அருள்மிகு எழுத்தறிநாதர் கோயில், இன்னம்பூர்
அருள்மிகு எழுத்தறிநாதர் கோயில், இன்னம்பூர், தஞ்சாவூர் மாவட்டம்.
+91 435 200 0157, 96558 64958 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | எழுத்தறிநாதர்(அட்சரபுரீஸ்வரர்) | |
அம்மன் | – | நித்தியகல்யாணி, சுகந்த குந்தளாம்பாள் | |
தல விருட்சம் | – | செண்பகமரம் | |
தீர்த்தம் | – | ஐராவத தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருஇன்னம்பூர், திருவின்னம்பர் | |
ஊர் | – | இன்னம்பூர் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருநாவுக்கரசர் |
சோழமன்னனின் கணக்கரான சுதன்மன் ஒருமுறை காட்டிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது. உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி கடுமையான உத்தரவிட்டான். சரியான கணக்கு காட்டியும், தன் மீது பழி வந்துவிட்டதே என எண்ணிய அவர், சிவனை வேண்டினார். உடனே சிவன் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று ஐயத்தைப் போக்கினார். சுதன்மன் சற்றுநேரம் கழித்து கணக்குடன் செல்லவே,”ஏற்கனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்?” என மன்னன் சொல்ல, தனக்குப் பதிலாக இறைவனே வந்து கணக்கு காட்டிய விபரத்தை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன், சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஈசனுக்கு கோயிலும் எழுப்பினான். சுவாமிக்கு “எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர்” என்ற திருநாமம் ஏற்பட்டது. “அட்சரம்” என்றால் “எழுத்து.” இது சுயம்புலிங்கம் என்பதால் “தான்தோன்றீயீசர்” என்றும் பெயர் உள்ளது. அகத்தியருக்குத் இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது. அம்பாள் “கொந்தார் குழலம்மை” என்னும் சுகந்த குந்தளாம்பாளுக்கு தனி சந்நிதியும், நித்திய கல்யாணி அம்மனுக்குத் தனி சந்நிதியும் ஆக இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன.
சூரியன் இத்தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றான். அவனுக்கு “இனன்” என்றும் பெயர் உண்டு. இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால், “இனன் நம்பு ஊர்” என்று பெயர் ஏற்பட்டு “இன்னம்பூர்” என்று மாறிவிட்டது.
பேச்சு சரியாக வராத குழந்தைகளுக்கும், பேசத் தயங்கும் குழந்தைகளுக்கும் இக்கோயிலில் அர்ச்சனை செய்தால் நல்வாக்கு பெறுகிறார்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படுகிறது. குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் முன்பு இங்கு வந்து வழிபட்டு செல்லலாம். இங்கே அம்பாள் தினமும் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணமாகாத பெண்கள் இந்த அம்பிகையை வழிபட்டு நல்ல கணவனை அடைகின்றனர். இவளை “நித்தியகல்யாணி” என அழைக்கின்றனர்.
மற்றொரு அம்பாளான “சுகந்த குந்தள அம்பாள்” தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணம் செய்துகொள்ள விரும்பாமல் தனித்து வாழ்க்கை நடத்த விரும்பும் பெண்கள் இவளை வழிபடலாம். இது சூரியன் பூஜித்த தலமாகும். பங்குனி 13,14,15, ஆவணி 31, புரட்டாசி 1,2 ஆகிய தேதிகளில் சூரிய வெளிச்சம் சுவாமிமீது படுகிறது.
கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. இங்குள்ள கஜப்பிருஷ்ட விமானம் யானை படுத்திருப்பது போன்று உள்ளது. இதில் ஐந்து கலசங்கள் உள்ளன. இவை சிருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), சம்ஹாரம் (அழித்தல்), திரோபவம் (மறைத்தல்), அநுக்கிரகம் (அருளல்) என்றும் ஐந்து தொழில்களை இறைவன் செய்வதைக் குறிக்கிறது. இக்கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. கொடிமரமில்லை, பலிபீடம், நந்தி உள்ளன. வாயிலைக்கடந்து உட்சென்$aல் பிரகாரத்தில் வினாயகர், சுப்பிரமணியர், சூரியன், சந்திரன் முதலிய சன்னிதிகளை தரிசிக்கலாம். உள் முகப்பு கம்பத்தில் நர்தன வினாயகர் காட்சியளிக்கிறார். உள்ளே இடதுபுறம் நால்வர் சன்னதி. கருவறை ஒரு யானை உள்ளே சென்று பூஜை செய்யும் அளவுக்குப் பெரியது. கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கல்லாலான நடராஜர் சிற்பம் ஒன்று இங்குள்ளது. வலதுபுறத்தில் சுகந்தகுந்தளாம்பிகை சன்னதி. சதுர்புஜத்துடன் நின்ற கோலம். இந்த அம்பாளே பிரதான அம்பாளாக இருக்கிறார். மூலவர் பெரிய நீண்டுயர்ந்த பாணத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
தேவாரப்பதிகம்:
சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய் முடி பத்துடை யான்றனைக் கனிய வூன்றிய காரணம் என்கொலோ இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே.
–திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 45 வது தலம்.
திருவிழா:
நவராத்திரி 10 நாட்கள், சித்திரையில் கோடாபிஷேகம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருவாதிரை, சிவராத்திரி ஆகியவை முக்கியமான விழாக்கள்.
கோரிக்கைகள்:
பள்ளியில் சேர உள்ள குழந்தைகள் முன்னதாக இங்கு வந்து அர்ச்சனை செய்து கொள்ளலாம். இங்கு நெல்லில் எழுதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு செம்பருத்தி பூவை தட்டில் பரப்பி எழுத பயிற்சி தரப்படுகிறது. பேச்சுத்திறமை இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவு கூர்மை பெறும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியத்துக்காக இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.அம்பாளுக்கு திருமாங்கல்ய பூஜை செய்யலாம்.
வழிகாட்டி:
கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் புளியஞ்சேரி சென்று அங்கிருந்து திருப்புறம்பியம் செல்லும் சாலையில் வலதுபுறமாக 3 கீ மீ சென்றால் இத்தலத்தை அடையலாம். கோயில்வரை பேருந்துகள் செல்லும். சாலையிலிருந்து பார்த்தாலே கோயில் தெரிகிறது. இதே பாதையில் மேலும் 3 கீ மீ சென்றால் திருப்புறம்பியத்தை அடையலாம்.
Leave a Reply