அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம். காஞ்சிபுரம் மாவட்டம்.
+91-44- 2744 7139, 94428 11149 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வேதகிரீஸ்வரர், பக்தவத்சலேஸ்வரர் | |
அம்மன் | – | திரிபுரசுந்தரி | |
தல விருட்சம் | – | வாழை மரம் | |
தீர்த்தம் | – | சங்குதீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கழுகுன்றம், திருக்கழுகுன்றம் | |
ஊர் | – | திருக்கழுகுன்றம் | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் |
பூஷா , விருத்தா என்கிற இரு முனிவர்கள் சாரூப பதவி வேண்டித் தவம் செய்தனர். இறைவன் தோன்றி வரம் தரும்போது,”சாயுஜ்ஜியப் பதவி தருகிறேன். இப்பதவியில் சில காலம் இருங்கள். பிறகு சாயுச்சியம் தருகிறோம்” என்றார். அதை ஏற்க மறுத்த முனிவர்களை,”கழுகுருவம் அடைக” என்று சாபமிட்டார். முனிவர்கள் கழுகுகளாய்ப் பிறந்தனர். சம்பு, ஆதி எனும் பெயருடன் மலைக் கோயிலை வலம் வந்து, தாங்கள் உண்டாக்கிய பட்சி தீர்த்தம் அருகில் உள்ள பாறையில் நாள்தோறும் அமுதுண்டு இறைவனை வழிபட்டு வருகின்றனர். தினமும் இராமேஸ்வரத்தில் ஸ்நானம் செய்து கழுக்குன்றத்தில் ஆகாரம் உண்டு காசியில் அடைக்கலம் ஆவதாக ஐதீகம். கழுகுகளுக்கு அமுதூட்டும் செயல் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.
சுரகுரு மகாராஜாவுக்கு சுவாமி இத்தலத்தில் காட்சி தந்ததாகவும், அவரே இத்திருத்தலம் அமையக் காரணமாக இருந்தவர் என்றும் வரலாறு கூறுகிறது.
கழு – கழுகு – கங்கம் என்பன ஒருபொருள் குறிக்கும் சொற்கள்.
கழுகு வழிபட்டதால், வழிபடுகின்றதால் இத்தலத்திற்குத் “திருக்கழுகுன்றம்” எனப் பெயர் வந்தது.
இன்னுமொருகதை: பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாருப்ய பதவிக்காக தவம் இருந்தனராம். முடிவில் சாருப்ய என வரம் கேட்பதற்குப் பதில், சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனராம். எனவே நான்கு யுகத்திற்கு இருவர், என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். நண்பகல் நேரத்தில் இக்காட்சியைக் காணலாம்.
சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்ற தலம். வேதமே மலையாக அமைந்த தலம். கோடி உருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம். சித்தர்கள் பலர் இம்மலையில் வாழ்ந்தால் தியானம் செய்ய ஏற்ற தலம். இறைவன் காதலித்து உறையும் இடம் கழுகுன்றம் என திருஞானசம்பந்தரால் மகிழ்ந்து போற்றிய தலம் மாணிக்கவாசகருக்கு சுவாமி காட்சி தந்த தலம். என்உடல் வீழும்போதும் நீதான் எனக்கு துணை என்று ஈசனை பட்டினத்தார் உருக்கமாக வழிபட்ட தலம். உலகின் உச்சமான அமராவதி நகருக்கு நிகரான தலம் திருக்கழுக்குன்றம் என அருணகிரிநாதரால் புகழப்பெற்ற தலம். சுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் சுவாமி காட்சி தந்த தலம். மார்க்கண்டன் சிவபெருமான் அருளால் என்றும் பதினாறு வயது பெற்ற தலம்.
சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்தபோது இறைவன் அருளால் அத்தடாகத்தில் சங்கு தோன்றியது. மார்க்கண்ட தீர்த்தம் என்று வழங்கப்பட்ட இத்தீர்த்த்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சங்கு பிறந்து கொண்டிருப்பதால், சங்கு தீர்த்தம் எனப் பெயர்பெற்றது.
மலையை சுற்றி அமைந்த 12 தீர்த்தங்கள் :
1. இந்திர தீர்ததம்
2. சம்பு தீர்த்தம்
3. உருத்திர தீர்த்தம்
4. வசிட்ட தீர்த்தம்
5. மெய்ஞான தீர்த்தம்
6. அகத்திய தீர்த்தம்
7. மார்க்கண்ட தீர்த்தம்
8. கோசிக தீர்த்தம்
9. நந்தி தீர்த்தம்
10. வருண தீர்த்தம்
11. அகலிகை தீர்த்தம்
12. பட்சி தீர்த்தம்
வலம்புரிச் சங்கு கடலில்தான் கிடைக்கும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரிச் சங்கு இவ்வாலய சங்கு தீர்த்தக் குளத்தில் தோன்றுகிறது. இவ்வாலயத்தில் பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அதில் புகழ்பெற்ற தீர்த்தம்தான் சங்கு தீர்த்தம். மண்டபத்துடன் கூடிய பெரிய திருக்குளம். இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மணமுருக வேண்டினால் முழுமையாக குணமடைகின்றனர் என்பது இப்போதும் நடக்கும் அதிசயம். இக்குளக்கரையில் வண்டு(சங்கு) வன விநாயகர் எழுந்தருளியுள்ளார். ஆதியில் மார்க்கண்டேயன் இத்தலம் வந்தபோது ஈசனை வணங்க நினைத்தார். ஈசனை அபிஷேகித்து பூஜிக்கப் பாத்திரம் இல்லையே என இக்குளக்கரை அருகே அமர்ந்து வருந்தினார். அப்போது பெரியதொரு வலம்புரிச் சங்கு இக்குளத்திலிருந்து மேலெழுந்து அவரருகே மிதந்து வந்தது. அதைக் கண்டு மனம் மகிழ்ந்த மார்க்கண்டேயர், அந்தச் சங்கைக் கொண்டு ஈசனை நீராட்டிப் பூஜித்தார். அன்று முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தத்திலிருந்து வலம் புரிச்சங்கு தோன்றி மிதந்து வருவது வழக்கமாக உள்ளது.
இதுவரை சிறிதும் பெரிதுமான பல வலம்புரிச் சங்குகள் தோன்றியுள்ளன. புதிய சங்கு தோன்றியதும் பழைய சங்கை பாதுகாப்புடன் ஆபரண அறையில் வைத்துவிடுவார்கள். இப்படி பழைய சங்குகள் இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. சங்கு தோன்றப்போவதற்கு அறிகுறியாக குளத்தில் நுரை வருவதைக் காணலாம். மறுநாள் ஓங்கார சப்தம் கேட்கும். உடன் சங்கு வெளிவந்து நீரில் மிதக்கும். தயாராக, உள்ள குருக்கள் குளத்தின் நடுவே சென்று, அதை எடுத்து வந்து சுத்தப்படுத்தி, பொட்டிட்டு, பூவைத்து, பின் மேளதாளத்துடன் பக்த வத்சலர் கோயிலுக்குள் எடுத்துச் செல்வார். பழைய சங்கினை ஆபரண அறையில் வைத்து விட்டு, இதனால் அபிஷேகம் செய்வார்.
மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரர் கருவறையில் அனைத்து தெய்வங்களும் உள்ளனர். ஈசனை இத்தலத்தில் இந்திரன் பூஜித்தான். தொடர்ந்து இன்றும் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து, சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுகிறது. தாங்கவே முடியாத வெப்பத்தை மறுநாள் கருவறை திறக்கும்போது காணலாம். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடக்கிறது. 10.11.1930 நடந்ததாக அறிவியலார்கள் கூறி இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.
அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். எனவே ஆடிப்பூரம், நவராத்திரி கடைசி நாள், பங்குனி உத்திரம் ஆகிய ஆண்டுக்கு மூன்று நாட்கள்தான் முழு அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும்தான் அபிஷேகம் செய்வார்கள்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவத்தலங்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கில்லாமல் இருப்பது மாறுபட்டதாகும். 565 படிக்கட்டுகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் அழகிய தலம். 12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா நடைபெறும். புஷ்பகர மேளா எனப் புகழ் பெற்ற இவ்விழா வடஇந்தியாவில் நடக்கும் கும்பமேளா போன்ற மிகப் பெரிய புகழ் பெற்றது.
தேவாரப்பதிகம்:
தோடுடையான் ஒருகாதில் தூயகுழை தாழ ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும் நாடுடையான் நள்ளிருளேம நடமாடும் காடுடையான் காதல் செய்கோயில் கழுக்குன்றே
–திருஞானசம்பந்தர்.
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 28வது தலம்.
திருவிழா:
சித்திரை பெருவிழா – 10 நாட்கள்.
ஆடிப்பூரம் – அம்பாள் உற்சவம் -10 நாட்கள். பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களிலும் தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேஷ நாட்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
பௌர்ணமி கிரிவலம் இத்தலத்தில் மிகவும் சிறப்பு. திருவண்ணாமலைக்கு முன்பே இங்கு கிரிவலம் சிறப்பு வாய்ந்தாக இருந்திருக்கிறது.
பிரார்த்தனை:
இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.
குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், சித்தபிரமை பிடித்தவர்கள் 48 நாட்கள்(ஒரு மண்டலம்)சங்குதீர்த்தத்தில் மூழ்கி விட்டு, இத்தலத்தில் வழிபடும் பட்சத்தில் அவர்கள் முழுமையாக குணமடையும் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. தீராத வியாதிகள் தீருகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுவோரும் வழிபட்டு பலனடைகின்றனர். இத்தலத்தில் பக்தர்களின் எல்லாவித வேண்டுதல்களும் நிறைவேறுவதாகச் சொல்கின்றனர். திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். ஆஸ்துமா ரத்தகொதிப்பு இருதய நோய் உள்ளவர்கள் காலையும் மாலையும் சஞ்சீவிக் காற்று வீசும் இம்மலை ஏறி வந்து ஈசனை வழிபட்டால் அத்தகைய நோய்களிலிருந்து குணமடைகின்றனர் என்பது கண் கண்ட உண்மை.
நேர்த்திக்கடன்:
சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம். வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.
Leave a Reply