சோலிங்கசுவாமி திருக்கோயில், சோமலிங்கபுரம்
அருள்மிகு சோலிங்கசுவாமி திருக்கோயில், சோமலிங்கபுரம், கன்னிவாடி, திண்டுக்கல் மாவட்டம்.
+91 99769 62536
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சோலிங்கசுவாமி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | வேதி தீர்த்தம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | சோமலிங்கபுரம் | |
மாவட்டம் | – | திண்டுக்கல் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சித்தர்களான மெய்கண்டர், குண்டலி சித்தர், வாழையானந்தர், முத்தானந்தர் ஆகியோர் தங்களுக்கு சிவனருள் கிடைக்கவும், சித்துக்கள் கைகூடவும் மலைப்பகுதியில் தவமிருக்க ஆயத்தமாயினர். இதற்காக இங்கு வந்தவர்கள், மலையில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தனர். அவர்களுக்கு அருளிய சிவன் இங்கேயே எழுந்தருளினார். இவருக்கு சோமலிங்கசுவாமி என்ற பெயர் ஏற்பட்டது.
அரிகேசபர்வதம் என்னும் மலையின் அடிவாரத்தில் அமைந்த கோயில் இது. சிவலிங்கம் போன்று அமைந்த குன்றுக்கு, ஆதிசேஷன் என்னும் நாகம் குடை பிடிப்பது போல அமைந்த மலை இது. பாறையை ஒட்டி சிறிய சன்னதியில் சிவன் காட்சி தருகிறார். பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடக்கும். கோயிலுக்கு அருகில் அகத்தியர் உருவாக்கியதாகக் கருதப்படும் வேதி தீர்த்தம் உள்ளது. பல மூலிகைகள் கலந்த அற்புத தீர்த்தம் இது. வயிற்று வலி, தீராத நோயால் அவதிப்படுவோர் நிவர்த்திக்காக இந்த தீர்த்தத்தை சிறிது குடித்துவிட்டுச் செல்கின்றனர்.
சோமலிங்கசுவாமி சன்னதிக்குப் பின்புறம், மெய்கண்டார் தவம் செய்த குகை உள்ளது. பாறையில் இயற்கையாக அமைந்த இக்குகை, பார்ப்பதற்கு தீபத்தின் ஒளி சுடர்விட்டு பிரகாசிப்பதைப் போல அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் மனம் ஒரு நிலைப்படவும், சிவன், சித்தர்களின் அருள் கிடைக்கவும் இதற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்து செல்கின்றனர். மற்ற மூன்று சித்தர்கள் தவம் புரிந்த குகைகள், இந்த மலையின் உச்சிப்பகுதியில் வேறுவேறு இடங்களில் உள்ளது. பழநியில் முருகனுக்கு நவபாஷாண சிலை வடித்த போகர் சித்தரும் இம்மலையில் தவம் செய்துள்ளார். ஒருசமயம் அவர் கவுரி பூஜை செய்வதற்காக, தமக்கு அனைத்து அங்கலட்சணங்களும் பொருந்திய பெண் வேண்டுன்றார். அத்தகைய பெண்ணைத் தேடிச்சென்ற கொங்கணர் மற்றும் கருவூரார் சித்தருக்கு சர்வ இலட்சணங்களும் பொருந்திய பெண் கிடைக்க வில்லை. எனவே, அவர்கள் தந்திரமாக போகர் விரும்பியபடி ஒரு கல்லில் சிலை வடித்து, அதற்கு உயிர் கொடுத்து அவரிடம் அழைத்துச் சென்றனர். நடந்ததை தன் ஞானதிருஷ்டியில் அறிந்த போகர், அப்பெண்ணைப் பார்த்து “கல் நீ வாடி” என அழைத்தார். கொங்கணரும், கருவூராரும் தங்களை மன்னிக்கும்படி வேண்ட, போகர் அவர்களை மன்னித்தருளினார். இவ்வாறு, போகர் அப்பெண்ணை அழைத்ததால் “கல்நீவாடி” என்றே அழைக்கப்பட்ட ஊர், பிற்காலத்தில் “கன்னிவாடி” என மருவியது. இந்த தகவல் ஜலத்திரட்டு என்னும் புராதனமான நூலில் கூறப்பட்டுள்ளது.
அம்பாள் மற்றும் பிற பரிவார மூர்த்திகள் கிடையாது. கோயில் வளாகத்தில் வேம்பு, வில்வ மரத்தடியில் விநாயகர் மட்டும் இருக்கிறார். இவருக்கு எதிரே தந்தைக்குரிய நந்தி வாகனம் இருப்பது விசேஷமான அமைப்பு.
திருவிழா:
சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, பிரதோஷம்.
கோரிக்கைகள்:
திருமணத்தடை, மாங்கல்ய தோஷம், பூர்வஜென்ம தோஷம் நீங்க இங்கு வேண்டிச் செல்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply