அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில், கீழையூர்
அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில், சிவன் கோயில் வீதி, கீழையூர்,நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364 – 283 261, 283 360, 94427 79580 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கடைமுடிநாதர் (அந்திசம்ரட்சணீசுவரர்) | |
அம்மன் | – | அபிராமி | |
தல விருட்சம் | – | கிளுவை | |
தீர்த்தம் | – | கருணாதீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கடைமுடி, கீழூர், கிளுவையூர் | |
ஊர் | – | கீழையூர் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானம்பந்தர் |
ஆணவம் கொண்டதால் சிவனிடம் சாபம் பெற்ற பிரம்மா, பூலோகத்தில் பல இடங்களில் சிவபூஜை செய்து வழிபட்டார். அவர் இத்தலத்திலும் சிவனை மனதில் நினைத்து வழிபட்டார். சிவன், அவருக்கு ஒரு கிளுவை மரத்தின் அடியில் காட்சி தந்தார். பிரம்மா தனக்கு மன்னிப்பு கேட்டபோது, தகுந்த காலத்தில் விமோசனம் கிடைக்கப்பெறும் என்று ஆறுதல் கூறினார். பின் பிரம்மாவின் வேண்டுதல்படியே அவர் இத்தலத்தில் சுயம்பு இலிங்கமாக எழுந்தருளினார். பிற்காலத்தில் கண்வ மகரிஷியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு முக்தி பெற்றார்.
மேற்கு பார்த்து அமைந்த சிவதலம் இது. இத்தலத்தில் காவிரி நதி இத்தலத்தில் மேற்கு நோக்கி ஓடுவது விசேஷம்.
உலகம் அழியும் இறுதிக்காலத்திலும் காப்பாற்றுபவராக இங்கு சிவபெருமான் அருளுகிறாராம். எனவே இவருக்கு “கடைமுடிநாதர்” என்று பெயர் வந்ததாக சொல்கின்றனர். இவர் பதினாறு பட்டைகளுடன் அமைந்து “சோடஷ இலிங்க” அமைப்பில் இருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொண்டால் பதினாறு பேறுகளையும் பெறலாம் என்பர். பிரகாரத்தில் உள்ள நவக்கிரகம் வலது புறம் திரும்பிய ஆவுடையார் மீது அமைந்திருக்கின்றன. எண்கோண வடிவில் உள்ள ஆவுடையாரில் கிரகங்கள் ஒவ்வொன்றும் நேர்வரிசையில் இல்லாமல், முன்னும் பின்னுமாகவும் அமைந்திருப்பது சிறப்பான அமைப்பு.
இங்கு கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி இடது காதில் வளையம் அணிந்தும், வலது காதில் வளையம் இல்லாமலும் காட்சி தருகிறார். இவரைப்போலவே பைரவரும் வலது காதில் வளையம் இல்லாமல் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும்.
இங்கு அம்பாள் வரப்பிரசாதியாக இருக்கிறாள். தெற்கு நோக்கியிருக்கும் இவளது சன்னதி எதிரேயும் ஒரு வாசல் இருக்கிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு வித்தியாசமான பிரார்த்தனை செய்கின்றனர். திருமணமாகாத பெண்கள் இவளுக்கு தாலி கட்டி வேண்டிக்கொள்கின்றனர். வரன் அமைந்த பிறகு மீண்டும் அம்பாள் கழுத்திலிருக்கும் தாலியை தங்களது கழுத்தில் கட்டி அம்பாளை வணங்கிவிட்டு, மீண்டும் அதனை அம்பாளுக்கே கட்டிவிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் பெண்கள் சுமங்கலிகளாக இருப்பர் என்பது நம்பிக்கை.
பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவைநாதர் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார். இவருக்கு எதிரே நந்தியும் இருக்கிறது. சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இத்தலவிநாயகர் கடைமுடிவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
தேவாரப்பதிகம்:
கொய்யணி நறுமலர்க் கொன்றை யந்தார் மையணி மிடறுடை மறையவனூர் பையணி அரவொடு மான்மழுவாள் கையணி பவனிடங் கடை முடியே.
–திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 18வது தலம்.
திருவிழா:
மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம்.
பிரார்த்தனை:
திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு சிவனை வழிபட்டு மன அமைதி பெறலாம்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு புத்தாடை அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
வழிகாட்டி:
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மேலையூர் தாண்டி , கீழையூர் என்று கைகாட்டி காட்டும் இடத்தில் இடப்புறமாக செல்லும் சாலையில் சென்றால் 2 கீ.மீயில் கோயிலை அடையலாம். கீழையூர் பேருந்து நிறுத்தத்திற்கருகிலேயே கோயில் உள்ளது.
அருட்பா:
இடைமுடியின் தீங்கனியென் றெல்லின் முசுத்தாவுங் கடைமுடியின் மேவுங் கருத்தா
Leave a Reply