முக்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் முக்தீஸ்வரர்
தீர்த்தம் சிவதீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

காஞ்சியில் ஏகாலியர் குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்பு தொண்டர். இவர் சிவனடியார்களின் குறிப்பறிந்து செயல்பட்டதால் இந்த பெயர் வந்தது. “அடியார்களது ஆடைகளின் மாசு கழிப்பதாலே தம்முடைய பிறப்பின் மாசு கழியும்என்ற தத்துவத்தை இவர் உணர்ந்தார். சலவைத்தொழிலில் இப்பேர்ப்பட்ட தத்துவம் உள்ளது.

தங்கள் ஊருக்கு வரும் சிவனடியார்களின் துணிகளை வெளுத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். இவரது பெருமையை இறைவன் உலகறிய செய்ய விரும்பினார். ஒரு நாள் சிவன் கிழிந்த உடையை உடுத்தி கொண்டு விபூதி பூசிய உடலுடன் குளிரில் நடுங்கிக் கொண்டே திருக்குறிப்பு தொண்டரின் இல்லத்திற்கு வந்தார். அவரை வரவேற்று உபசரித்த திருக்குறிப்பு தொண்டர், சிவனடியாரின் அழுக்கடைந்த கந்தல் துணியையும், மெலிந்த உடலையும் கண்டு வருத்தமடைந்து, உடல் இளைத்திருக்க காரணம் கேட்டார். இறைவன் சிரித்தார்.

அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத திருக்குறிப்பு தொண்டர்,”ஐயா! நான் சிவனடியார்களின் ஆடைகளை சுத்தம் செய்து கொடுத்து விட்டுத்தான், மற்றவர்களின் ஆடையை துவைப்பேன். எனவே தாங்கள் தங்களது உடையைக் கொடுத்தால் உடனே சுத்தம் செய்து கொடுத்து விடுகிறேன்எனப் பணிவோடு கேட்டார். “இந்த குளிரில் இருக்கும் ஒரு ஆடையையும் உன்னிடம் கொடுத்து விட்டால் என்பாடு திண்டாட்டமாகி விடுமேஎன்றார் சிவன். திருக்குறிப்பு தொண்டர்,”ஐயா! அப்படிச் சொல்லாதீர்கள். விரைவாகத் துணியைக் காய வைத்துத் தருகிறேன்என்றார். “இன்று மாலை பொழுது சாய்வதற்குள் துணியை வெண்மையாக்கி என்னிடம் தந்து விட வேண்டும்எனக் கூறி துணியைக் கொடுத்தார் சிவன். பின்பு வருணபகவானை அழைத்து புயலும், மழையுமாய் வீசச் சொன்னார். தொண்டர் கலங்கி விட்டார். மழை நின்றபாடில்லை. மாலையும் நெருங்கி விட்டது. சிவனடியாருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போனதே என்று வருந்திய தொண்டர், கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் வாழ்வதா என நினைத்து, துவைக்கும் கல்லில் தலை மோதி உயிர்விடத் தயாரானார். அதற்கு மேலும் சோதிக்க விரும்பாத இறைவன், துவைக்கும் கல்லில் இருந்து தன் கையை நீட்டித் தொண்டரின் தலை மோதாமல் தடுத்தார். இதைக்கண்டு அதிசயித்தார் தொண்டர். அப்போது வானத்தில் பேரொளி பிறந்தது. இறைவன் அடியவரை நோக்கி,”உன் பெருமையை இந்த உலகுக்கு உணர்த்தவே நாம் இவ்வாறு செய்தோம். இனி கயிலை வந்து எம்முடன் இருப்பீராகஎனக் கூறி மறைந்தார். திருக்குறிப்பு தொண்டரும் பகவானின் திருவடியை அடைந்தார். இந்த வரலாறு நடந்த திருத்தலம்தான் முக்தீஸவரர் திருக்கோயில். சன்னதிக்கு நேர் எதிரே நுழைவு வாயிலில் சுதை வடிவில் இந்த வரலாறு காட்டப்பட்டுள்ளது. சனிபகவானும், சூரியனும் இறைவனை வணங்கியபடி உள்ளனர்.

கிழக்கு நோக்கியுள்ள இத்தலத்தில் இறைவன் சுவர்ண ரேகையுடன் உள்ளார். எனவே இவரை வணங்குவோருக்கு ஏராளமான செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கை.

கருடன் தன்னை வருத்திய கத்துருவின் புதல்வர்களாகிய பாம்புகளை கொல்ல, இந்த சிவனை வழிபட்டு, பலன் பெற்றதாக கூறுவர்.

திருவிழா:

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை

வேண்டுகோள்:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *