நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) திருக்கோயில், செப்பறை
அருள்மிகு நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) திருக்கோயில், செப்பறை, திருநெல்வேலி மாவட்டம்.
+91-4622-339 910
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நெல்லையப்பர் | |
அம்மன் | – | காந்திமதி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | செப்பறை | |
மாவட்டம் | – | திருநெல்வேலி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தாமிரபரணியின் வடகரையில் ராஜவல்லிபுரம் கிராமம் உள்ளது. இவ்வூரிலேயே மன்னர் இராமபாண்டியனின் அரண்மனை இருந்தது. இவர் தினமும் திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகே சாப்பிடுவார். ஒருமுறை தாமிரபரணியில் பெரும் வெள்ளம் வந்துவிட்டதால் அவரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. அன்று முழுவதும் இராமபாண்டியன் பட்டினியாக இருந்தார். அன்று இரவில் மன்னர் கனவில் நெல்லையப்பர் தோன்றி, “இனிமேல் உன் மாளிகையின் அருகிலேயே நான் கோயில் கொள்ள முடிவு செய்துள்ளேன். சிதம்பரத்திலிருந்து ஒருவன் எனது நடனமாடும் வடிவுடைய விக்ரகத்துடன் வருவான். அந்த விக்ரகத்தை உன் மாளிகையின் அருகில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டு. கோயில் கட்டுமிடத்தின் அருகிலுள்ள குழிக்குள் எறும்புகள் ஊர்ந்துசெல்லும். அந்த இடத்தில் இலிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்துவிடு” எனக் கூறி மறைந்தார். அதன்படியே, சிற்பி ஒருவர் நடராஜரின் விக்ரகம் ஒன்றை சுமந்து வந்தார். வழியில் ஓரிடத்தில் சிலை கனத்தது. அதற்குமேல் அவரால் சிலையை சுமக்க முடியவில்லை. சிலையை அவர் செப்பறை என்ற இடத்தில் வைத்துவிட்டு, களைப்பினால் தூங்கி விட்டார். கண்விழித்து பார்த்தபோது சிலையைக் காணவில்லை. அவர் பதைபதைத்து மன்னனிடம் முறையிட்டார். இராமபாண்டியன் அதிர்ச்சி யடைந்து சிலையை தேடிச்சென்றார். வேணுவனத்தில் ஓரிடத்தில் சலங்கை ஒலியும், யாரோ நடனமாடும் சப்தமும் கேட்டது. அந்த இடத்தில் மன்னர் சென்று பார்த்தபோது, நடராஜரின் சிலை இருந்ததைக் கண்டார். அதன் பக்கத்திலேயே ஒரு குழியில் எறும்புகள் ஊர்ந்து சென்று மறைந்து கொண்டிருந்தன. இராமபாண்டியன் மகிழ்வடைந்து இலிங்கம் ஒன்றை எறும்புகள் ஊர்ந்த குழியின் மீது பிரதிஷ்டை செய்தார். நடராஜருக்கும் தனி சன்னதி அமைத்தார். அவர் கட்டிய கோயில் வெள்ளத்தால் அழிந்துவிட்டது. அதன்பிறகு ஆரை அழகப்ப முதலியார் என்பவர் இப்போதுள்ள கோயிலைக் கட்டினார்.
வீரபாண்டியன் என்ற மன்னன் இராமபாண்டியனின் எல்கைக்குட்பட்ட சிற்றரசன். செப்பறையில் இருந்த நடராஜர் சிலையை அவன் கண்டான். அதேபோல தனக்கும் இரண்டு சிலைகள் வேண்டும் என சிற்பியிடம் கூறினான். சிலை செய்யும் பணி துவங்கியது. இதில் ஒன்றைக் கட்டாரிமங்கலத்தில் உள்ள கோயிலிலும், மற்றொன்றை கரிசூழ்ந்தமங்கலம் கோயிலிலும் வைக்க எண்ணினான். சிலை செய்யும் பணி முடிந்தது. சிலைகளின் அழகைக் கண்டு மன்னன் ஆனந்தம் கொண்டான். இதே போல சிலைகள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் சிற்பியைக் கொன்றுவிடும்படி காவலாளிகளுக்கு கட்டளையிட்டான். வீரர்கள் சிற்பியின் மீது இரக்கம் கொண்டு அவரது கையை மட்டும் வெட்டிவிட்டனர். இதைக் கேள்விப்பட்ட இராமபாண்டியன், வீரபாண்டியன் மீது கோபம் கொண்டான். சிற்பியின் கையை வெட்டிய வீரபாண்டியனின் கைகளைத் துண்டித்தான். இவ்வாறு செய்யப்பட்ட இரண்டு சிலைகளும் கட்டாரிமங்கலம் மற்றும் கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ள சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதன் பிறகு சிற்பிக்கு மரக்கை பொருத்தப்பட்டது. கலையார்வம் மிக்க சிற்பி, மரக்கைகளின் உதவியுடன், முன்னை விட அழகாக மற்றொரு சிலை செய்தார். அந்தச்சிலையின் அழகைப் பார்த்து அதன் கன்னத்தில் கிள்ளினான். அவ்வாறு கிள்ளிய வடுவுடன் கூடிய சிலை கருவேலங்குளம் கோயிலில் வைக்கப்பட்டது.
