தீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில், நெடுங்குணம்

அருள்மிகு தீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில், நெடுங்குணம், திருவண்ணாமலை மாவட்டம்.

காலை6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தீர்க்காஜலேஸ்வரர்
உற்சவர் தீர்க்காஜலேஸ்வரர்
அம்மன் பாலாம்பிகை
தீர்த்தம் கிணற்று நீர்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் நெடுங்குணம்
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

சுகபிரம்ம முனிவர் தவம் செய்ய ஒரு மலையைத் தேர்ந்தெடுத்தார். அந்த மலை சிவசொருபமாகவே காட்சி தந்ததை கண்டு மெய்சிலிர்த்தார். சிவனை எண்ணி, கடும் தவத்தில் மூழ்கினார். முன்னதாக விஷ வண்டுகளோ பூச்சிகளோ தாக்காமல் இருக்க தான் அமர்ந்திருக்கும் இடத்தை சுற்றி அரண் அமைக்கவும், தண்ணீரால் சுத்தம் செய்யவும் எண்ணினார். மலை முழுவதும் சுற்றியும் தண்ணீர் கிடைக்க வில்லை. இறைவனை நோக்கி மனம் உருகிப் பிரார்த்தித்தார். அங்கே தண்ணீர் மெல்ல ஊற்றெடுத்தது. அந்த நீரை எடுத்துப்பருகினார். சிவலிங்கம் ஒன்றைப் பிரதீஷ்டை செய்து அதனை அபிஷேகித்தார். ஈசனை வணங்கிவிட்டு கடும் தவத்தில் மூழ்கினார். இதில் மகிழ்ந்த சிவபெருமான் தம்பதி சமேதராகக் முனிவருக்கு காட்சி தந்தார். தனது மனக்குறையை தீர்த்து வைத்த சிவபெருமானை வணங்கி தொழுதார் சுகபிரம்மர். காலங்கள் கழிந்தன. சோழமன்னன் ஒருவன் இந்த வழியாக வந்த போது மலையைக்கண்டான். மலைமீது முனிவர்கள் பலர் சிவபூஜையில் இருப்பதைக் கண்டான். அவர்களை வணங்கி இந்தமலையின் மாண்பும், சுகபிரம்மருக்கு ஈசன் காட்சி தந்தது குறித்தும் அறிந்தான். மகிழ்ந்த சோழ மன்னன் மலையடிவாரத்தில் கோயில் எழுப்பினால், ஊர்மக்கள் வணங்கிட வசதியாக இருக்கும் என்ற எண்ணம் கொண்டு, அப்படியே கோயில் எழுப்பினான். இறைவனுக்கு தீர்க்காஜலேஸ்வரர்என்னும் திருநாமமும் சூட்டி மகிழ்ந்தான்.

இங்கு அருள்பாலிக்கும் சப்தகன்னியரும் சக்தி மிகுந்தவர்கள். இவர்களின் விக்கிரகத் திருமேனிகள், பிரமாண்டமாக வடிக்கப்பட்டுள்ளன. ஊரில் பருவம் தப்பி மழை பொய்த்துப் போனால், விவசாயிகள் திரளாக வந்து சப்தகன்னியருக்கு அபிசேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்தால் அந்த வருடம் மழை பொழியும், விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் பாதாள இலிங்கேஸ்வரரின் சன்னதி ஒன்று உள்ளது. முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட இந்த இலிங்க மூர்த்தியை வழிபட்டால் தீராத நோய்கள் யாவும் தீரும் என்பது ஐதீகம். இங்கே அழகு கொஞ்சும் சுப்பிரமணியரின் விக்கிரகத் திருமேனியையும், பிராகாரத்தில் அஷ்டலிங்கங்களையும் தரிசிக்கலாம்.

திருவிழா:

பங்குனித் திருவிழா மற்றும் ஆடிக்கிருத்திகையில் தெப்பத்திருவிழாவும் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.

கோரிக்கைகள்:

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கல்வி மற்றும் கலையில் மந்த நிலையில் இருப்பவர்கள் மற்றும் தோஷங்கள் விலகவும் ஞானம் பெறவும் வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேற தீபம் ஏற்றியும் இங்குள்ள அம்மனுக்கு பாலபிசேகம் செய்தும் வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *