விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம் .
+91- 44 – 2432 1793
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | விஸ்வநாதர் | |
அம்மன் | – | விசாலாட்சி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | சீர்காழி | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும், அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர். பூலோகம், பாதாள லோகத்தை கைப்பற்றிய அவர்கள், இந்திரலோகத்தையும் கைப்பற்றி அங்கும் ஆட்சியமைத்தார்கள். தேவர்களின் தலைவன் இந்திரன், இந்திராணியுடன் பூலோகம் வந்து சீர்காழி என்ற புண்ணிய தலத்தில் உள்ள மூங்கில் காட்டில் தங்கி, மூங்கிலாக வடிவெடுத்து சிவபெருமானை வழிபட்டு வந்தான். இந்திர லோகத்தை மீட்டுத் தரும்படி சிவபெருமானை பகல் வேளையில் வழிபட்டனர். இரவில் யார்கண்ணிலும் படாதபடி கைவிடேலப்பரின் கையில் உள்ள தாமரை பூவிதழ்களின் நடுவே தங்கி, தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். இவர்களது கடும் தவத்திற்கு மகிழ்ந்த சிவன், சிவலோகம் வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கக் கூறினார். இந்திரன், இந்திராணியை கைவிடேலப்பரிடம் ஒப்படைத்து விட்டு சிவலோகம் சென்றான். ஆனால் கைவிடேலப்பரோ, தனது காவல் கணக்குகளை சிவனிடம் ஒப்படைப்பதற்காக சிவலோகம் வந்தடைந்தார். அப்படி வரும்முன் இந்திராணியை, தனது தளபதியிடம் ஒப்படைத்தார். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூரபத்மனின் தங்கை அஜமுகி அழகே உருவான இந்திராணியை, தன் அண்ணனுக்கு மணமுடிக்க எண்ணி, அவளைக் கவர்ந்து செல்ல முயன்றாள். மகாகாளனோ அஜமுகியிடம் சண்டையிட்டு அவளது கரத்தை வீழ்த்தி இந்திராணியை மீட்டார். அந்த அரக்கியின் கை விழுந்த காடு தான் “கைவிழுந்த சேரி.” அது தற்பொழுது,”கைவிலாஞ்சேரி” என அழைக்கப்படுகிறது. சாஸ்தா தனக்கு அளித்த பொறுப்பை ஏற்று இந்திராணியை காப்பாற்றி பேரருள் புரிந்தார். இந்த நிகழ்ச்சி நடந்த இடமாகிய சீர்காழி தென்பாதியில் சாஸ்தாவின் கோயில் உள்ளது.
கோயில் சிறியது ஆயினும் சாஸ்தா வரமளித்து காக்கும் கடவுளாக அருள்பாலிக்கிறார். இந்திராணியைக் கைவிடாது காப்பாற்றிய இடமாதலால் “கைவிடேலப்பர்” என்ற திருப்பெயர் சாஸ்தாவுக்கு ஏற்பட்டது. கோயிலின் தென்கிழக்கு மூலையில் பூரண புஷ்கலா சமேதராக கைவிடேலப்பர் அருள்பாலித்து வருகிறார்.
சீர்காழியின் தென்பாதியில், விஸ்வநாதர் கோயில் இருக்கும் பகுதியிலேயே, இந்த சாஸ்தா தன் தேவியரான பூரண, புஷ்கலையுடன் ஒரு காலை தொங்கவிட்டுக் கொண்டும், மறுகாலை குத்துக்காலிட்டும் அமர்ந்துள்ளார். இப்பகுதி மக்கள் சபரிமலை செல்லும் முன் இங்கு வந்து தரிசனம் செய்து கிளம்புகிறார்கள்.
கோயிலில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சி அம்பாளும் அருள்பாலித்து வருகிறார்கள். சுற்றுப்பிரகாரத்தில் கமல விநாயகர், தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன.
ராஜ கோபுரத்திற்கு வெளியே ஜிதேந்திரிய செல்வ ஆஞ்சநேயர், அரசமரத்து விநாயகர், இராகு, கேது சன்னதிகள் உள்ளன. சிவன் கோயிலாக இருந்தாலும் சாஸ்தாவே இங்கு பிரதானம்.
திருவிழா:
இங்கு பிரதோஷ பூஜை, பவுர்ணமி பூஜை, கார்த்திகை, சதுர்த்தி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. ஆங்கில ஆண்டின் கடைசி ஞாயிறன்று கைவிடேலப்பருக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. விசாலாட்சி அம்மன் சன்னதியில் நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கோரிக்கைகள்:
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply