சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில், சதுரகிரி
அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில், சதுரகிரி, மதுரை மாவட்டம்.
+91- 98436 37301, 96268 32131
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுந்தரமகாலிங்க சுவாமி | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | சதுரகிரி | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி சுயமாகத் தோன்றிய இலிங்கம். சதுரகிரி மலை மீது பச்சைமால் என்பவர் பசு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பசுக்களின் பாலை விற்பனை செய்து வந்தார். அதில் ஒரு பசு மட்டும் பால் கொடுப்பதில்லை. இவ்வாறு பல நாட்கள் கொடுக்காததைக் கண்டு பச்சைமால் காரணம் புரியாமல் சிந்தித்துக் கொண்டிருந்தார். பசுக்கள் காலையில் மேய்ந்துவிட்டு மாலையில் கொட்டிலுக்கு வரும்போது பால் கொடுக்காத ஒரு பசு மட்டும், ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் நின்று தன்மடிப்பாலை சொரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பச்சைமால் தன்கையில் வைத்திருந்த கம்பால் பசுவை அடித்தார். அப்பொழுது பசுமாடு விலகி ஒடிவிட்டது. அந்த பால் சொரிந்த இடத்தில் சிவபெருமான் அடியார் கோலத்தில் தலையில் இரத்தம் வடிய நின்றார். இதைப்பார்த்த பச்சைமால் அதிர்ச்சியடைந்து அடியாரை வணங்கி மன்னிப்பு கேட்டு இரத்தம் வடிந்த இடத்தில் அருகிலிருந்த செடியின் இலையைப் பிடுங்கி வைத்து கட்டினார். உடனே இரத்தம் நின்று வடுவும் தெரிந்தது. அடியார் வடிவத்தில் வந்த சிவன்,”யாம் இங்கே தங்கியிருக்க விரும்புகிறோம். எனவே இங்கே கோயில் கட்டி வழிபாடு செய்யுங்கள். அவ்வாறு செய்து வந்தால் அனைவருக்கும் வேண்டிய பலன் கிடைக்கும்” என்று கூறிவிட்டு இலிங்கமாகி மறைந்துவிட்டார்.
இதை பச்சைமால் இப்பகுதி பெரியவர்களிடம் கூறி கோயில் உருவாக்கி வழிபாடு செய்து வந்தனர். பின் கோரக்கர் சித்தர் போன்ற பல சித்தர்கள் இங்கே தங்கி, பல சித்துக்கள் செய்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு தங்கிய சித்தர்களின் பெயர்களால் அந்தந்த இடங்கள் அவர் பெயர்களாலேயே இன்றும் வழங்கப்படுகிறது.
இம்மலையில் எல்லாவித மூலிகைகளும், மரங்களும், விலங்கினங்களும், பறக்கும் பாம்பு முதல் அனைத்துப் பறவையினங்களும் வாழ்கின்றன. சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கசுவாமி கோயில், சுந்தரமூர்த்தி கோயில், ஆனந்தவல்லியம்மன் கோயில், பலாவடிக் கருப்பணசுவாமி கோயில் மற்றும் சந்தனமகாலிங்க சுவாமி கோயில்களும் உள்ளன.
திசைக்கு நான்கு கிரிகள் (மலைகள்) வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. இம்மலை மதுரையையும், சாப்டூரையும், விருதுநகரையும் இணைத்தும் உள்ளது. இக்கோயிலுக்கு சாப்டூர் வழியாகவும், வத்திராயிருப்பு வழியாகவும் பாதைகள் உள்ளன. ஆடி அமாவாசை திருவிழாவின் போது ஜெனரேட்டர் மூலம் மின்விளக்கு வசதி செய்கிறார்கள். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக, சற்று சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்
திருவிழா:
ஆடி அமாவாசை திருவிழா, நவராத்திரி, சிவராத்திரி ஆகிய நாட்களிலும் மற்றும் தை அமாவாசை, மார்கழி மாதம், இதர அமாவாசை, பவுர்ணமி நாட்கள்.
கோரிக்கைகள்:
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இங்குள்ள மலை மூலிகைகளும் அருவி நீரும் நோய்களை தீர்க்கவல்லவை.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply