரீஸ்வரர்” என்ற நாமமும் இவருக்கு உண்டு. அம்பாள் “சவுந்தரநாயகி.” ஊர் பெயர் அன்பில் கோயிலின் பெயர் ஆலந்துறை. இரண்டும் சேர்த்து அன்பிலாந்துறை ஆனது. இக்கோயிலில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் “செவிசாய்த்த விநாயகர்” மட்டுமே.
தேன் சுவை பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் சிவத்தலங்கள் பலவற்றிற்கு வந்தார். சிவனுக்கு இவரைச் சோதிக்க ஆசை. காவிரியில் தண்ணீர் கரை புரண்டோடச் செய்தார். ஞானசம்பந்தரால் கோயில் இருக்கும் இடத்தை அடைய முடியவில்லை. தூரத்தில் நின்ற படியே சுயம்புவாய் அருள்பாலிக்கும் சிவபெருமானைப் பாடினார். காற்றில் கலந்து வந்த ஒலி ஓரளவே கோயிலை எட்டியது. அங்கிருந்த சிவமைந்தர் மூத்த விநாயகர், “இளைய பிள்ளையார்” எனப்பட்ட தன் சகோதரனுக்கு சமமான ஞானசம்பந்தனின் பாட்டைக் கேட்பதற்காக, தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டு ரசித்தார். அப்போது புன்முறுவல் முகத்தில் அரும்பியது. ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து ரசித்த அக்காட்சியை சிற்பமாக வடித்தார் ஒரு சிற்பி. அச்சிலை இன்றும் எழிலுற இருக்கிறது. கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. கோபுரத்தில் அம்பிகையின் திருமணக் கோலம். ஊர்த்துவ தாண்டவமாடும் பரமசிவன், கஜசம்ஹாரமூர்த்தி என்று எராளமான வடிவங்கள்.
கோயிலுக்குள் நுழைகிறோம். சற்றே விசாலமான உள்ளிடம். நமக்கு இடப்பக்கத்தில் குளம், கட்டுமானமும் படிகளும் இருந்தாலும், பாசி படிந்து கிடக்கிறது. சந்திர தீர்த்தம் என்றும் சிவ தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிற இந்த தீர்த்தத்தில் ஐந்து கிணறுகள் உள்ளன. மதில் ஓரமாக கோயிலின் மடைப்பள்ளி. நிறைய செடி– கொடிகளுடன் காணப்படும் இந்த பகுதியிலேயே சில அடிகளில், உள் வாயில். இந்த வாயிலின் உள் பகுதிகளில் பற்பல கல்வெட்டுகள். இந்த வாயிலைத் தாண்டி உள்ளே சென்றால், வெளிப்பிரகாரத்தை அடைகிறோம். வெளிப் பிரகாரத்தில் ஒரு புறம் நந்தவனம். படிகள் ஏறுவதற்கு முன்னதாக இரண்டு பக்க தூண்களிலும், பக்கத்துக்கு ஒருவராக தரிசனம் தரும் விநாயகரையும் முருகரையும் வணங்குகிறோம். படியேறியதும், நந்தி. இங்கிருந்து பார்த்தாலே மூலவர் சந்நிதி தெரிகிறது. பிராகாரம் சுற்றத் தொடங்குகிறோம். உள் பிராகார கிழக்கு சுற்றில் முதலில் சூரியன். தென் கிழக்கு மூலையில் வடக்கு நோக்கியபடி நால்வர் பெருமக்களான ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்க வசாகர். இவர்களுடன் பெரிய புராண ஆசிரியரான சேக்கிழாரும் இருக்கிறார். தெற்கு சுற்று வழியாக நடந்து தென்மேற்கு மூலையை அடைய அங்கு விநாயகர் சந்நிதி. உள்ளே “செவி சாய்த்த விநாயகர்.” அடுத்து இலிங்கோத்பவர், பிட்சாடனர், விசாலாட்சி உடனாய காசிவிசுவநாதர், வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர் சந்நிதி. வள்ளி–தெய்வானை சமேதரான முருகர், பன்ணீனிரு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். மயில் முருகரின் இடப்புறமாக திரும்பியுள்ளது. வடக்கு சுற்றில் திரும்பி வர, சண்டிகேஸ்வரர் மண்டபத்தை தாண்டியதும், கிழக்கு நோக்கிய நிலையில் அம்மன் சந்நிதி. சிறிய அர்த்த மண்டபம் கொண்ட இந்த சந்நிதியில் அருள்மிகு சௌந்தரநாயகி அம்மன் நான்கு திருக்கரங்களுடனும் அபய வர முத்திரைகளுடனும் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். பராந்தக சோழன் காலத்தில் தான் அம்மன் சந்நிதி கட்டப்பட்டதாம். அதற்கு முன்னர் மாடக்கோயிலாக இருந்ததாம். அடுத்து, நவக்கிரக சந்நிதி. சனி பகவான் மட்டும் வாகனத்துடன் உள்ளார். வடகிழக்கு மூலையில், கால பைரவர், கிழக்கு சுற்றில், தனியாக சனி. அடுத்து சந்திரன். பிராகாரத்தை வலம் வந்து, மூலவர் கருவறைக்கு முன்பாக உள்ள மண்படப் பகுதியை சேர்ந்து விட்டோம். நிறைய தூண்கள். பலப்பல சிற்பங்கள் இவை. பல்வேறு காலக்கட்ட திருப்பணிகளை பிரதிபலிப்பனவாக இருந்தாலும், பெரும்பாலான சிற்பங்களின் சோழர் முறைகள் தென்படுகின்றன. அன்னம், புலி, யாளி, முனிவர்கள், பூதகணங்கள் ஆகியவற்றுடன் அனுமன், கிருஷ்ணர், பிரம்மா ஆகியோரும் சிற்ப சிலைகளாக காட்சி தருகின்றனர். அர்த்த மண்டபம் தாண்டி பார்வையை செலுத்தினால், அருள்மிகு சத்தியவாகீசர், சதுர பீட ஆவுடையாருடன் கூடிய அழகிய சிவலிங்க மூர்த்தம். துவாரபாலகர் அருகே பிரம்மா வழிபடும் சிற்பம் உள்ளது.
இத்தலத்தைப்பற்றியனவாக 1902-இல் படியெடுக்கப்பட்டவை பதின்மூன்று கல்வெட்டுக்களும், 1938-இல் எடுக்கப்பட்டவை ஆறும் உள்ளன. அவற்றில் ஏழு கல்வெட்டுக்கள் திருமால் கோயிலில் உள்ளவை. ஏனையவை சத்தியவாகீசரைப் பற்றியன. கல்வெட்டுகளில் இறைவன்பெயர் பிரமபுரீசுவரர் என வழங்கப்பெறுகிறது மாறவர்மன் குலசேகரபாண்டியன், மூன்றாம் இராஜேந்திரசோழன், ஹொய்சள வீரராமநாததேவர், மதுரைகொண்ட பரகேசரிவர்மன், இராஜராஜதேவன் முதலியவர்கள் காலத்தனவாகக் காணப்படுகின்றன. இவையெல்லாம் பெரும்பாலும் நிபந்தம் அளிக்கப்பெற்றமையை அறிவிக்கின்றன.
அருகிலேயே லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில், திருமாந்துறை சிவன் கோயில் ஆகியவை உள்ளன.
தேவாரப்பதிகம்:
பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும் உறவெலாம் சிந்தித்து உன்னி உகவாதே அறவன் எம்பிரான் அன்பிலா லந்துறை வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே.
–திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 57வது தலம்.
திருவிழா:
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்.
கோரிக்கைகள்:
காதில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் சென்று விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, வில்வ அருச்சனை செய்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
வழிகாட்டி:
அன்பில் ஆலந்துறை, திருச்சியிலிருந்து சுமார் 27 கிலோ மீட்டர் தொலைவிலும் லால்குடியிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தெலைவிலும் உள்ளது. திருச்சி மற்றும் லால்குடியில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன.
Leave a Reply