சிதம்பரம் நடராஜருக்கு சோழநாட்டு சிற்பியான நமச்சிவாயமுத்து சிற்பி சிலை செய்தார். அவ்வூரை ஆண்ட சிங்கவர்மன் என்ற மன்னன் அச்சிலையைக் கண்டு வியப்படைந்தான். அது தாமிரச் சிலையாக இருந்தது. இதே சிலையை தங்கத்தில் வடித்தால் மிகவும் சிறப்பாக இருக்குமே என எண்ணியவன், முதலில் செய்த சிலையை பிரதிஷ்டை செய்யாமல் தங்கத்தால் சிலை செய்ய உத்தரவிட்டான். ஆனால், அந்த சிலையும் தாமிரமாகவே மாறிவிட்டது. சிவன் அவன் கனவில் தோன்றி, “நான் உன் கண்ணுக்கு மட்டுமே தங்கமாகத் தெரிவேன். மற்றவர்கள் கண்ணுக்கு தாமிரமாகவே தெரிவேன். இதுவே என் விருப்பம்” எனக்கூறி மறைந்தார். எனவே, இரண்டாவது செய்த சிலையையே சிங்கவர்மன் சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்தான். முதலில் செய்த சிலையை இறைவனின் கட்டளைப்படி சிற்பி ஒருவனிடம் கொடுத்துவிட்டான். அவனது கனவில் தோன்றிய சிவன், “இந்தச் சிலையை சுமந்துகொண்டு தெற்கு நோக்கிச் செல்” எனக்கூறி மறைந்தார். அந்த சிலையே இந்தக் கோயிலில் உள்ளது. இதன்படி முதன்முதலாகச் செய்யப்பட்ட நடராஜர் சிலை செப்பறைக்கு வந்து சேர்ந்தது குறிப்பிடத் தக்கது. இங்கு திருவாதிரைத் திருவிழா மிக விசேஷமாக நடக்கும்.
சிதம்பரம் நடராஜர் சிலை எப்படி இருக்கிறதோ, அதற்கு சற்றும் மாறாமல் நான்கு சிலைகள் அக்காலத்தில் வடிவமைக்கப்பட்டன. அந்த சிலைகளை காண வேண்டுமானால், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கட்டாரிமங்கலம் கோயில்களுக்கு செல்ல வேண்டும். இதில் செப்பறை கோயில் சிலையே உலகின் முதல் நடராஜர் சிலையாக கருதப்படுகிறது.
திருவிழா: மகாசிவராத்திரி
வேண்டுகோள்:
திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சைவப் பெருமக்களில் பலர் நெல்லையப்பர் கோவிலைத்தான் தாமிரசபை என்று அழைக்கின்றனர். ஆனால், சிலர்,இராஜவல்லிபுரத்தில்தான் செப்பறை=தாமிரசபை உள்ளதென்று கூறுகின்றனர். எது சரி என்பதைக் கூற இயலுமா ? தங்கள் முயற்சி பாராட்டத்தக்கது.
பலர் நெல்லையப்பர் கோவிலைத்தான் தாமிரசபை என்று அழைக்கின்றனர்.
தாங்கள் குறிப்பிடும் செப்பறையை அடைய திருநெல்வேலியிலிருந்து 18 கிலோ மீட்டர் தூரமுள்ள இராஜவல்லிபுரம் வரை பயணித்தபின்னர் மேலும் 3 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். ஐந்து சபைகளுள் முதலாவதான செப்பறைதான் தாமிரசபையாகும். நெல்லையில் நடராஜர் ஆனந்தக்கூத்தாடுகின்றார். இரு தாமிரசபைகளுள் இரண்டாவதாக வேண்டுமாயின், நெல்லையப்பர் கோவிலில் உள்ள நடராஜர் எழுந்தருளியுள்ள சபையைக் கருதலாம். இதுதான் உண்மை. முழு விபரங்களைச் சேகரித்து வருகின்றோம். 30-05-2013 காலை ஆறு மணியிலிருந்து 9.30 மணிவரை இதன் பொருட்டே செலவிட்டோம். நெல்லையப்பர் கோவிலில் செப்பறை குறித்த அறிவிப்புப் பலகை ஒன்று வைக்க முயற்சிக்க வேண்டும். செப்பறையில் மாதந்தோறும் வரும் திருவாதிரை நட்சத்திரத்தின்போது சிறப்பு பூஜை தவறாமல் செய்யப்படுகின்றது. முழு விபரம் விரைவில் எமது வலைப்பூவில்.
மிக்க நன்றி