அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லூர்

அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லூர், திருக்கோவிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.

+91-93456 60711, 99651 44849

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அதுல்யநாதேஸ்வரர்
அம்மன் அழகிய பொன்னழகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் தென்பெண்ணை
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அறையணிநல்லூர், திருவறையணிநல்லூர்
ஊர் அறகண்டநல்லூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், திருநாவுக்கரசர்

மகாபலி மன்னனிடம் மூன்றடி நிலம் கேட்டு அவரை அடக்கிய மகாவிஷ்ணு, உயிரைக் கொன்ற தோஷம் நீங்க, சிவனை வேண்டினார். அவர் பூலோகத்தில் தன்னை வழிபட்டு வர தோஷம் நீங்கப்பெறும் என்றார். அதன்படி பல தலங்களுக்கும் சென்ற மகாவிஷ்ணு, இத்தலத்தில் சிவனை வழிபட்டபோது, சிவன் அவருக்கு காட்சி தந்து விமோசனம் தந்தார். மகாவிஷ்ணு தாயாரைப் பிரிந்து தனியே வந்ததால், ஸ்ரீதேவியும் மகாவிஷ்ணுவைத் தேடி இத்தலத்திற்கு வந்தாள். இவ்விருவருக்கும் சிவன் காட்சி தந்தருளினார்.

பிற்காலத்தில் நீலகண்டர் எனும் முனிவர் ஒருவர் தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் வேண்டி சிவதல யாத்திரை சென்றார். அவர் திருவண்ணாமலை செல்லும் வழியில் தென்பெண்ணை ஆற்றில் நீராடி, சிறு குன்றாக இருந்த இத்தலத்தில் அமர்ந்தார். அப்போது தூரத்தில் இருந்த திருவண்ணாமலையை தரிசித்த முனிவருக்கு, இந்த தலத்திலேயே சிவனை வழிபட வேண்டும் என ஆசை வந்தது. எனவே, சிவனை எண்ணி இவ்விடத்தில் தவம் செய்து வழிபட்டார். அவருக்காக மனம் இரங்கிய சிவன், அம்பாளுடன் காட்சி தந்து அவருக்கு சாபவிமோசனம் கொடுத்தருளினார். நீலகண்ட முனிவர் சிவனிடம், தனக்கு இவ்விடத்தில் அருளியது போல இங்கிருந்து அனைவருக்கும் அருள் புரிய வேண்டுமென வேண்டினார். அவருக்காக சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அறையணிநாதர்என்ற பெயர் பெற்றார்.

அறைஎன்றால் பாறைஎன்றும், “அணிஎன்றால் அழகுஎன்றும் பொருள். பாறை மீது அழகாக அமைந்திருப்பவர் என்பதால் சிவனுக்கு இப்பெயர் வந்தது.

இங்கு சுவாமி சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி உருத்ராட்சப் பந்தலின் கீழ் காட்சி தருகிறார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோயிலை அடைத்து, சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். சம்பந்தர் பதிகம் பாடிக் கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்ததாம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கிறது.

திருஞானசம்பந்தர் இங்கு வந்து அறையணிநாதரை வணங்கிப் பதிகம் பாடிவிட்டு, திருவண்ணாமலை செல்ல விரும்பினார். ஆனால், ஏதோ சில காரணங்களால் அவரால் திருவண்ணாமலை செல்ல முடியவில்லை. எனவே, இக்கோயிலிலேயே அண்ணாமலையாரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் இங்கிருந்தே தூரத்தில் தெரிந்த திருவண்ணாமலையாரை குறித்து பதிகம் பாடினார்.

சம்பந்தர் பிரதிஷ்டை செய்த சிவன் சன்னதி, அறையணிநாதர், அம்பாள் சன்னதிகளுக்கு இடையே தனியே இருக்கிறது. சம்பந்தர் திருவண்ணாமலையாரை வணங்கி பதிகம் பாடிய இடத்தில் ஒரு பீடத்தின் மேல் அவரது இரு பாதங்களும் இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் திருவண்ணாமலையை முழுவதுமாக பார்க்கலாம் என்பது விசேஷம். இங்கு நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரர் வலது காலை தூக்கி, காகத்தின் மீது வைத்தபடி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு அருகிலேயே மற்றொரு சனீஸ்வரர் நின்ற கோலத்தில் தனியாகவும் இருக்கிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் இவ்விரு சனீஸ்வரருக்கும் எள் படைத்து வழிபடுகின்றனர். இங்குள்ள காலபைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருவதும், துர்க்கை அம்மன் தெற்கு பார்த்தபடி இருப்பதும் வித்தியாசமான தரிசனம் ஆகும்.

அம்பாள் பொன்னழகி தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள். திருவண்ணாமலை சென்ற இரமண மகரிஷி வழியில் இக்கோயிலுக்கு வந்து, அதுல்யநாதேஸ்வரரை வணங்கி விட்டு அதன்பின்னரே திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டார். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. இங்கு சிவனுக்கு ஒப்பிலாமணீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இங்குள்ள ராஜகோபுரம் 7 நிலைகளைக் கொண்டது. தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் உள்ள மலையின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. கருவறையை சுற்றி அகழி போன்ற அமைப்பு இருக்கிறது. தல விநாயகர் வலம்புரி விநாயகராக சுயம்புவாக இருக்கிறார். பிரகாரத்தில் உள்ள முத்துக்குமாரர் ஒரு முகமும், ஆறு கரங்களுடன் காட்சி தருகிறார்.

ராமலிங்க வள்ளலார் இவரை வணங்கிப் பாடல் பாடியிருக்கிறார். சப்தமாதாக்கள் சன்னதியில் விநாயகர், ஐயப்பன் ஆகியோரும் உள்ளனர். மகாவிஷ்ணு இங்கு வழிபட்டதை குறிக்கும் விதமாக பிரகாரத்தில் கையில் பிரயோகச் சக்கரத்துடன் மகாவிஷ்ணுவும், ஸ்ரீதேவியும் இருக்கின்றனர். ஸ்ரீதேவியின் கையில் உள்ள ஒரு தண்டத்தில் பறவை ஒன்று இருப்பது போலவும், அவளுக்கு இடப்புறத்தில் ஒரு பெண்ணும், வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஒரு ஆணும் இருக்க ஸ்ரீதேவி வித்தியாசமான கோலத்தில் அமர்ந்திருக்கிறாள்.

தேவாரப்பதிகம்:

என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி உச்சியான் பின்பினாற் பிறங்கும் சடைப்பிஞ்ஞகன் பிறப்பிலி யென்று முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்திதன் தாள்களுக்கு அன்பினார் அறையணி நல்லூர் அங்கையால் தொழுவார்களே.

சம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 12வது தலம்.

திருவிழா:

வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை.

பிரார்த்தனை:

திருமண, புத்திர தோஷங்கள் நீங்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து, விசேஷ பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *