சிவந்தியப்பர் திருக்கோயில், விக்கிரமசிங்கபுரம்

அருள்மிகு சிவந்தியப்பர் திருக்கோயில், விக்கிரமசிங்கபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 223 457

காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் சிவந்தியப்பர்
அம்மன் வழியடிமைகொண்டநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் வாணதீர்த்தம் (பாணதீர்த்தம்)
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் விக்கிரமசிங்கபுரம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

சிவந்தியப்பர் என்ற சிற்றரசர் இப்பகுதியை ஆட்சி செய்தார். சிவபக்தரான அரசர், தன் நிர்வாகம் திறம்பட இருக்கவும், மக்களின் வாழ்க்கை சிறக்கவும் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் சிவனுக்கு கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். இவ்விடத்தில் சிவலிங்கம் நிறுவி, கோயில் எழுப்பினார். சிவனுக்கு மன்னன் பெயரான சிவந்தியப்பர்என்ற பெயர் சூட்டப்பட்டது. இங்கு அருளும் சிவந்தியப்பர், அரசர் போல இருந்து மக்களைக் காத்தருளுகிறார். எனவே, அரசருக்குச்செய்யும் மரியாதை போல, சிவலிங்கத்தின் மீது தலைப்பாகை சூட்டி அலங்கரிக்கின்றனர். அம்பாள் வழியடிமை கொண்ட நாயகி தனியே தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

பொதுவாக தெட்சிணாமூர்த்தி இடது கையில் ஏடு அல்லது அக்னியை ஏந்தியபடிதான் காட்சி தருவார். இத்தலத்தில் இவர் தன் இடக்கையை, காலுக்கு கீழ் இருக்கும் நாகத்தின் தலை மீது வைத்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். நாகதோஷம் உள்ளவர்கள், இவரிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

தெற்கு நோக்கிய சன்னதியில் காட்சி தரும் அம்பிகைக்கு, “வழியடிமை கொண்ட நாயகிஎன்று பெயர். இவளை பற்றிக்கொண்டால், வாழும் காலம் சிறப்பாக இருக்கவும், வாழ்க்கைக்குப்பின் மீண்டும் பிறப்பற்ற முக்தி நிலை அடையவும் வழிகாட்டியாக இருப்பாள். எனவே, இவளுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. “மார்க்க சம்ரக்ஷணிஎன்றும் இவளை அழைப்பர்.

சிவன் சன்னதி நுழைவு வாயிலில் பைரவர், அதிகார நந்தி இருவரும் எதிரெதிரே உள்ளனர். பிரகாரத்தில் ஆறுமுக நயினார் (முருகன்) இருக்கிறார். இவருடன் உள்ள வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்பது விசேஷ அம்சம்.

திருவிழா:

புரட்டாசியில் பிரம்மோற்ஸவம், ஐப்பசியில் திருக்கல்யாணம்.

கோரிக்கைகள்:

வாழும் காலம் சிறப்பாக இருக்கவும், வாழ்க்கைக்குப்பின் மீண்டும் பிறப்பற்ற முக்தி நிலை அடையவும் வழிபடுகின்றனர். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு சிவனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, வில்வ இலையால் அருச்சித்து, பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *