வளவநாதீஸ்வரர் திருக்கோயில், வளையாத்தூர்

அருள்மிகு வளவநாதீஸ்வரர் திருக்கோயில், வளையாத்தூர், வேலூர் மாவட்டம்.

+91 99769 99793, 98436 43840

காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் அர்ச்சகரை அழைத்து வந்து சுவாமியை தரிசிக்கலாம்.

மூலவர் வளவநாதீஸ்வரர்
உற்சவர் சந்திரசேகரர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் சிவதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சிவபாதநல்லூர்
ஊர் வளையாத்தூர்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த மன்னர் ஒருவர், தீவிர சிவபக்தராக இருந்தார். மக்கள் சிறப்பாக வாழவும், விவசாய நிலம் செழித்து வளரவும் அருள்புரியும் சிவனுக்கு, தம் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். ஆனால், அவருக்கு எங்கு, எப்படி கோயில் அமைப்பதெனத் தெரியவில்லை. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய சிவன், இந்த இடத்தை குறிப்பால் உணர்த்தினர். அதன்படி, மன்னர் இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினார். இங்கு அருளும் சிவன் மக்களுக்கு வேண்டும் வளத்தை தந்தருளியதால் வளவநாதீஸ்வரர்என்றே பெயர் பெற்றார். மக்களின் பிரார்த்தனைகளுக்கேற்ப வளைந்து கொடுத்து அருள் செய்பவர் என்பதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். பல்லவர், சோழர், சம்புவராயர், நாயக்கர் மற்றும் விஜயநகரப் பேரரசர்களால் திருப்பணி செய்யப்பட்ட புராதனமான கோயில் இது.

வளவநாதீஸ்வரர் சதுர வடிவ பீடத்தில், இடப்புறமாக சற்றே வளைந்த நிலையில் காட்சியளிக்கிறார். இங்கு சிவன் ஒன்பது நிலைகளைக் கடந்து, நவாம்ச மூர்த்தியாகக் காட்சி தருவதாக ஐதீகம். இந்த ஒன்பது நிலைகளும் நவக்கிரகங்களைக் குறிப்பதாகவும் சொல்வர். இதனால், எந்த கிரகத்தால் ஏற்பட்ட தோஷத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு நிவர்த்திக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.

சிவபெருமான் சூரியன், சந்திரன், அக்னி என மூவரையும் கண்களாகக் கொண்டவர். சிவனின் சக்தி வடிவமே அம்பிகை என்பதால், அவளும் முக்கண் உடையவள் ஆகிறாள். இதை உணர்த்தும் விதமாக அம்பிகை இக்கோயிலில் நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறாள். சிவராத்திரியன்று இரவில் இவளுக்கு பூஜையும் உண்டு. பிரார்த்தனை நிறைவேற பக்தர்கள் இவளுக்கு பாலபிஷேகம் செய்வித்து வழிபடுகிறார்கள். இவளது நான்கு கைகளிலுள்ள சுண்டு விரல்களிலும் மோதிரம் அணிந்திருக்கிறாள். இங்குள்ள சந்திரசேகரர் சுண்டு விரல்கள் இரண்டிலும் மோதிரம் அணிந்தபடி காட்சி தருகிறார். சிவன் சன்னதி எதிரே வாசல் கிடையாது. கல் ஜன்னல் மட்டுமே உள்ளது. பிரதான வாசல் அம்பாள் சன்னதி எதிரே அமைந்துள்ளதால், இக்கோயிலில் நுழைந்ததும் முதலில் அம்பாளைத்தான் தரிசனம் செய்கின்றனர்.

கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். பிரகாரத்தில் சூரியன், பைரவர், விநாயகர், சண்டிகேஸ்வரர் மற்றும் நவக்கிரகங்கள் உள்ளன.

சிவன் சன்னதி முகப்பில் நின்ற விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானையுடன் சண்முகர் உள்ளனர். இந்த முருகன் கையில் சிவனுக்குரிய சின்முத்திரை காட்டியபடி இருப்பது விசேஷமான அமைப்பு. திருக்கார்த்திகையன்று கோயிலில் லட்சதீபம் ஏற்றுவர். இங்குள்ள சப்தகன்னியரின் பீடத்தில் அவர்களுக்குரிய வாகனங்கள் வடிக்கப்பட்டுள்ளது சிறப்பான அமைப்பு.

திருவிழா:

அன்னாபிஷேகம், ஆருத்ராதரிசனம், திருக்கார்த்திகை, சிவராத்திரி.

கோரிக்கை:

எந்த கிரகத்தால் ஏற்பட்ட தோஷத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி: ஆரணியிலிருந்து 13.5 கிமீ தொலைவில் உள்ளது.

2 Responses to வளவநாதீஸ்வரர் திருக்கோயில், வளையாத்தூர்

  1. இரா.பாபு says:

    இம் மாவட்டத்தில் வாழ்ந்து இருப்பினும் வளையாத்தூர் எங்கு உள்ளது என பார்க்க வேண்டியத உள்ளது. ஐயா தயவு செய்து செல்லும் வழியும் ஒரு தலைப்பில் பதிய அன்புடன் வேண்டுகிறேன். தற்பொழுது கூகுளில் பார்த்து தெரிந்து கொள்கிறேன். நன்றி

  2. ஆரணியிலிருந்து 13.5 கிமீ தொலைவில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *