தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை

அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.

+91- 98407 97878

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தெட்சிணாமூர்த்தி
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் திருவொற்றியூர்சென்னை
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு சித்தர் ஒருவர், இங்கு வேதபாடசாலை அமைத்து, மாணவர்களுக்கு வேதம் கற்பித்து வந்தார். அப்போது வேதத்தின் வடிவமாகத் திகழும் தெட்சிணாமூர்த்திக்கு, இங்கு சிலை வடித்து, கோயில் எழுப்பினார். தென் திசை கடவுளான தெட்சிணாமூர்த்தி, தெற்கு நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்கு இவர் வடக்கு நோக்கியிருப்பது, வேறெங்கும் காண முடியாத அமைப்பு. எனவே தலம், “வடகுருதலம்எனப்படுகிறது. நவக்கிரகங்களில் குரு பகவான், வடக்கு நோக்கி காட்சியளிப்பதன் அடிப்படையில் இவ்வாறு பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கிறார்கள். குபேரனின் திசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. முன்மண்டபத்தில் ஒரு பாண லிங்கம் இருக்கிறது. தெட்சிணாமூர்த்திக்கு பூஜை நடக்கும்போது, இந்த இலிங்கத்திற்கும் பூஜை செய்யப்படும்.



ஆதிசங்கரர், வேதவியாசர் இங்கு உற்சவமூர்த்திகளாக காட்சி தருகின்றனர். சித்ராபவுர்ணமியன்று வேதவியாசருக்கு விசேஷ பூஜை, வழிபாடுகள் நடக்கும். சுவாமிக்கு இடப்புறம் தனிச்சன்னதியில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் பஞ்சமுக விநாயகர் இருக்கிறார். இவரது ஐந்து முகங்களும், ஒரே திசையை நோக்கியிருப்பது வித்தியாசமான அமைப்பு. பிரகாரத்தில் அரச மரத்தின் கீழ் மற்றொரு விநாயகர் காட்சி தருகிறார்.

இக்கோயிலுக்கு மிக அருகில் தியாகராஜர் கோயில் இருக்கிறது. வியாழன்தோறும் தெட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. குருப்பெயர்ச்சியின் போது விசேஷ ஹோமம் மற்றும் சிவனுக்குரிய உயரிய மந்திரமான உருத்ர ஜெப மந்திர பூஜைகள் செய்து, விசேஷ அபிஷேகங்கள் செய்யப்படும். தெட்சிணாமூர்த்திக்கென அமைந்த தனிக்கோயில் இது. வலது கையில் அக்னி, இடக்கையில் நாகம் வைத்து, காலுக்கு கீழே முயலகனை மிதித்தபடி சுவாமி காட்சி தருகிறார். பொதுவாக தெட்சிணாமூர்த்தியின் கீழே சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்கள் மட்டுமே இருப்பர். ஆனால் இங்கு மூலவரின் பீடத்தில் 18 மகரிஷிகள் சீடர்களாக இருக்கின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். உற்சவர் தெட்சிணாமூர்த்தியின் பீடத்தில் யானை வணங்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது.

திருவிழா:

சித்ராபவுர்ணமி, குருப்பெயர்ச்சி.

பிரார்த்தனை:

வீடு கட்ட, புது நிலம் வாங்க விரும்புபவர்கள் கோயில் வளாகத்தில் கற்களை வீடு போல, அடுக்கி வைத்து வேண்டிக்கொள்கிறார்கள். கல்வி, கலை, இலக்கியம், இசை போன்ற துறைகளில் சிறப்பிடம் பெற இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை நீங்க, ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில் எலுமிச்சையில் நெய் தீபம் ஏற்றியும் வழிபடுகிறார்கள். தெட்சிணாமூர்த்தியிடம் வேண்டிக்கொள்பவர்கள் கொண்டைக் கடலை மாலை அணிவித்து, சன்னதி முன்பு நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமியிடம் வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பால், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, மஞ்சள் ஆடை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அத்துடன் அதிகளவில் கேசரி, பூந்தி போன்ற இனிப்பு வகைகளைப் படைக்கிறார்கள்.

இருப்பிடம் :

சென்னையின் எந்த பகுதியிலிருந்தும் எளிதில் திருவொற்றியூர் வந்து விடலாம். சென்னை சென்ட்ரலில் இருந்து எலக்ட்ரிக் ட்ரெயினில் பீச் ஸ்டேஷன் வந்து, அங்கிருந்து வேறு பஸ்சில் 12 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *