பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை
அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை, சிவபுரி போஸ்ட், அண்ணாமலை நகர், சிதம்பரம் தாலுகா, கடலூர் மாவட்டம்.
+91- 98426 24580.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பால்வண்ணநாதர் | |
அம்மன் | – | வேதநாயகி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | கொள்ளிடம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கழிப்பாலை, காரைமேடு | |
ஊர் | – | திருக்கழிப்பாலை | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும்போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி, சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து இலிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் இலிங்கத்தின்மீது பட்டு இலிங்கம் பிளந்து விடுகிறது. வருந்திய முனிவர் பிளவுபட்ட இலிங்கத்தை எடுத்துவிட்டு வேறு இலிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்தபோது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து,”முனிவரே. பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த இலிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த இலிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள்” என்றார்.
இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன், பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞான அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். காசியில் பைரவரை வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது. இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. வால்மீகி முனிவர் இங்கு வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.
இங்குள்ள நடராஜரின் சடைமுடி அள்ளிமுடிந்த கோலத்தில் உள்ளது. அருகில் சிவகாமியம்மன், தன் தோழிகளான விஜயா, சரஸ்வதியுடன் உள்ளது தனி சிறப்பாகும்.
கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜ கோபுரம். உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, விஷ்ணு, பிரம்மா, அகோர மூர்த்தி, முயலகன் மாறிய நிலையில் தெட்சிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நாயன்மார்கள், சதுரா துர்க்கை, புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
இத்தலம் முன்பு கொள்ளிட ஆற்றின் வடகரையில் கரைமேடு என்னுமிடத்தில் இருந்ததால், இத்தலத்திற்கு கழிப்பாலை என்ற பெயர் இருந்தது. கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோயில் முழுவதும் சிதலமடைந்து விட்டது. எனவே தற்போது உள்ள இடத்தில் கோயில் கட்டி, அதில் கழிப்பாலை இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள். இலிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.
தேவாரப்பதிகம் :
எங்கேனும் இருந்துன் அடியேன் உனைநினைந்தால் அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி இங்கே என்வினையை அறுத்திட்டு எனையாளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.
–சுந்தரர்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 4வது தலம்.
திருவிழா:
தைப்பூசம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.
பிரார்த்தனை:
இலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
எல்லா செயல்களிலும் வெற்றிகிடைக்க இங்குள்ள விஜய விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியில் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.
Leave a Reply