தான்தோன்றீஸ்வரர் கோயில், இலுப்பைக்குடி
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் கோயில், இலுப்பைக்குடி, அரியக்குடி போஸ்ட், சிவகங்கை மாவட்டம்.
+91- 4561 – 221 810, 94420 43493
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தான்தோன்றீஸ்வரர் | |
அம்மன் | – | சவுந்தர்யநாயகி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | பைரவர் தெப்பம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | இலுப்பை வனம் | |
ஊர் | – | இலுப்பைக்குடி | |
மாவட்டம் | – | சிவகங்கை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார். மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்று தங்கம் தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு, “சுயம்பிரகாசேஸ்வரர்” என்றும், “தான்தோன்றீஸ்வரர்” என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
இத்தலத்து பைரவர், “ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்” என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடதுபுறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது.
பைரவர் சன்னதியின் கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விசேஷ யாகம் நடக்கிறது. அப்போது 16 கலசம் வைத்து பூஜித்து, அந்த புனித நீரால் சிவன், அம்பாள், பைரவருக்கு அபிஷேகமும், கோமாதா பூஜையும் நடக்கிறது.
தான்தோன்றீஸ்வரர், சிறிய அளவிலேயே இருக்கிறார். அம்பாள் சவுந்தர்ய நாயகி சிலை திருவாசியுடன் இணைத்து அமைக்கப்பட்டிருக்கிறது.
பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட “நாய்க்கடி பலகை” இருக்கிறது. நாய்க்கடி பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போது கொங்கணர் புறப்பாடாகிறார். இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த தலமென்பதால், “இலுப்பைக்குடி” என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.
தலவிநாயகரின் திருநாமம் வரசித்தி விநாயகர்.
நடராஜர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பெருமாள், மகாலட்சுமி, முருகன், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன. சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள “குட்டி விநாயகர்” சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம். அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராகி சிற்பம் இருக்கிறது.
திருவிழா:
சித்திரையில் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம்.
கோரிக்கைகள்:
குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமண, புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்க இங்குள்ள பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். திருமணத்தடையுள்ள பெண்கள் வாராகிக்கு சந்தனக்காப்பு செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சிவன், அம்பாளுக்கு புத்தாடை அணிவித்தும், பைரவருக்கு வடை மாலை அணிவித்தும் விசேஷ பூஜை செய்தும் வேண்டிக்கொள்கிறார்கள். தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்கியவர்கள் பைரவர் சன்னதியில் தேங்காயில் நெய் தீபம் ஏற்றியும், வடை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
Leave a Reply